மகேந்திரன் சார், ஒரு கலைப் பொக்கிஷம்!! நடிகை ரேவதி!!

இயக்குநர் மகேந்திரனின் மறைவு, தமிழ்த் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருடன் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்கிறார், நடிகை ரேவதி.

``நடிகையா என் சினிமா பயணத்துக்கு அஸ்திவாரம் போட்டது பாரதிராஜா, பரதன், பாபு, மகேந்திரன் ஆகிய நான்கு இயக்குநர்கள்தான். அவங்க வகுத்துக்கொடுத்த பாதையிலதான் இப்போவரை பயணிச்சுகிட்டு இருக்கேன். அதனால் யதார்த்தமாகவும், எமோஷனலாகவும், லைவ்லியாகவும், காமெடியாகவும் என்னால நடிக்க முடியுது. என்னோட நாலாவது படம், `கை கொடுக்கும் கை'. அதில் பார்வையற்றப் பெண்ணாக சவாலான வேடத்துல நடிச்சேன். அப்போ நான் ரொம்பச் சின்னப் பொண்ணு. காலேஜ் படிக்கிற பொண்ணு மாதிரி ஜாலியா ஷூட்டிங் போவேன். மகேந்திரன் சார் சொல்லிக் கொடுத்ததை உள்வாங்கி அப்படியே நடிச்சேன். மத்தபடி அப்போ எனக்கு எதுவும் தெரியாது. படம் ஹிட். பிறகு அவர் இயக்கத்தில் நடிக்கவும், அவரைச் சந்திச்சுப் பேசுறதுக்கான வாய்ப்பும் அமையலை. ஆனா, அவர்கூட ஒரு படத்துல பணியாற்றிய அனுபவம், இப்போ வரை எனக்கு உதவியா இருக்கு.

இந்த நிலையில சன் டிவியில் 1997-ம் ஆண்டு, நாங்க ஒரு சீரியல் தயாரிச்சோம். `கதைக் கதையாம் காரணமாம்'ங்கிற சீரியல் தொகுப்பில், அவர் ஒரு கதையை எழுதி, இயக்கினார். நான் அந்த சீரியலில் நடிச்சதோடு, அவர்கிட்ட உதவி இயக்குநராகவும் வேலை செஞ்சேன். அது அற்புதமான தருணம். மகேந்திரன் சார், தன் மனதுக்கு மட்டும்தான் கட்டுப்பட்டுச் செயல்படுவார். இயக்குநரா தான் நினைக்கிற படைப்பை, தன் எண்ணப்படியே சிறப்பா இயக்குவார். ஒருபோதும் வர்த்தகம், ஹீரோ, ஹீரோயின், தியேட்டர், விநியோகஸ்தர், தயாரிப்பாளர்னு யாருக்காகவும் தன்னைச் சமரசம் பண்ணிக்கமாட்டார். ஆனா, அவங்க எல்லோருக்கும் திருப்திகிடைக்கிற மாதிரி படத்தை இயக்குவார். மகேந்திரன் சார், ஒரு கலைப் பொக்கிஷம். அவர் போல வேறு எந்த இயக்குநரையும் ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. அவர் ஆன்மா சாந்தியடைய இறைவனை மனதார வேண்டுறேன்" என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் ரேவதி.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

Powered by Blogger.