மனம் நெகிழும் திவ்யா மாரி செல்வராஜ்!!

காத்திருப்புக்கு எல்லாம் ஒட்டுமொத்த பலனா இப்ப அவங்க சந்தோசமா இருக்கிறத பாக்குறப்போ, அதெல்லாம் ஒண்ணுமேயில்லைனு தோணுது. நவி பாப்பா பொறந்தப்பகூட அவங்க இவ்ளோ சந்தோசமா இல்ல. எப்படி பாத்தாலும் ரெண்டும் அவங்க குழந்தைங்கதான்!


சொல்ல வேண்டிய கருத்துகளை நச்சென்று சொல்லி வெள்ளித்திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் 'பரியேறும் பெருமாள்'. அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் மாரி செல்வராஜ். இதுதான் அவருக்கு முதல் படம். பிறந்து 65 நாள்களே ஆன தன் மகளோடு தன் கணவரின் முதல் படத்தை பார்த்த குஷியில் இருக்கிறார் திவ்யா மாரி செல்வராஜ்.

“எங்களோடது லவ் மேரேஜ். நான் அவரோட மனைவிங்கிறதைவிட ரசிகைனுதான் சொல்லுவேன். அவர் கதை எழுதும் காலத்துல இருந்தே எனக்கு அவரைத் தெரியும். வாசிப்புதான் எங்களை இணைச்சுது. அவரோட “தாமிரபரணியில் கொல்லப்படாத நான்” கதையில் இருந்துதான் எங்க ரெண்டு பேரோட பயணம் ஆரம்பிச்சுது. பொதுவா ஒரு கதை என்னல்லாம் செய்யும் சொல்லுங்க... அதிகபட்சமா அதை நாம ரசிக்கலாம், வியக்கலாம், கொண்டாடலாம், வேற கற்பனையைக் கொண்டு வரலாம். ஆனால் இவரோட கதைகள் படிக்கிற நம்மளை அந்தக் கதாபாத்திரமா மாத்தும். அடுத்த லெவலுக்கு கூட்டிட்டுப் போய் கேள்விகள் கேட்க வைக்கும். நம்மைத் தூங்க விடாது. அந்த மாதிரி சமயங்கள்லதான் அவர்கிட்ட பேச ஆரம்பிச்சேன். ஏன் இப்படி கதைகள்ல எங்க உணர்வுகளோட விளையாடுறீங்கனு ஒரு ரசிகையா சண்டை போட்டு அவரைத் திட்டிருக்கேன். அப்போ அவர் ரொம்ப தன்மையா, “உண்மையோட அழுத்தம் அப்படித்தான் இருக்கும்”னு இயல்பா சொல்லுவார்.


“கதைகள் பத்தி பேசிப் பேசி வளர்ந்தது எங்க நட்பு. ஒரு கட்டத்தில் அன்பு அக்கறையா மாற ஆரம்பிச்சது. ஏழு வருசமா அந்த உறவு எந்த நெருடலும் இல்லாம தொடர்ந்துச்சு. சொன்னா நம்ப மாட்டிங்க நாங்க காதலிக்குறோம்னு ரெண்டு பேருக்கும் தெரியும். ஆனா அதை வெளிப்படுத்திகிட்டதே கிடையாது... ஒருத்தருக்கு ஒருத்தர் சொன்னதும் இல்லை'' என ஒரு ட்விஸ்ட் வைக்கிறார் திவ்யா மாரி செல்வராஜ்.

''திருமணத்துக்கு முன்னாடி, எனக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடந்துச்சு. அப்போ நான் எக்ஸாம் எழுதுற வரைக்கும் எனக்காக வெளியில வெயிட் பண்ணிட்டு இருப்பாங்க. அந்த அக்கறைதான் என் வாழ்க்கையை அவர்கிட்ட கொடுக்க துணிஞ்சது. வீட்ல பேசினோம். அவருக்கு ஸ்கிரிப்ட் ஒ.கே ஆகும் போதுதான் எங்க திருமணத்துக்கு தேதி குறிச்சாங்க. கல்யாணம் ஆகி ஒரு மாசம்கூட ஆகல படம் பண்ண கிளம்பிட்டார். எப்பவும் லொகேஷன் பாக்கணும், கேரக்டர்ஸ் தேடணும்னு பிஸியாவே இருப்பார். மேரேஜ் ஆகும் போது இருந்த சந்தோஷத்தைவிட அவர் லட்சியம் நிறைவேற போகுதுன்ற சந்தோசம்தான் எனக்கு அதிகமா இருந்துச்சு. அதனாலயே நான் அவரை அதிகமா தொந்தரவு பண்ணமாட்டேன். டென்ஷன் இல்லாத நேரத்துல அவரே வந்து பேசிடுவார். நாங்க காதலிக்க ஆரம்பிச்சு ஏழு வருசம் ஆகுது. இப்ப வரை அவர் என்ன ஒரு சுடு சொல்கூட சொன்னதில்ல அவ்ளோ நல்லவர். ரொம்ப ஸ்வீட்'' என்று காதலில் உருக 'கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு பேசுமா' என்கிறார் மாரி செல்வராஜ்.

“என்கிட்ட எதுவுமே இல்லாதப்பவும் கூட நம்பிக்கையா இருந்தது திவ்யாதான். வீட்ல ஒரு மாதிரி, வெளிய ஒரு மாதிரி இருக்க மாட்டாங்க. என்னை உங்க முன்னாடி மாரினு கூப்பிடுறதுகூட அப்படித்தான். அந்த இயல்புதான் எனக்கு அவங்ககிட்ட ரொம்ப பிடிச்சது. இப்பகூட குழந்தையை அவங்க மட்டும் தனியா கவனிச்சுகிறாங்க'' என்றவரை இடைமறித்து ''நவிகுட்டி ஜூலைதான் பொறந்தா. நேரம் கிடைக்கிறப்ப அவர் வந்து பார்ப்பார்'' என்று விட்டுக்கொடுக்காமல் பேசுகிறார் திவ்யா. இவர்களின் மகளுக்கு நாஸ்தென்கா என்று பெயர் வைத்தது இயக்குநர் ராம். குடியாத்தம் பள்ளியில் ஆங்கிலம் எடுக்கும் திவ்யாதான் மாரி செல்வராஜின் டீச்சரம்மா. சொல்லிக்கொடுத்தது மறந்துவிட்டால் 'இப்பத்தான சொல்லிக்கொடுத்தேன்' என்று செல்லமாக அடிப்பாராம். தன் செல்ல மகளுக்காக மாரி செல்வராஜ் 'என்னையே உறித்துக் கொண்டு வா' என்கிற பிரத்யேக கவிதைத் தொகுப்பை எழுதிக்கொண்டிருக்கிறாராம்.

'பரியேறும் பெருமாள் படத்துக்கும் மாரி, திவ்யா காதலுக்கும் ஏதும் தொடர்பு உண்டா?'

நிச்சயமா இருக்கு. படத்துல 'அம்மா சத்தியமா?'னு ஒரு டயலாக் வரும் அது எங்களுக்குள்ள தினமும் நடக்குற ஒண்ணு. தியேட்டர்ல அந்தக் காட்சியை பாக்கும்போது நானும் மாரியும் பேசுற மாதிரியே இருந்தது. இத்தனை நாளும் பரியேறும் பெருமாள் படத்துக்காக அவங்களுக்கு நான் போன்கூட பண்ணாம காத்திருந்தேன். அந்தக் காத்திருப்புக்கு எல்லாம் ஒட்டுமொத்த பலனா இப்ப அவங்க சந்தோசமா இருக்கிறத பாக்குறப்போ, அதெல்லாம் ஒண்ணுமேயில்லைனு தோணுது. நவி பாப்பா பொறந்தப்பகூட அவங்க இவ்ளோ சந்தோசமா இல்ல. எப்படி பாத்தாலும் ரெண்டும் அவங்க குழந்தைங்கதான்'' என மனம் குளிர சொல்கிறார், திவ்யா மாரி செல்வராஜ்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.