நான்தான் பரியேறும் பெருமாளின் தேவதை டீச்சர்... - சுபத்ரா!!

எதேச்சையா ஆரம்பிச்சதுதான் சினிமா பயணம். நான் ரொம்ப விரும்பி அமைச்சுக்கிட்ட சொந்த வாழ்க்கை, ஆலன் ராபர்ட்!


நம் அனைவரின் மாணவப் பருவமும் ஏதோவோர் ஆசிரியரின் வாசனையால் நிரம்பியிருக்கும். முதல் தேவதையாக அவர்களைப் பார்த்திருப்போம். அப்படி, `பரியேறும் பெருமாள்’ படத்தில் பரியனின் தேவதையாக வரும் ஆசிரியர், நடிகை சுபத்ரா.

சொன்னால் நம்பமாட்டீங்க, நான் படிச்சது நர்சிங். பாண்டிச்சேரியில் என்.ஜி.ஓ வொர்க் பண்ணிட்டிருந்தேன். அங்குள்ள குழந்தைகளுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். அவங்களுக்கு ஆக்டிவிட்டிஸ் செய்யறதுக்குப் பணத்தட்டுப்பாடு வந்துச்சு. அந்த டைம்ல, பக்கத்தில் ஒரு பிரெஞ்சு படத்தின் ஷூட் போய்டிருந்துச்சு. என் ஃப்ரெண்ட்ஸ், அங்கே போய் ஏதாவது ட்ரை பண்ணலாம்னு சொன்னாங்க. எனக்கு அதுல பெருசா ஆர்வம் இல்லாட்டியும் குழந்தைகளுக்காகப் போனேன். அங்கே டிரான்ஸ்லேஷன் வொர்க் கிடைச்சது. ஒருநாள் ஒரு வசனத்தைச் சொல்லிக்காட்டும்போது, டைரக்டர் என்னையே நடிக்கச் சொல்லிட்டார். `பிலிவ்’ என்ற அதுதான் என் முதல் குறும்படம். தொடர்ந்து நாடகத்தில் என்னை ஈடுபடுத்திக்கிட்டேன். அங்கே கிடைச்ச நண்பர்கள்தான் சமூகம் பற்றிய நிறைய புரியவெச்சாங்க. அரசியல், கலாசாரம் எனத் தெரிஞ்சுக்கிட்டேன். பிரான்ஸ்லேயே வளர்ந்த எனக்கு, இந்தியா முழுசாப் புரிபட ஆரம்பிச்சது. `கபாலி'யில் ஆசிரியரா நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

பிறகு, `பரியேறும் பெருமாள்' ஆடிசனுக்கு இரண்டு தடவை போனேன். மாரி செல்வராஜ் சார் முதல்ல என்னை நம்பவேயில்லை. `தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் என் படத்துக்கான இயல்பான நடிப்பைத் தரமுடியுமானு தெரியலை. இது எனக்கு ரொம்ப முக்கியமான கதாபாத்திரம்’னு சொன்னார். ஆனால், நான் தொடர்ந்து முயற்சி பண்ணி அந்த வாய்ப்பை வாங்கிட்டேன். திருநெல்வேலி ஷூட்டிங்க்கு எல்லோருக்கும் முன்னாடி முதல் நாளே கிளம்பிட்டேன். வெளியூருக்குத் தனியா போனது அதான் முதல்முறை. அங்கே உள்ள மக்கள் ரொம்ப இயல்பா பழகினாங்க. அந்த இயல்பைத்தான் மறுநாள் ஷூட்டிங்கில் வெளிப்படுத்தினேன்'' எனப் புன்னகைக்கிறார் சுபத்ரா.

``எதேச்சையா ஆரம்பிச்சதுதான் சினிமா பயணம். நான் ரொம்ப விரும்பி அமைச்சுக்கிட்ட சொந்த வாழ்க்கை, ஆலன் ராபர்ட். நான் ரொம்ப நேசிக்கும் அன்பான கணவர். 6 வயசு வரை நான் பாண்டிச்சேரில்தான் வளர்ந்தேன். அதன்பிறகு பிரான்ஸ்ல செட்டில் ஆகிட்டோம். அங்கேதான் ஆலனை மீட் பண்ணினேன். அவர் க்ளினிக்ல டிரெயினிங்காகப் போயிருந்தேன். நட்பு காதலாச்சு. எனக்கும் ஆலனுக்கும் 10 வயசு வித்தியாசம். அவர், ``உனக்கு இது முதல் ஈர்ப்புதான். நீ நினைக்கிற அளவுக்கு இது நல்ல விஷயம் இல்லை’னு’ சொன்னார். பட், நாளாக நாளாக அவருக்கும் என்னை ரொம்பப் பிடிச்சுப்போச்சு. நான் எப்பவுமே க்ளினிக் வருபவரிடம் நல்லா பேசுவேன். ஆலனுக்கு உதவி செஞ்சுட்டு அவருடன் இருப்பேன். `நீ என் அம்மாவை ஞாபகப்படுத்தறே. அது எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு’னு சொல்வார். ஆரம்பத்தில், லிவிங் டூ கெதர்ல இருந்தோம். பிறகு, அப்படியே இருக்க வேணாம்னு தோணுச்சு. மேரேஜ் பண்ணிக்கிட்டோம். இந்தியா வர்றதுக்கு ஒரு வருசம் முன்னாடி எங்க கல்யாணம் நடந்துச்சு'' எனக் காதல் மனம் திறக்கிறார் சுபத்ரா.


கல்யாணத்துக்கு அப்புறம் இந்தியாவுக்குத்தான் முதல்ல வந்தோம். ஆலன், பிரான்ஸ் தவிர வேற எங்கேயும் போனதில்லை. சென்னை ஏர்போர்ட்ல இறங்கி 2 மணி நேரம் டிராவல் பண்ணினோம். ஒரு டீ கடையில் இறங்கி டீ குடிச்சோம். கொஞ்ச நேரம் அமைதியா இருந்தவர், `நாம இங்கயே இருந்துடலாமா?'’னு கேட்டார். எனக்குச் சிரிப்பு தாங்கலை. அதெல்லாம் செட் ஆகாது வேணாம்னு சொன்னேன். அவர் கேட்கலை. பல இடங்களுக்குப் போனோம். 10 நாள் கழிச்சு திரும்பவும் பிரான்ஸுக்கே போயிட்டோம். அங்கே போனதுக்குப் பிறகும் ஆலனுக்கு இந்தியா மேலான ஆசை தீரலை. அவருக்காகக் கிளம்பி வந்தேன். இந்தியாவுல 6 வயசுல தொலைச்ச என் குழந்தைப் பருவத்தை, ஆலன் அவருக்கே தெரியாமல் எனக்குத் திருப்பிக்கொடுத்துட்டார். ஹி இஸ் கிரேட். எல்லா நேரங்களிலும் எனக்கு சப்போர்ட்டா இருக்கிறது, ஆலன்தான். `உன்னால் முடியும் நீ நல்லா பண்ணுவே’னு நம்பிக்கை கொடுத்து நடிப்புக்குள் அனுப்பிவெச்சவர்'' எனக் காதலில் கசிந்து உருகுகிறார் சுபத்ரா.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.