''கோழிக்குஞ்சு இறந்துவிட்டது என்றேன்... கேட்கவில்லை!''- விருதுபெற்ற சிறுவனால் நெகிழும் தந்தை!!

மிசோரம் மாநிலத்தின் சாய்ராங் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுவன் டெரக் (Derek).
அவன், தனது சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு கோழிக்குஞ்சு குறுக்கே வந்துவிட்டது. உடனடியாக பிரேக் பிடிக்க முடியாத சிறுவன், கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டான்.

கோழிக்குஞ்சு துடித்ததைப் பார்த்து சிறுவன் பதறிவிட்டான். அடிபட்ட கோழிக்குஞ்சை தூக்கிக்கொண்டு, அருகில் இருந்த மருத்துவமனைக்குச் சென்றுள்ளான். தன்னிடம் இருந்த பத்து ரூபாயைக் கையில் எடுத்து, அங்கிருந்த நர்ஸிடம் நீட்டினான். `கோழிக் குஞ்சை எப்படியாச்சு காப்பாத்துங்க' என்று கெஞ்சியுள்ளான். அந்த கோழிக்குஞ்சு, ஏற்கெனவே இறந்துவிட்டதாக நர்ஸ் கூறியபோதும் அதை ஏற்க அவன் மனம் மறுத்தது. அங்கேயே முகத்தில் பரிதவிப்புடன் நின்றுகொண்டிருந்தான். அதைப் பார்த்து நெகிழ்ந்துபோன நர்ஸ், அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அதில் சிறுவனைப் பாராட்டியிருந்தார்.  சிறுவனின் பரிதவிக்கும் அப்பாவித்தனமாக முகம், இணைய மனங்களை வென்றுவிட்டது. ஒரே நாளில் சிறுவன் செம வைரல்.

வைரல் என்னும் வார்த்தைகளால் மட்டும் இந்தச் சம்பவத்தை அடைத்துவிட முடியாது. சிறுவனின் இரக்க குணமும், அறியாமையும் அனைவரையும் மெய்சிலிர்க்கவைத்துவிட்டது. சாலையில், மனிதர்கள் அடிபட்டுக் கிடந்தாலே அமைதியாகக் கடந்துசெல்லும் குரூர மனம்கொண்ட மனிதர்களாக மாறிக்கொண்டுவருகிறோம்.  இப்படியிருக்க, கோழிக்குஞ்சின்  சிகிச்சைக்காக  மருத்துவமனை வரை சென்ற 6 வயது சிறுவன், நாம் அனைவருக்கும் பாடம் கற்றுக்கொடுத்திருக்கிறான் என்றே சொல்ல வேண்டும்.

முன்னதாக, கோழிக்குஞ்சு தன் சைக்கிளில் சிக்கி அடிபட்டதும், அதை தூக்கிக்கொண்டு தன் தந்தையிடம் ஓடியிருக்கிறான். அவரோ 'இறந்து விட்டது இனி ஒன்றும் செய்ய முடியாது' என்று கூறியுள்ளார். ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத சிறுவன், என்னிடம்  கோபித்துக் கொண்டு தன் சேமிப்பில் இருந்த 10 ரூபாயை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றதாக லால்சென்ஹிமாவின் தந்தை கூறியுள்ளார்.

சிறுவனின் உயர்ந்த உள்ளத்தை கௌரவிக்கும் விதமாக அவனது பள்ளியில், அவனுக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி கௌரவித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகிவருகின்றன. புகைப்படத்தைப் பார்க்கும்போது, சிறுவனுக்கு அணிவித்திருக்கும் சால்வை மிசோரம் பாரம்பார்ய வழக்கத்தின்படி பெரிய பெரிய ஆளுமைகளை கௌரவிக்க அணிவிக்கப்படுவது. எனவே, இது உண்மையில் மகிழ்ச்சியான விஷயம்தான். சபாஷ் டா சுட்டிப் பையா.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.