புலனாய்வு பிரிவினரை அரசாங்கம் காட்டிகொடுத்துள்ளது – உதயகம்மன்பில!!

தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் வழங்குவதாக தெரிவித்து, அரசாங்கம் பாரிய காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ளது
என்று மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

அத்தோடு புலனாய்வு பிரிவினரை காட்டிக்கொடுப்போரை தேசத் துரோகிகளாகவே கருதவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “உழைப்பாளர் தினக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் உரிமையை இன்று அரசாங்கம் எம்மிடமிருந்து பறித்துள்ளது. மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கத் தவறிவிட்டது. வாழும் உரிமை இல்லாது செய்யப்பட்டுள்ளது.

தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு கடந்த காலங்களில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இவர் மட்டுமன்றி, நளின் பண்டாரவும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார். உண்மையில் இந்த அரசாங்கத்துக்கு நாட்டின் தேசிய பாதுகாப்பு விடயத்தில் துளியளவு கூட தெளிவு கிடையாது என்பதே இவர்களின் கருத்துக்கள் வெளிக்காட்டுகின்றன.

வரப்போகும் அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தெரிந்துகொள்வதுதான் புலனாய்வுப் பிரிவின் பிரதான வேலையாக இருக்கிறது.  அவ்வாறு தகவல்களை முன்கூட்டியே தெரிந்துக்கொள்ள வேண்டுமெனில், நாட்டுக்கு ஆபத்தாக கருதப்படும் அமைப்பிலும் புலனாய்வுப் பிரிவினர் நுழையவேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. அந்தவகையில்தான், இந்தியாவின் புலனாய்வுப் பிரிவானது, ஏப்ரல் 2ஆம் திகதியே இவ்வாறான ஒரு தாக்குதல் இலங்கையில் நடக்கவுள்ளமையை அறிந்துக் கொண்டிருந்தது.

ஆனால், இன்று என்ன நடந்துள்ளது? அமைச்சர்களே, தௌஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அமைச்சின் ஊடாக சம்பளம் வழங்கப்பட்டதாகக் கூறிவருகிறார்கள். இது பாரிய ஒரு காட்டிக்கொடுப்பாகும். புலனாய்வுப் பிரிவினரை காட்டிக்கொடுப்போரை தேசத் துரோகிகளாகவே கருதவேண்டும்.

இந்தநிலையில், புதிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைக் கொண்டுவர பிரதமர் முயற்சித்து வருகிறார். நாட்டின் பாதுகாப்புக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு நாம் ஆதரவளிப்போமே ஒழிய, இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

அத்தோடு, திருப்பலி பூஜைகள், வெசாக், பொசொன் நிகழ்வுகள், மே தினக்கூட்டங்களை அரசாங்கம் இரத்து செய்தது. இவற்றை நாம் விரும்பமின்றி தற்போது ஏற்றுக்கொண்டுள்ளோம்.

எனினும், இந்தக் காரணங்களை முன்னிருத்தி ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் இருக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்பதையும் நாம் அரசாங்கத்திடம் தெரிவித்துக்கொள்கிறோம். வெகுவிரைவிலேயே இந்த அரசாங்கத்தை வெளியேற்றி, 2020ஆம் ஆண்டு அச்சமில்லாத நாட்டை உருவாக்குவோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo
Powered by Blogger.