12 கோடி ரூபாய் நகைக் கொள்ளையில் சிக்கிய கொள்ளையர்கள்!
செங்கல்பட்டு டோல்கேட் அருகே கொள்ளையடிக்கப்பட்ட சுமார் 12 கோடி மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடித்த கொள்ளையர்களைக் காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் இது தொடர்பான விசாரணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி தலைமையில் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மதுரை கே.கே நகரில் சொகுசு ஹோட்டலில் நடைபெற்ற தங்க நகைக்காட்சிக்காக சென்னை ராயப்போட்டையில் உள்ள ஒரு நகைக்கடை ஒன்றிலிருந்து சுமார் 12 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டன. தங்க நகைக்காட்சி முடிந்தபிறகு கடந்த 29ம் தேதி அந்த நகைகளையும், நகையுடன் கொண்டு செல்லப்பட்ட பணத்தையும் மீண்டும் சென்னைக்குக் கொண்டுவந்தனர். நகைக் கடை மேலாளர் தயாநிதி மற்றும் ஊழியர்கள் மூன்று பேர் இனோவா காரில் சென்னைக்குப் பயணம் செய்தபோது செங்கல்பட்டு டோல்கேட் அருகே நகை கொண்டு சென்ற காரை மறித்து மற்றொரு இனோவா கார் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவர் சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையைச் சேர்ந்தவர் எனச் சொல்லி அந்த காரை கடத்தினார். சுமார் 12 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் காரில் இருந்த பணத்தையும் கொள்ளையர்கள் எடுத்துச் சென்றனர்.


இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் பேசினோம். ``நான்கு பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை செய்து வருகிறோம். அவர்களிடமிருந்து நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இன்னும் சிலர் தலைமறைவாக இருப்பதால் அவர்களை தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகிறார்கள். கொள்ளையர்கள் செல்போன்களை சுவிட்ச் ஆஃப் செய்து விடுவதாலும், வாட்ஸ்அப் மூலமாகப் பேசுவதாலும் அவர்களைப் பிடிப்பதில் சிரமம் உள்ளது. கைப்பற்றப்பட்ட நகைகளைக் கணக்கெடுத்து வருகிறோம். விசாரணையின் முடிவில் அனைத்தையும் தெரிவிப்போம்.” என்கிறார்.
கருத்துகள் இல்லை