மாமல்லபுரம் நள்ளிரவு ரிசார்ட் !! அதிர்ச்சி தரும் நிலைவரம்!!

மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரவுடிகள் கூடுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக அங்கு சென்ற போலீஸாருக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ரிசார்ட்டில் ரவுடிகளுக்குப் பதிலாக இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் வீக் எண்டு பார்ட்டியில் விடிய விடிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த பட்டிபுலம் பகுதியில் ஓடர் ரிசார்ட் செயல்பட்டுவருகிறது. இங்கு ஞாயிற்று கிழமைகளில் சட்ட விரோதமாக மது விருந்து நடப்பதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் எஸ்.பி.பொன்னி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் ரிசார்ட்டுக்குள் நுழைந்தனர். போலீஸாரைப் பார்த்ததும் மது, கஞ்சா போதையிலிருந்தவர்களும் ரிசார்ட் ஊழியர்களும் அதிர்ச்சியடைந்தனர். 
போதை தலைக்கேறியவர்கள் போலீஸாரையும் விருந்தில் பங்கேற்க அழைப்புவிடுத்தனர். அவர்களை போலீஸார் மடக்கிப்பிடித்து வாகனத்தில் ஏற்றினர். இன்னும் சிலர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். அவர்களை ரிசார்ட்டுக்கு வெளியில் காத்திருந்த போலீஸார் மடக்கிப் பிடித்தனர். இந்த மதுவிருந்தில் 7 பெண்கள், 153 ஆண்கள் உட்பட 160 பேர் போலீஸாரிடம் சிக்கினர். 
சோதனையில் ரிசார்ட்டுக்குள் கஞ்சா பொட்டலங்கள், அபின், போதை மாத்திரைகள், மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். மதுவிருந்தில் பிடிப்பட்டவர்களை மாமல்லபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர். அவர்களில் சிலருக்கு போதையில் என்ன நடக்கிறது என்றுகூட தெரியவில்லை. பிடிபட்டவர்களின் விவரங்களை போலீஸார் சேகரித்துவருகின்றனர். மேலும் சட்டவிரோதமாக போதை பொருள் மற்றும் மதுவிருந்தை நடத்திய ரிசார்ட் ஊழியர்களிடமும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் வார விடுமுறை நாள்களில் மதுவிருந்து நடப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் அங்கு சென்றோம். அப்போது நாங்கள் நடத்திய சோதனையில் மதுபாட்டில்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருள்கள் சிக்கின. இந்த விருந்தில் பங்கேற்க ஆன் லைன் மூலம் முன்பதிவு நடந்துள்ளது. ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இன்ஜினீயர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள், பெண் இன்ஜினீயர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டுள்ளனர். அவர்களில் சிலரின் கார்களிலிருந்து கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளையும் கைப்பற்றியுள்ளோம். மதுவிருந்தில் பங்கேற்க வந்தவர்களின் கார், பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கேளிக்கை விருந்தில் பங்கேற்றவர்களிடம் விசாரித்தபோது பௌன்ஸர்கள் மூலம்தான் போதை பொருள்கள் தங்களுக்குக் கிடைத்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் 11 பௌன்ஸர்களைப் பிடித்து விசாரித்துவருகிறோம்'' என்றனர். 
ரவுடிகளுக்கு போட்ட ஸ்கெட்ச் 
 திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னிக்கு நேற்றிரவு போனில் ஒரு தகவல் கிடைத்தது. அதில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள ரிசார்ட்டில் ரவுடிகள் ஒன்று கூடுவதாகச் சொல்லப்பட்டது. உடனடியாக எஸ்.பி. பொன்னி தலைமையில் திருவள்ளூர் மாவட்ட போலீஸார் கிழக்கு கடற்கரைச் சாலைக்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட இடம் காஞ்சிபுரம் மாவட்டம் என்பதால் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கேளம்பாக்கம், செங்கல்பட்டு, மாமல்லபுரம், கோவளம் ஆகிய பகுதிகளில் உள்ள ரிசார்ட்கள் கண்காணிக்கப்பட்டன. இந்தநிலையில் கோவளத்துக்கு போலீஸார் வரும்படி வாட்ஸ்அப்பில் தகவல் வந்தது. அதிகாலை நேரத்தில் எதற்கு இந்த அலர்ட் என்று போலீஸார் மண்டையைப் பிய்த்தபடி கோவளத்துக்குச் சென்றனர். 
 அப்போதுதான் ரவுடிகள் பார்ட்டி கொண்டாடும் தகவலை எஸ்.பி. பொன்னி தெரிவித்துள்ளார். உடனே ஆபரேசன் ஆர் என்ற பெயரில் மாமல்லபுரத்தில் உள்ள ரிசார்ட்டுக்குள் போலீஸார் அதிரடியாக நுழைந்தனர். ஆனால் அங்கு ரவுடிகள் யாரும் இல்லை. அதற்குப் பதிலாக குடும்பத்தோடும், மாணவ, மாணவிகள், இன்ஜினீயர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள் மதுவிருந்தில் பங்கேற்றது தெரியவந்தது. உடனடியாக அவர்களைப் பிடித்த போலீஸார் குடும்பத்தினருடன் வந்தவர்களை எச்சரித்து அனுப்பினர். போதை பொருள்கள் வைத்திருந்தவர்களை மட்டும் பிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெற்றோர்களுக்கு தகவல் 
இந்த விருந்தில் முன்பதிவு செய்தவுடன் உங்களுக்கு வேண்டப்பட்ட மதுவை நீங்களே எடுத்துக்கொண்டு வரலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. இதனால்தான் மதுவோடு, போதை பொருள்களையும் சிலர் கொண்டுவந்துள்ளனர். மதுவோடு போதை மாத்திரைகளையும் அவர்கள் கலந்து உற்சாகத்தில் மிதந்துள்ளனர். தற்போது போலீஸாரிடம் சிக்கியதும் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதிகாலையிலேயே விருந்தில் பங்கேற்றவர்களைப் பிடித்து வைத்திருந்த திருமண்டபம் முன்பு குவிந்தனர். போதை பொருள்களை எடுத்துவராத மாணவர்கள், மாணவிகளை மட்டும் எச்சரித்த போலீஸார் அவர்களை பெற்றோர்களுடன் அனுப்பிவைத்தனர். மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். 
ரிசார்ட் தரப்பில் போலீஸாரிடம் சில தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன. அதில், ``நாங்கள் சட்டத்துக்குட்பட்டுதான் இந்த விருந்தை நடத்தினோம். ஆனால் வந்தவர்களில் சிலர் போதை பொருள்களை கொண்டு வந்துள்ளனர். அது எங்களுக்குத் தெரியாது. இந்த பார்ட்டியில் பங்கேற்க தலா ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் வசூல் செய்துள்ளோம்'' என்று கூறியுள்ளனர். 
சில தினங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியிலும் இப்படியொரு சம்பவம் நடந்தது. அதிலும் போதை பொருள்களை மாணவர்கள் பயன்படுத்தினர். தற்போது மாமல்லபுரத்தில் நடந்துள்ளது. இதனால் வீக் எண்டு பார்ட்டி என்ற பெயரில் இளையதலைமுறையினர் போதை பழக்கத்துக்குச் சிக்கிச் சீரழிந்துவருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அதைத் தடுக்க காவல்துறையினரும் அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் விடுத்துள்ளனர். 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.