மீண்டும் இணையும் இளையராஜா எஸ்.பி.பி.!!

இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் வெளியாகியுள்ளன.

`இதைவிட வேறென்ன வேண்டும்' என இசை ரசிகர்களைக் கேட்கவைத்து விட்டனர் இளையராஜாவும் எஸ்.பி.பாலசுப்பிரமணியமும். ஆம், கிட்டத்தட்ட ஓர் ஆண்டுக்கும் மேலாகப் பாடல்களில் ராயல்டி பிரச்னையால் பேசாமல் இருந்து வந்த இந்த இரண்டு இசை மேதைகளும் ஒரு வழியாக இணைந்து ஒரே மேடையில் இசைக் கச்சேரியில் மக்கள் முன் தோன்றப்போகின்றனர்.

இந்த ஆண்டு, இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் ஆண்டாகும். அதற்காக, வெவ்வேறு கலை மற்றும் கல்வி நிறுவனங்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து அவரை வைத்துப் பாராட்டு விழாக்களையும், இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றனர். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கூடக் கடந்த பிப்ரவரி மாதம் இளையராஜாவை வைத்து பிரமாண்ட இசை நிகழ்ச்சி ஒன்றை நிகழ்த்தியது.

என்றாலும், அந்த நிகழ்ச்சியை நேரிலும், தொலைக்காட்சியிலும் கண்டுகளித்த பல இசை ரசிகர்களுக்கு அதில், யேசுதாஸ், எஸ்.பி.பி, ஜானகி போன்ற இளையராஜாவின் ஆஸ்தான பாடகர்கள் பங்கேற்று ஒரு பாடல் கூடப் பாடவில்லையே என வருத்தத்துடன் கருத்தைப் பதிவு செய்தனர். அதிலும் எஸ்.பி.பி இல்லாத ஓர் இளையராஜா கச்சேரியா என்ற கேள்வி பலரால் கேட்கப்பட்டது. ஏற்கெனவே பாடல்களின் காப்புரிமை யாருக்குச் சொந்தம் என்ற விவகாரத்தில் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பி-க்கும் இடையே சட்டச் சிக்கல்கள் நிலவி வந்த நிலையில், இந்த நிகழ்ச்சியில் அவர் இல்லாதது மேலும் ஒரு குறையாகிப்போனது.

இந்நிலையில், தற்போது இளையராஜாவின் பிறந்தநாளான ஜூன் 2-ம் தேதி சென்னை ஈ.வி.பி ஃபிலிம் சிட்டியில் நடக்கவிருக்கும் `இசை செலிப்ரேட்ஸ் இசை' என்ற இளையராஜாவின் கச்சேரியில் பாடுவதற்காக எஸ்.பி.பி வருகிறார் என்ற செய்தியும், அதற்கான ஒத்திகைகள் வருகிற மே 22-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் எஸ்.பி.பி மட்டுமல்லாது, யேசுதாஸ், பாம்பே ஜெயஶ்ரீ, சுதா ரகுநாதன், உஷா உதுப், மனோ உட்பட பல முன்னணிப் பாடகர்கள் இதில் பங்கேற்று பாடவிருக்கின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை உறுதி செய்யும் விதத்தில் இந்த நிகழ்ச்சிக்கான முன்பதிவு செய்யும் இணையதளத்திலும் அங்கே பாடுபவர்களின் வரிசையில் எஸ்.பி.பி தொடங்கி அத்தனை பாடகர்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. எது எப்படியோ, இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மீண்டும் இணைந்து இளைய நிலாவைப் பொழிந்தால் போதும் என ரசிகர்கள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #ColomboPowered by Blogger.