பிரபு வழக்கு: சபாநாயகர் நோட்டீஸுக்கு தடை!
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு தொடர்ந்த வழக்கில், சபாநாயகர் நோட்டீஸுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான ரத்தினசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இதற்கு எதிராக ரத்தினசபாபதி, கலைச்செல்வன் இருவரும் தொடர்ந்த வழக்கில், நோட்டீஸுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது. நீதிமன்றம் செல்லாத மூன்றாவது எம்.எல்.ஏ.வான கள்ளக்குறிச்சி பிரபு, சபாநாயகரிடம் விளக்கம் அளிக்க அவகாசம் கேட்டு மனு அளித்தார். ஆனால் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பிரபுவுக்கும் பொருந்தும் என்றும் அதனால் அவர் விளக்கமளிக்கத் தேவையில்லை என்று சட்டப்பேரவை செயலகம் தெரிவித்துவிட்டது.
இதனையடுத்து சபாநாயகரின் நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி பிரபுவும் நேற்று முன்தினம் மே 8ஆம் தேதி வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு இன்று (மே 10) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல், “ஏற்கனவே இரண்டு எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கில் சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல, பிரபுவுக்கு அனுப்பிய நோட்டீஸுக்கும் தடை விதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, பிரபுவுக்கு சபாநாயகர் அனுப்பி நோட்டீஸுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இவ்வழக்கை கோடை விடுமுறைக்குப் பின் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் தலைமை நீதிபதி தெரிவித்திருக்கிறார். அப்போது எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த இரு வழக்குகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் முடிவுகள் வரும் 23ஆம் தேதி வெளியாகவுள்ள சூழலில், அதிமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை எனில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் தோல்வி பயத்தால் 3 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்துவிட்டால் மெஜாரிட்டிக்கான எண்ணிக்கையை குறைக்கலாம் என்று எண்ணி இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
ஆனால் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாலும், இவ்வழக்கு கோடை விடுமுறைக்குப் பின்தான் விசாரணைக்கு வரும் என்பதாலும், 3 பேரையும் தகுதி நீக்கம் செய்யும் அதிமுக தரப்பின் திட்டம் பொய்த்துவிட்டதாகவே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த உத்தரவினை எதிர்த்து சபாநாயகர் தரப்பிலிருந்தும் இதுவரை நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்படவில்லை.
.
கருத்துகள் இல்லை