சீனக் கடலில் இந்தியா பயிற்சி!
அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் நாட்டு கடற்படையுடன் இணைந்து தென் சீனக் கடல் பகுதியில் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது இந்தியக் கடற்படை.
கடந்த 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை தென் சீனக் கடலில் நடைபெற்ற கடற்படை கூட்டுப் பயிற்சியில் இந்தியா கலந்துகொண்டது. இந்திய நேரப்படி, மே 3ஆம் தேதியன்று இது தொடங்கியது. அமெரிக்கா, ஜப்பான், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளும் இதில் பங்கேற்றன. அமெரிக்காவின் வில்லியம் லாரன்ஸ், இந்தியாவின் ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் சக்தி, ஜப்பானின் ஜேஎஸ் இஸுமோ, ஜேஎஸ் முராசமே, பிலிப்பைன்ஸ் நாட்டின் பிஆர்எஸ் ஆண்ட்ரெஸ் போனிபேசியோ ஆகிய போக்கப்பல்கள் இதில் ஈடுபடுத்தப்பட்டன.
உருவாக்கப் பயிற்சிகள், தொலைதொடர்பு செய்முறைகள், பயணிகள் பரிமாற்றம் மற்றும் தலைமைப் பரிமாற்றம் ஆகியன ஜப்பானின் ஹெலிகாப்டர் தாங்கிக் கப்பலான ஜேஎஸ் இஸுமோவில் மேற்கொள்ளப்பட்டன.

இந்த பன்னாட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதில் தங்கள் குழுவினர் மகிழ்ச்சி கொள்வதாகத் தெரிவித்துள்ளார் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஆண்ட்ரூ க்ளுக். “நண்பர்கள், கூட்டாளிகளோடு இந்த பிராந்தியத்தில் இது போன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதன் மூலமாக, ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ளவும் உறவுகளை வலுப்படுத்தவும் முடியும்” என்று அவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வர்த்தகப் போர் நடந்துவரும் சூழலில் இந்த பயிற்சி நடைபெற்றுள்ளது. தைவான், பிலிப்பைன்ஸ், புரூனே, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகள் தென் சீனக் கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்த்து வருகின்றன.
கருத்துகள் இல்லை