திரைஉலகின் அசத்தல் அம்மாக்கள்!!

தமிழ் ரசிக மகன்களை பாச மழையில் நனைக்க இன்னும் பல அம்மாக்கள் தமிழ் சினிமாவில் உருவாக, இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்துவோம்!

ஆயிரமாயிரம் கோவில்கள் இருந்தாலும் தாயை விட சிறந்த கோவில் இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மைதானே! நம் வாழ்வில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்  அம்மாக்கள். அவர்களை போற்ற வருடத்திற்கு ஒரு நாள் போதாது எனினும்,  அன்னையர் தினத்தை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் அம்மா கதாபாத்திரத்தில் நம் மனதை கொள்ளையடித்த அம்மாக்களை பற்றி இங்கு காண்போமா...

ஸ்ரீவித்யா:

தென்னிந்திய சினிமாவுலகில்  புகழ்பெற்ற, அழகான அம்மா என்றால் அது ஸ்ரீவித்யாதான். 70-களில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அப்போதிருந்த பெரும்பாலான முண்ணனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக வலம்  வந்தவர், ஸ்ரீவித்யா.  ரஜினியின் அறிமுக படமான 'அபூர்வ ராகங்கள்' படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்தவர், பதினாறு ஆண்டுகள் கழித்து, அதே ரஜினிக்கு 'தளபதி'யில் அம்மாவாக நடித்தார்.

தொடர்ந்து பல்வேறு படங்களில் அம்மா  கதாபாத்திரத்தில் நடித்தாலும்,  பாசில் இயக்கத்தில் வெளிவந்த 'காதலுக்கு மரியாதை' படத்தில்,  விஜய்க்கு அம்மாவாக நடித்தது இவரது திரையுலக பயணத்தில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். படம் பார்த்த அனைவரும் 'தங்களுக்கு இது போல் ஒரு அம்மா இல்லையே 'என்று எண்ணுமளவுக்கு அன்றைய இளவட்டங்களை அம்மா பாசத்தில் கட்டிப்போட்டார்  ஸ்ரீவித்யா. கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் என  தொடர்ந்து  பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்தை ஏற்ற  இந்த அழகு மங்கை 2006 ம் ஆண்டு பூவுலகை விட்டு மறைந்தார். 


நதியா:

என்றுமே இளமை மாறாமல், இன்றும் அதே அழகோடு ஜொலித்து கொண்டிருப்பவர் நடிகை நதியா.  இயக்குநர் பாசிலால் 'பூவே பூச்சூடவா' படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட நதியாவிற்கு ரசிகர்களை விட  ரசிகைகளின் எண்ணிக்கை அதிகம். இவர் கதாநாயகியாக நடித்த காலக்  கட்டங்களில் நதியா வளையல், நதியா செருப்பு, நதியா புடவை என எந்தப் பொருளை எடுத்தாலும் நதியாவின் பெயர் சொல்லும் அளவிற்கு பிரபலமாக இருந்தார் நதியா.



பின்னர் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகிய நதியா, 'எம் குமரன் சன் ஆப் மஹாலக்ஷ்மி' படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த படத்தில் 'ஜெயம்' ரவிக்கு அம்மாவாக நடித்து அப்படத்தின் வெற்றிக்கு பெரும்  காரணமாக இருந்தார் நதியா.  இப்படத்தில் வரும் அம்மா- மகன் பாசத்தை கண்ட, கணவன் இல்லாமல் மகனை வளர்க்கும் தாய்மார்கள், தங்களை நதியாவாகவும், தங்கள் மகன்களை ஜெயம் ரவியாகவும் நினைத்து கொள்ளும் அளவிற்கு  நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் நதியா.  

சிம்ரன்:

90-களைச் சேர்ந்த  இளைஞர்களின் இதயத்துடிப்பாக, கூடவே இதயத்துடிப்பை எகிற வைத்த பெருமை சிம்ரனையே சாரும்.  ஆளைக் கவிழ்க்கும் அழகு, அபார நடிப்பு, இளமை துள்ளல் இடை நடனம் என்று டாப் கியரில்  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சிம்ரன். பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து கொண்டிருந்த நேரத்தில் 2002 -ல்  மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் மூன்று குழந்தைகளுக்கு தாயாக இவர் நடித்தது அப்போதைய சக கதாநாயகிகளுக்கு சவாலாக இருந்தது. இப்படத்தில் நடித்ததிற்காக இவர் பல்வேறு விருதுகளை வாங்கி குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக 'நேருக்கு நேர்' படத்தில் நடித்தவர்,  'வாரணம் ஆயிரம்' படத்தில் இரு சூர்யாவில் ஒருவருக்கு ஜோடியாகவும், இன்னொருவருக்கு தாயாகவும் நடித்து  நடிப்பில் ஒரு அசத்து அசத்தியிருந்தார் சிம்ரன்.

ராதிகா:

திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர், ராடன் மீடியா நிறுவனத்தின் நிறுவனர் என பன்முகங்களை கொண்டவர் ராதிகா. ரோஜா கூட்டம், தெறி, தர்மதுரை, தங்கமகன் என தான் ஏற்கும் அம்மா கதாபாத்திரங்களில் இவரது வெகுளித்தனமான நடிப்புதான் ஸ்பெஷலான ஒன்று. 'நானும் ரவுடிதான்' படத்தில் சில காட்சிகளே வந்தாலும் ராதிகா போலீஸ்  என்றாலும் அதைக் காட்டிலும் விஜய்சேதுபதிக்கு அம்மாவாக ‘என் புள்ள கொத்தமல்லிக் கொழுந்துடி எனச் சொல்லிக்கொண்டே அப்பாவி அம்மாவாக பட்டையைக் கிளப்பியிருப்பார். இன்னும் சுருங்க சொல்ல வேண்டுமென்றால் சின்னத்திரையில் சித்தியாக வெற்றிக்கொடி நாட்டியவர் பெரியத்திரையில் அம்மாவாக வெற்றிக்கொடி நாட்டவும் தவறவில்லை. 



ரம்யா கிருஷ்ணன்:

ரம்யா கிருஷ்ணன் என்றதுமே சட்டென்று 'ராஜமாதா' உருவம் உங்கள் கண்முன் விரிகிறதா? ஆம். அபார நடிப்பு, கம்பீரமான தோற்றம் மற்றும்  குரலுக்கு, சொந்தகாரரான ராஜ மாதாவை இந்த அழகு அம்மா தொகுப்பில்  தவிர்க்க முடியுமா என்ன? பாகுபலியில் 'இதுவே என் கட்டளை.. என்  கட்டளையே சாசனம்' என்று அவர் கர்ஜித்தது இன்னும் நம் காதுகளை விட்டு நீங்கவில்லை. தன் உயிரையும் பொருட்படுத்தாது தன் மகன்  பாகுபலியின் கை குழந்தை  வாரிசை மழை, அலை வௌ்ளத்தில்  ஒற்றை ஆளாக தூக்கி வந்து கடவுளின் கருணையால் ரோகிணியிடம் ஒப்படைத்துவிட்டு உயிரை விடும் அந்த அறிமுக காட்சியில் இருந்து பாகம் இரண்டில் தன் மருமகள் தேவசேனாவின்  கால்களைப் பற்றி மன்னிப்பு கேட்டு உருகும் காட்சி வரை இரண்டு பாகங்கள் முழுக்க  மெய்சிலிர்க்க வைத்தார் இந்த ராஜமாதா சிவகாமிதேவி. 

சரண்யா பொன்வண்ணன்:

இப்போது உள்ள தமிழ் சினிமாவில், அம்மா என்றாலே சரண்யா பொன்வண்ணன் தான் என்று சொல்லும் அளவிற்கு பல்வேறு படங்களில் நடித்து, தன் யதார்த்த நடிப்பால் பல்வேறு விருதுகளை குவித்து கொண்டு இருக்கும் கலகலப்பு அம்மா இவர். தனது முதல் படமான 'நாயகன்' படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், நீண்ட காலம் கதாநாயகியாக ஜொலிக்காத இவர்,  நீண்ட இடைவேளைக்கு பின்னர் 'தவமாய் தவமிருந்து', 'ராம்' படங்களில்  நடிக்க தொடங்கி அம்மா வேடத்தில் சக்கைப்  போடு போட்டுக்கொண்டிருக்கிறார்.   



எம்டன் மகன்  மற்றும் களவாணி போன்ற படங்களில் இவரது நடிப்பு வெகுவாகப் புகழப்பட்டது.  எல்லாவித அம்மா கதாபாத்திரத்திற்கும் நன்றாக பொருந்தி போவதால் பல்வேறு இயக்குநர்களின் முதல் தேர்வு சரண்யா பொன்வண்ணன்தான். 2010ஆம் ஆண்டுக்கான இந்தியத் தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதை 'தென்மேற்குப் பருவக்காற்று' என்ற திரைப்படத்திற்காக இவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களைத் தவிர, லட்சுமி, ஊர்வசி, ரேணுகா, சுஜாதா, ரோகிணி, கோவை சரளா, கீதா, கலைராணி எனப் பல அம்மா நடிகைகளை  கோலிவுட் தந்திருக்கிறது. தமிழ் ரசிக மகன்களை பாச மழையில் நனைக்க இன்னும் பல அம்மாக்கள் தமிழ் சினிமாவில் உருவாக, இந்த அன்னையர் தினத்தில் வாழ்த்துவோம்! 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.