களேபரமான மேற்கு வங்க வாக்குப்பதிவு!!

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற பல மாநிலங்களில் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது.
அதேபோல உத்தரப்பிரதேச மாநிலத்திலும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஆறாம் கட்டமாக நேற்று 8 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

இதற்கிடையில், மேற்கு வங்கத்தின் ஜர்காம் பகுதியைச் சேர்ந்த ரமின் சிங் என்ற பா.ஜ.க தொண்டர் ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என பா.ஜ.க குற்றம் சாட்டி வரும் நிலையில், நேற்று பா.ஜ.க-வைச் சேர்ந்த பாரதி கோஷ் என்ற பெண் வேட்பாளர் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கதல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க-வின் பாரதி கோஷ், அந்தத் தொகுதிக்கு உட்பட்ட கேஷ்பூரில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நடைபெறும் வாக்குப்பதிவைப் பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது தன்னுடன் வந்த பா.ஜ.க பிரமுகரை அத்துமீறி சாவடியினுள் அழைத்துச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. வாக்குச்சாவடியில் இருந்த பெண்கள் இதை அறிந்து கோஷ் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் அங்கிருந்து வேறு வாக்குச் சாவடிக்குப் புறப்பட்டார். அப்போது வழியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸார், கோஷ் வந்த வண்டியின் மீது கற்களையும், பெட்ரோல் குண்டுகளையும் வீசினர்.

இதனால் பா.ஜ.க-வினருக்கும், திரிணாமுல் காங்கிரஸாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவர் படுகாயமடைந்தார். பாதுகாப்பு படையினரின் துப்பாக்கிச் சூடு நடந்த அதே நேரத்தில் கோஷின் பாதுகாவலரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் கலவரம் உச்சக்கட்டத்தை எட்டியது. அந்தப் பகுதியில் உள்ள கிராம மக்கள் பாரதி கோஷை பின் தொடர்ந்து தாக்க முயன்றுள்ளனர். இதனால் அவர் வலுக்கட்டாயமாக கேஷ்பூர் காவல்நிலையத்தில் அடைத்துவைக்கப்பட்டார்.

பா.ஜ.க-வினருக்கும், திரிணாமுல் காங்கிரஸாருக்கும் இடையே நடைபெற்ற கலவரத்தில் 26 பேர் படுகாயமடைந்துள்ளனர். இருவர் அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சதித் திட்டம் என்றும் தன் பாதுகாவலர் யாரையும் சுடவில்லை எனவும் மறுப்பு தெரிவித்துள்ளார் பாரதி கோஷ். மேற்கு வங்கத்தில் இதுவரை நடந்த ஐந்து கட்ட வாக்குப்பதிவின் போதும் இதேபோன்று பல கலவரங்கள் நடைபெற்று சர்ச்சையாகியுள்ளது. நேற்று கேஷ்பூரில் நடந்த கலவரத்தின் விளைவாக அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.