சீமான் பகீர் குற்றச்சாட்டு!!

வேதாந்தா குழுமம் என்னிடம் பேரம் பேசினார்கள். தேர்தல் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் எனச் சொல்லிப் பலமுறைப் பேசிப்பார்த்தார்கள்” என சீமான் தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அகல்யாவை ஆதரித்து ஓட்டப்பிடாரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில், ``தமிழகத்தில் அணு உலைகள் அமைக்கப்பட வேண்டும் எனக்கூறும் கம்யூனிஸ்டும் காங்கிரஸும் கேரளாவில் அதை அனுமதிக்கவில்லையே ஏன்? ஒரே கட்சி என்றாலும் மாநிலத்துக்கு மாநிலம் ஏன் கட்சிகளின் முடிவுகள், கொள்கைகள் வேறுபடுகின்றன.

மகாராஷ்டிராவில் விரட்டியடிக்கப்பட்ட ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடியில் அமைவதற்கும் அதன் உற்பத்தியை துவக்கியதற்கும் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளுக்கு பங்கு இல்லாமல் இல்லை. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைகிறது. நிலமும் பாழாகிறது என்பதால், அந்த ஆலையை மூட வேண்டும் எனப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மக்களுடன் அரசு, ஏன் ஒருமுறைகூட பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மக்களின் முடிவால் ஆலையை மூடுவோம் எனச் சொல்லி, கொள்கை முடிவு எடுத்துள்ள அரசு, ஏன் முதலிலேயே ஆலையை மூடவில்லை.

போராட்டம் நடத்திய மக்கள் மீது ஏன் அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகுதானே ஆலையை மூடியது அரசு. துப்பாக்கிச்சூடு நடத்திட வேண்டுமென்றாலும், கண்ணீர்ப்புகை, முட்டிக்கு கீழ் லேசான தடியடி, ரப்பர் புல்லட்டால் முட்டுக்கு கீழ் சுடுதல் என்று பல படிநிலைகள் உள்ளன. இதில், எதையுமே பின்பற்றாமல், எடுத்தவுடன் துப்பாக்கிச்சூடு நடத்திட என்ன காரணம். உலக வரலாற்றில் இதுபோன்று எங்கு நடந்துள்ளது. மக்களையே குருவியைப் போலச் சுட்டுக்கொன்ற அரசு ஓர் அரசா?

வேதாந்தா குழுமம் என்னிடம் பேரம் பேசினார்கள். தேர்தல் செலவை நாங்களே பார்த்துக்கொள்கிறோம் எனச் சொல்லிப் பலமுறைப் பேசிப் பார்த்தார்கள். தற்போதும்கூட, அதே வேதாந்தா குழுமத்துக்கு டெல்டா பகுதிகளில் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் முதல்கட்டப் பணிகளைத் துவக்கிட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் விதி அமலில் இருக்கும்போது,  வேதாந்தாவுக்கு இப்படி ஒரு அனுமதி கொடுப்பது சரியா? இது தேர்தல் ஆணையத்தின் விதி மீறல் இல்லையா?

அடுத்ததாக, டெல்டா மாவட்டங்களில்  போராட்டம் நடத்தும் மக்கள் மீது இதேபோல் இந்த அரசு துப்பாக்கிச்சூடு நடத்துமா? தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியது இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்தான். தமிழகத்துக்கு தற்போது ஜெயலலிதா, கருணாநிதிக்கு மாற்றான தலைவர் தேவை என்பதில்லை. கக்கன், வ.உ.சி, காமராஜர் போல தலைவர் வேண்டும் என்பதுதான்” என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.