தமிழக குட்டிப்பெண்ணின் ஸ்கேட்டிங் கனவு!!

ஸ்கேட்டிங் என்பது பொதுவாக அயல்நாடுகளில் அதிகம் பயன்படுத்தும் ஒரு விளையாட்டு.
வெளிநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் ஸ்கேட்டிங் விளையாடுபவர்களின் எண்ணிக்கை சற்று குறைவாகவே இருக்கும். அதிலும் தமிழ்நாட்டில் மிகமிகக் குறைவு. இப்படி இருக்கையில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அருகில் உள்ள மகாபலிபுரத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி கமலி, வெறும் காலில் ஸ்கேட்டிங் செய்யும் புகைப்படம் சமீபத்தில் இணையதளங்களில் வைரலானது. அது சர்வதேச ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் (tony hawk) கண்ணில் பட அவரும் சிறுமியின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அவ்வளவுதான் ஒன்பது வயது சிறுமி கமலி உலக ஃபேமஸ் ஆகிவிட்டார்.

இதற்கிடையில்,  நியூசிலாந்தைச் சேர்ந்த ஷஷா ரெயின்போ என்ற இயக்குநர் முதல்முறையாக இந்தியாவுக்கு வரும்போது  `வைல்ட் பீஸ்ட்ஸில் ஆல்பா ஃபீமேல்ஸ் (Wild பீஸ்ட் - Alpha Female) என்ற பாடலுக்காக கமலி மற்றும் சில ஸ்கேட்டிங் பெண்களை வைத்து ஒரு பாடலை உருவாக்கினார். கமலியின் தாய் சுகந்தியின் உறுதி மற்றும் அவரின் கருத்தியல், ரெயின்போவை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அதனால் கமலியின் வாழ்க்கையை உலகுக்கு எடுத்துக்கூற வேண்டும் என நினைத்த அவர்  `கமலி’ என்ற பெயரிலேயே சிறுமியின் வாழ்க்கையைக் குறும்படமாக எடுத்தார்.

கமலியின் தாய் சுகந்தி தன் 34-வது வயதில் திருமண வாழ்க்கையின் முடிவை எதிர்கொள்கிறார். அதன் பிறகு தன் வாழ்க்கை பிரச்னைகளை எதிர்கொண்டு தனி ஆளாக கமலியை வளர்த்து வருகிறார். சுகந்தி தன் மகளுக்குச் சிறந்த கல்வியை மட்டுமே கொடுக்க வேண்டும் என எண்ணியுள்ளார். அப்போது அவர்களின் வாழ்க்கையின் திருப்பமாக சுகந்தி தம்பியின் நண்பர் ஒருவர் கமலிக்கு ஸ்கேட்டிங் போட்டை பரிசாக வழங்கியுள்ளார். அதுவே தற்போது கமலியின் வாழ்க்கையாக மாறியுள்ளது.  தன் மகளுக்கு உள்ள ஸ்கேட்டிங் ஆசையை இந்த சமூகம் ஒப்புக்கொள்ள மறுக்கவே அவை அனைத்தையும் மீறி அவளைச் சர்வதேச ஸ்கேட்டராக உருவாக்க வேண்டும் என உழைத்து வருகிறார் சுகந்தி. கமலி குறும்படத்தில் இதைப் பற்றித்தான் கூறியிருப்பார் ரெயின்போ.

இதுபற்றி பேசியுள்ள ரெயின்போ, ``ஒரு தனிநபரிடமிருந்து எப்படி மாபெரும் மாற்றம் தொடங்குகிறது என்பதைக் கமலியின் கதை காட்டுகிறது. கமலையின் தாய் சுகந்தியை ஒரு ஹீரோ என்றே கூற வேண்டும். அவரது துணிச்சலுக்காக நிச்சயம் அவர் பாராட்டப்படவேண்டியவர்' எனத் தெரிவித்துள்ளார்.

குறும்படம் பற்றி பேசிய சுகந்தி, ``கமலியின் வாழ்க்கையைப் படமாக எடுக்கப் போகிறோம் எனக் கூறியதும் என் பெற்றோர்களும் உள்ளூர் வாசிகளும் ஒப்புக்கொள்ளவில்லை. கடுமையாக விமர்சித்தனர். கமலியின் கை, கால்களை நான் உடைக்க நினைக்கிறேன் எனக் கூறினார்கள். அவற்றையெல்லாம் நான் சற்றும் பொருட்படுத்தவில்லை.  நான் தொடாத உயரத்தை என் மகள் தொட வேண்டும் என்பதுதான் என் கனவு. என்னைப்போல் ஒரு சிறிய வட்டத்துக்குள் அவள் அடைந்துவிடக்கூடாது” எனப் பேசியுள்ளார். தான் ஒரு சர்வதேச ஸ்கேட்டராக வர விரும்புவதாக ஐந்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி கமலியும் தெரிவித்துள்ளார்.

24 நிமிடங்கள் ஓடும் இந்தக் கமலி குறும்படம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த அட்லாண்டா திரைப்பட விழாவில் சிறந்த ஆவணப்படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.  மேலும், கடந்த ஆண்டு மும்பையில் நடந்த சர்வதேச குறும்பட விழாவில் சிறந்த இயக்குநராக  `கமலி’ படத்தை இயக்கிய ரெயின்போ தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து, 2020-ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கும் இந்தப் படம் தகுதிப்பெற்றுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.