மரவளத்தைப் பாதுகாக்க பிலிப்பைன்ஸில் புதிய முயற்சி!!

மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் 10 மரங்களை நட்டால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற வகையில் புதிய சட்டத்தை பிலிப்பைன்ஸ் அரசு விரைவில் அமுல்படுத்த இருக்கிறது.


புவி வெப்பமயமாதலில் மரங்களின் இழப்பு முக்கிய பங்காற்றுகிறது. இதனால், உலக அளவில் காடுகளின் பரப்பளவு குறைந்துவருவதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் தங்களால முயற்சிகளை எடுத்து வருகின்றன. புவி வெப்பமயமாதல் மட்டுமல்லாமல் மழையின்மை, தொடரும் வறட்சி... என அனைத்துக்கும், 'மரம் வளர்க்க வேண்டும்’ என்பதைத்தான் தீர்வாகச் சொல்கிறார்கள். இதனால்தான், தன்னார்வ அமைப்புகள், ஆன்மிக அமைப்புகள், அரசுத் துறைகள் என அனைத்துமே மரம் வளர்ப்பைத் தீவிரமாகச் செய்து வருகின்றன.

அந்தவகையில் தொடக்க, உயர் நிலைக் கல்வி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் ஒவ்வோர் ஆண்டும் தங்கள் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாக 10 மரங்களையாவது நடுதல் வேண்டும் என்ற புதிய சட்டம் பிலிப்பைன்ஸில் அமல்படுத்தப்பட இருக்கிறது.
`Graduation Legacy for the Environment Act' என்ற இந்தச் சட்டத்துக்கான ஒப்புதலை அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை அளித்திருக்கிறது. அந்நாட்டு அதிபரின் ஒப்புதல் கிடைத்த பின்னர், இது சட்டமாக அமல்படுத்தப்படவிருக்கிறது. இந்தச் சட்டம் பிரதிநிதிகள் அவையில் மேக்டலோ கட்சியின் (MAGDALO Party) பிரதிநிதியான கேரி அலெஜானோ (Gary Alejano) மற்றும் கேவிட்டி மாவட்டப் பிரதிநிதியான ஸ்டிரைக் ரெவில்லா (Strike Revilla) ஆகியோர் கொண்டுவந்தனர். பலகட்ட விவாதத்துக்குப் பின்னர், அந்தச் சட்டத்துக்கு மூன்றாவது மற்றும் இறுதி ஒப்புதலை பிரதிநிதிகள் அவை வழங்கியிருக்கிறது.

சட்டத்தை அறிமுகப்படுத்திப் பேசிய அலெஜானோ, ``தொடக்கப்பள்ளிப் படிப்புகளை ஆண்டுக்கு 12 கோடி பேர் முடிக்கின்றனர். அதேபோல், உயர்நிலைப் பள்ளிப் படிப்புகளை கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் முடிக்கிறார்கள். கல்லூரிகளில் ஆண்டுதோறும் 50,000 பேர் பட்டப்படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள். இந்தச் சட்டம் முறையாக அமல்படுத்தப்படுமானால் 17.5 கோடி புதிய மரங்கள் ஆண்டுதோறும் நடப்படும். ஒரு தலைமுறையில் நமக்கு 52,500 கோடி மரங்கள் நமக்குக் கிடைக்கும். இதில், 10 சதவிகித மரங்கள் மட்டுமே நீடித்திருக்கும் என்று கணக்கிட்டாலும் 5,250 கோடி மரங்களை நாம் பெறலாம்'' என்று பேசினார்.

மரங்கள் வனப்பகுதியிலோ, சதுப்பு நிலம் அல்லது பாதுகாக்கப்பட்ட பகுதிகள், நகர்ப்புறங்கள், ராணுவம் அல்லது தனிநபருக்குச் சொந்தமான இடங்கள், கைவிடப்பட்ட சுரங்கத் தொழிற்சாலைப் பகுதிகள் அல்லது பொருத்தமான இடங்களில் நடப்பட வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. கல்வித் துறை மற்றும் உயர் கல்வித் துறைக்கான ஆணையம் ஆகியவை இந்தச் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மரக்கன்றுகளை வளர்ப்பதற்கும் நடுவதற்கும் தேவையான உதவிகளை சுற்றுச்சூழல் துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட அரசு சார்ந்த துறைகள் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
 #Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.