மெல்லப் பேசு ....மின்னல் மலரே....!! பாகம் 6

நீ தள்ளிச் சென்று 
எனக்கு சூனியத்தை 
பரிசளித்துவிடாதே 
என்னவளே.....
அது முன்னிரவுப்பொழுது. உடல் வியர்த்துக்கொட்டியது. மின்விசிறிக் காற்று கூட வெப்பமாக இருப்பது போலவே தோன்றியது. அறைக்குள் புளுக்கமாக இருந்ததால் வெளியே வந்த வெற்றிமாறன், வீட்டுமுற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த மணற்பிட்டியில் ஒரு பக்கமாக வந்து அமர்ந்து கொண்டான். இயற்கைக்காற்று, சிலுசிலுவென முகத்தில் வந்து மோதியது. அந்த தென்றலின் தீண்டல் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்வாக இருந்தது. கண்களை மூடியபடி கையிலிருந்த செல்போனில் வானொலியை திறந்துவிட்டான்.

நாரினில் பூ தொடுத்து மாலை ஆக்கினேன்
காதலின் கோவில் வாழும் தேவிக்காகவே
அது காயுதிங்கே... ஒரு காதல் தீயில்...
இதை யார் தடுப்பாரோ....
பூங்காற்றே நீயும் சொல்வாய்...

இளையராஜாவின் இனிமையான கானம் மனதை நிறைத்துக் கொண்டிருந்தது.


அந்த இனிமையோடு சில இனிமையான நினைவுகளும் அவனுக்குள் வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது அவன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான். அவன் எவ்வளவுக்கெவ்வளவு கெட்டிக்காரனோ அவ்வளவுக்கவ்வளவு குழப்படிக்காரன் என்பது எல்லோருக்கும் தெரியும். அது அவர்களுக்கு இறுதி ஆண்டு. எப்போதுமே அவனது பிரச்சினைகள், நண்பர்களுக்கான மோதலாகத்தான் இருக்கும்.

அப்போதெல்லாம், நண்பர்கள்,  காதல் ...நேசம், பாசம் என்றெல்லாம் சொன்னால் அந்த இடத்தைவிட்டே எழுந்துசென்றுவிடுவான். இதெல்லாம் அவனுக்கு சுத்தமாகப் பிடிக்காது. 'காதலும்  கத்தரிக்காயும்' என்பான். அவனைக் கண்டாலே ஏனைய துறை மாணவர்கள் வெருண்டு ஓடிவிடுவார்கள். ‘ஐயோ...அவனா?‘ ‘அது முசுடாச்சே‘ இப்படித்தான் எல்லோரும்  சொல்வார்கள். அது மட்டும் அல்லாமல் முனி என்றொரு பட்டப்பெயரும் இருந்தது அவனுக்கு. எந்தப் பெண்ணைக் கண்டாலும் அலட்சியமாய் கடந்துவிடுவான் வெற்றிமாறன். 

அவன் கனிமொழியைக் கண்டது, அதுதான் முதல் முறை. காலையில் நண்பர்களோடு மரத்தடியில் கூடியிருந்த பொழுதொன்றில்தான் அவள் அவனைக் கடந்து சென்றாள். ஒரு நொடியில் சட்டென்று அவனது பார்வையில் பட்டு மறைந்து விட்டாள். யாரையுமே அப்படி பார்த்தறியாத அவன் முதலில் அவளைப்பற்றி யோசிக்கவே இல்லை. ஆனால் அன்றைய பொழுது முழுவதும் மின்மினி போல அவளது நினைவு அவனுக்குள் வந்துசென்றுகொண்டே இருந்தது. ‘இதென்ன புதுவிதமாக உள்ளது‘ என எண்ணியவன், அப்படியே விட்டுவிட்டான்.


மறுநாள், காலையில் பல்கலைக்கழகத்தில் கால்வைத்த நொடிமுதல் மனம் அவளைத்தான் தேடியது. ஆனால் எங்கேயும் அவளைக் காணவே இல்லை. மனதில் ஒருவித வெறுமை சூழ்வதை அவனால் உணரமுடிந்தது. அதன் பின்னரான சில நாட்கள் அவளைப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே காலையில் அவசரமாய் புறப்பட்டுச் செல்வான், அனால் அவளைக் காணவேயில்லை. அவளால் ஏற்பட்ட வெறுமை அவனுக்குள் ஒருவித அமைதியைத் தந்துவிட்டிருந்தது.

அதன்பின்னர் அவனது நடவடிக்கையில் பல மாறுதல்கள் எற்பட்டுவிட்டது. எப்போதும் ஒரு யோசனை அவனுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது, அடாவடி வெற்றி அமைதியின் வெற்றியாகிவிட்டான்.

“என்னடா?”  என்ற நண்பர்களிடம், “ஒன்றுமில்லை, பல்கலைக்கழக படிப்பும் முடிஞ்சா ஒரு பக்குவம் வரத்தானே செய்யும்,” என்றான். 
நண்பர்கள் அவனை விசித்திரமாய்  பார்த்துவைத்தார்கள். 

சிலநாட்களின் பின்னர்,  இறுதிப் பரீட்சை நேரம் என்பதால் அதிகமாக அவரவரே படிப்பில் கவனம் செலுத்தியதால் பல்கலைக்கழகம் செல்வதும் இல்லை. எப்போதாவது போகும்போது தேடிப்பார்ப்பான். அவள், கண்ணில் பட்டதே இல்லை. யாரையோ பார்க்க  வந்தாள் போல,  என எண்ணி காலஓட்டத்தில் அப்படியே விட்டுவிட்டான். ஆனாலும் அடிக்கடி அவளது முகம் அவனது எண்ணத்தில் வந்துசெல்லும். பட்டப்படிப்பு முடித்து, வேலைக்குச் சென்றபோதும் அவளது நினைவுகள் அவனிடமிருந்து மறையவில்லை. வீதியில், கோயிலில் என்று அவனது பார்வை அவளைத் தேடவே செய்தது. இடையே அவனுக்கு வேலை கிடைத்தது, அப்பாவுக்கு வருத்தம், தங்கையின் வெளிநாட்டு மேற்படிப்பு என பல விடயங்கள் வந்து சென்றுவிட அவனும் அதில் புதைந்துவிட்டான்.

வேலைக்குச் சென்று மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டது. நகரத்தில் புதிதாய் பிளட் வாங்கிவிட்டான். அப்பாவை அழைத்துச் செல்லவேண்டும் என நினைத்து, அப்பாவுக்குச் சொல்லாமலே அவன் ஊருக்கு வந்தபோதுதான், அவனது சொந்த வீட்டில் அவனது அப்பாவை “அப்பா.....” என அழைத்தபடி நின்ற அவளைக் கண்டான். 

அவன் எப்போதும் ஊருக்கு பஸ்ஸில் தான் வருவது வழமை. அன்றும் அப்படித்தான், அவன் அதிகாலையில் வந்து இறங்கி, படலையில் கைவைக்கவும், இன்னொரு கை படலையைத் திறக்கவும் சரியாக இருந்தது. இருள் கவிந்த அந்தப்பொழுதில் அவனுக்கு, அவளது முகம் சரியாகத் தெரியவில்லை. திறந்துவிட்டுவிட்டு சடாரென்று திரும்பிச் சென்றுவிட்டாள். உள்ளே சென்று அப்பாவிடம் பேசிக்கொண்டே,
“யாரது?”  என்றான்.

“அது...நான் சொல்றன், நீ கைகால் கழுவி, ரீ குடி, நான் எல்லாத்தையும் ஆறுதலா சொல்றன்” என்றார்.
அவனும் கிணற்றடிக்குச் சென்று, கைகால் அலம்பி வர, மெல்ல விடிந்திருந்தது. மீண்டும் அப்பாவின் அருகில் அமர்ந்தவன், “அப்பா....” என்ற அந்த ஒலியில் சட்டென்று நிமிர்ந்தான்.

“உள்ள வாம்மா கனி” என்ற அப்பாவின் உத்தரவின் பின்னர், உள்ளே வந்தவளைக் கண்டதும் இனிய அதிர்ச்சி வெற்றிக்கு. இத்தனை நாளாய், அவனது மனதிற்குள், இனிமையான சின்னத்தேனீ போல ரீங்காரம் செய்துகொண்டிருந்தவள், அவனுக்கு முன்னால் நிற்பது விந்தையாக இருந்தது, அந்தக் கணம் கனவா, நிஜமா என எண்ணத்தோன்றியது. மனம் பட்டாசு போல வெடித்து மகிழ்ந்தது. கலர் கலராக பட்டாம்பூச்சிகள் பறந்து திரிந்தன. அப்படியே அவளது கரம் பற்றிக்கொள்ளவேண்டும் போல பரபரத்த மனதை அடக்கிக்கொண்டான்.

தேநீர்க் குவளைகளை வைத்தவள், உடனே திரும்பவும், “என்னம்மா, உடனே போறியா?” என்ற அப்பாவிடம்,

“ஓமப்பா.... அனந்துக்குட்டி எழும்பி விளையாடுறான்,” என்றபடி நடந்தவளை விக்கித்துப்போய் பார்த்தான் வெற்றிமாறன். மனதுக்குள் வெடித்துக் கொண்டிருந்த பட்டாசுகள் சட்டென்று அணைந்துபோனது, பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் முறிந்தது போல அவை துவண்டு விழுந்தன.

அனந்துக்குட்டி என்றால் மகனாகத்தான் இருக்கவேண்டும், அப்படியானால் அவளுக்குத் திருமணம் ஆயிற்றா, ஈட்டி குத்தியது போன்ற வலி உள்ளத்தில்,  எத்தனை வருசமாச்சு, அவளது முகத்தை  தேடஆரம்பித்து, கடைசியில் அவள் இப்படியா அவன் கண்ணில் படவேண்டும். அதுவும் அவனது வீட்டிலேயே. இதற்கு அவன், அவளைப் பார்க்காமலே இருந்திருக்கலாமே, ‘கடவுளே.....இது என்ன சோதனை?‘ வலி நிறைந்த பெருமூச்சொன்று அவனிடமிருந்து வெளிப்பட்டது.

அவளை  இப்படிச் சந்திக்கவைத்த விதியின் மீது கோபம் கோபமாய் வந்தது,  மனதில் சூனியம் சூழ்ந்துகொள்ள, வனாந்தர வெளியில் தனியே நிற்பதுபோல கொடுந்துயரம் தாக்கியது. முகம் இறுக வலியை விழுங்கிக்கொண்டான் வெற்றி.

தொடரும்......!

கோபிகை


ஆசிரியர் பீடம்
தமிழருள் இணையத்தளம்

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.