மெல்லப் பேசு ....மின்னல் மலரே...!! பாகம் 7

நீ சோகத்தில் உருக
நான் விடமாட்டேன். 
துயரில் கரைவது நீயல்ல,
நானடி பெண்ணே. அன்று மாலை வேளையே அப்பாவின் அருகில் வந்து அமர்ந்துகொண்டான் வெற்றி. அவன் செய்ய வந்தது என்னவோ, ஆனால் அதைவிட்டுவிட்டு, அவளைப் பற்றிய விடயங்களை அறிய முயன்றான்.

“அப்பா ...அந்தப் பெண் கனி?”

“வெற்றி, அவளைப்பற்றி நிறைய விசயங்கள் எனக்குத் தெரியாது. ரெண்டு நாளைக்கு முதல்தான்  இங்க வந்துசேர்ந்தா. ஆனா, அவளிட்ட   ஒரு கடிதம் இருந்தது. அது அவளின்ர  அம்மா எழுதின கடிதம், உன்ர அம்மாவும் அவவும் தோழிகள். அவவுக்கு கலியாணம் நடந்தபோது நாங்கள் தான், நானும் அம்மாவும்தான் எல்லாத்தையும் எடுத்துச்செய்தனாங்கள். அவவுக்கு உன்ர அம்மாவை நல்லாப்பிடிக்கும். கோயிலுக்கு தொடங்கி சந்தைக்கு வரைக்கும் ரெண்டுபேரும் ஒண்டாத்தான் போய்வருவினம். ஆனால் கலியாணமான  சில மாசத்திலயே, ஏனோ அவனின்ர பழக்கவழக்கம் மாறிப்போட்டுது.

ஊர் மாறி வேலைக்குப் போன இடத்தில, அவனுக்கு வேற ஒருத்தியைப் பிடிச்சிட்டதால கனியின்ர அம்மாவை சரியா கொடுமைப்படுத்தினான். இது எனக்கு தெரியவரேக்கை அவ இந்த ஊரைவிட்டே போய்விட்டா.  தான் ஒரு உயிரைச் சுமந்துகொண்டு போறா எண்டு யாருக்கும் தெரியாது. உன்ர அம்மாட்டையும் அவ எதையும் சொல்லாமல் கணவன்ர கௌரவத்தை காப்பாத்திவிட்டிட்டா.

அதுக்குப்பிறகு நானும் அம்மாவும் பல இடங்களில அவைவை விசாரிச்சுப் பாத்தம், எந்த தகவலும் கிடைக்கேல்ல, அவரும் வேற கலியாணம் செய்திட்டார் எண்டு அறிஞ்சம், அம்மா கொஞ்ச நாள் பித்துப் பிடிச்ச மாதிரி இருந்தா, அப்ப உனக்கு ஐஞ்சு வயசிருக்கும், சில நாளில தங்கச்சி வரப்போற விசயம் தெரிஞ்சது, அந்த சந்தோசத்தில அம்மா மெல்ல மெல்ல தோழியின்ர பிரிவை மறந்திட்டா, எப்பவாவது ஞாபகம் வரேக்க கதைப்பா, சிலநேரம் அழுவா, நானும் ஒரு மாதிரி தைரியம் சொல்லி ஆறுதல்படுத்தி விட்டுவிடுவன். அதுக்குப் பிறகு, காலம் ஓடிப்போட்டுது, அம்மாவையும் கெதியில கொண்டுபோட்டுது,”  அப்பா கலங்கிப்போகவும் அவன் அவரருகில் வந்து அமர்ந்து, தந்தையின் கரம் பற்றிக்கொண்டான்.

“அந்த குழந்தை?” அவன் மென்றுமுழுங்கி தவித்துப்போய் கேட்க, அவரோ சாதாரணமாக, “அவ குழந்தைதான் போல, நான் அதைப்பத்தி எதுவும் கேக்கயில்ல,” என்றவர்,  

“வெற்றி, அவ வாழ்க்கையில நிறைய வலிகளைக் கண்டிருப்பா போல, ரொம்ப வேதனையா பேசினா, சமீபத்திலதான் தன்னுடைய அம்மாவை அவ பறி குடுத்திருக்கா. தனிய நிக்கிறா, அவங்க அம்மாதான், இங்க போகச்சொன்னதாகவும் தன்னுடைய கடிதத்தை உன் அம்மாட்ட குடுக்கச் சொன்னதாகவும் சொன்னா,

அந்தக்கடிதம், 'அவளோட அம்மா, தன் தோழிக்கு எழுதின கடிதம், தன் மகளுக்கு ஒரு நல்ல பாதுகாப்பை அமைச்சுக்குடு என்று ரொம்ப வேண்டி கேட்டிருந்தா, பாவம் நோயோட போராடி இறந்திருக்கிறா, 
உன் அம்மா இல்லை என்றதை சொன்னதும், கனி ரொம்பவே உடைஞ்சுபோனா, ஆனா, ஒரு சொட்டு கண்ணிர் கூட அவளுடைய கண்ணிலிருந்து வரவில்லை,  தன் தாயை இழந்த வேதனையோட இந்த ஏமாற்றமும் அவளை நிறையவே பாதிச்சிருக்கும் தானே.  அவ போறேன்னுதான் சொன்னா, நான் தான், எனக்கும் ஒரு துணையா இருக்கும், உன் அப்பாவா நினைச்சு இங்கயே இருன்னு சொன்னேன், தங்கிட்டா, இண்டைக்கு உங்களட்ட சொல்லலாம் எண்டுதான் நினைச்சன், அதுக்குள்ள நீயே வந்து நிக்கிறாய், ஏன், வெற்றி இதில உனக்கு ஏதாவது ?”

“ஐயோ,....எனக்கு எந்த பிரச்சினையும் இல்லப்பா, பாடினிக்கு நான் சொல்றன், அவ எதுவும் சொல்லமாட்டா, உங்களை கவனமா பாக்கிறதை விட்டிட்டு படிக்க வெளிநாடு போனதை நினைச்சு கவலைப்பட்டுக் கொண்டிருந்தா. இதைக்கேட்டா சமாதானமாகி படிப்பா, என்றவன், "அவளுடைய கணவன் வந்து கூட்டிப்போற வரைக்கும் அவ இங்கயே இருக்கட்டும் அப்பா" என்றான். 

அவளது வாழ்க்கையில் நடந்த துயரத்தை அறிந்ததும் நொறுங்கிப் போனான், வெற்றிமாறன். ‘அவனது தேவதை துயரங்களால் வார்க்கப்பட்டவளா? அதனால் தான் அவளது முகத்தில் அந்த ஆழ்ந்த அமைதியா? அதற்குள் யாரோ ஒருவனைத் திருமணம் செய்து வாழ்க்கையை சரியாக வாழமுடியாமல், போக்கிடம் அற்று தஞ்சம் என்று அவனது வீட்டிற்கே வந்திருக்கிறாளா? 

இதயத்தை சம்மட்டிகொண்டு பல பேர் அடிப்பதுபோல வலித்தது. அவன் மனதில் முதல்முதலாக காதல் என்ற இனிய உணர்வு அவளிடம்தானே உதித்தது. அதிகமாக இல்லாவிட்டாலும் எப்பவாவது அவளைப்பற்றிய கற்பனைகள் அவன் மனதில் சிறகுவிரித்தது உண்மைதானே, முதல் முதலாக தான்கண்ட அவளது தோற்றத்தை கணினியில் ஓவியமாக்கி முகப்பில் பதித்திருந்தான்.

என்றாவது அவளைக் காணும்போது,  தன் காதலைச் சொல்லும்போது காட்டவேண்டும் என நினைத்து செய்துவைத்தது. சில நாட்களில், எல்லை மீறிய அவனது கற்பனைகளில் அவர்களுக்கு குழந்தைகூட உள்ளதே, எப்படி? இப்படி ஒரு விதி?‘  மனம் கனக்க எழுந்து உள்ளே சென்றான். 
அன்றிரவு முழுவதும் உறக்கம் வரவில்லை அவனுக்கு, தலையணை தாயானாது, எவ்வளவோ தடுக்க நினைத்தும் கண்கள் கண்ணீரை வெளியேற்றியே விட்டன. அந்தக் கண்ணீர் தனக்காகவா, அவளுக்காகவா என்பது அவனுக்குப் புரியவில்லை. அங்கிருந்து அவளைக் காணும் போதெல்லாம் மனம் ரணமாய் கொதிக்கும் என்பதை உணர்ந்தவன், உடனே சென்றுவிடுவதே சரி என முடிவுசெய்தான். 

அப்பாவைத் தன்னோடு  கூட்டிச்செல்ல வந்தவன், மறுநாளே எதுவும் சொல்லாமல் புறப்பட்டுச் சென்றுவிட்டான். அதன் பின்னர் சில மாதங்கள், அவன் அந்தப் பக்கம் வரவேயில்லை. முழு மூச்சாக தொழிலில் மூழ்கிவிட்டிருந்தான். பதவி உயர்வும், வேறு தொழிலில் பங்குதாரர் என்றும் அவனது வளர்ச்சிப்படியில் அவன் சென்று கொண்டிருந்தான். அப்பாவோடு போனில் கதைத்துக் கொள்வான். அவளைப்பற்றி கேட்கவேண்டும் என மனம் துடித்தாலும் வலியை வாங்கிக் கொள்வானேன், அப்படி ஏதாவது என்றால் அப்பாவே சொல்வார் தானே என நினைத்து பேசாமல் விட்டுவிடுவான்.

தொடரும்.....

கோபிகை.ஆசிரியர்பீடம்
தமிழருள் இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.