இலங்கை தமிழரின் கண்ணீருடனான சாதனை கதை!!

இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்து அந்நாட்டின் புகழ்மிக்க மருத்துவராக உயர்ந்திருக்கிறார் இலங்கை தமிழரான உமேஸ்வரன் அருணகிரிநாதன்.
குறிப்பாக புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கிடையே பரவலாக அறியப்படும் இதயமாற்று அறுவை சிகிச்சை நிபுணரான உமேஸ்வரனின் வாழ்க்கை பயணத்தை அறிவதற்காக பிபிசி அவரிடம் பேசியது.

உமேஸ்வரனின் பெற்றோருக்கு ஐந்து குழந்தைகள்; இரண்டாவது குழந்தையான இவர்தான் குடும்பத்தின் முதல் ஆண் குழந்தை. இவருக்கு ஒரு அக்கா, இரண்டு தங்கைகள் மற்றும் ஒரு தம்பி என பெரிய குடும்பமாக உற்றார் உறவினர் சூழ யாழ்ப்பாணம் அருகேயுள்ள புத்தூரில் வாழ்ந்து வந்தனர்.

எனக்கு அப்போது எட்டு வயதிருக்கும். அப்போது, எனக்கு உள்நாட்டுப் போரின் தீவிரமும், அர்த்தமும் தெரிந்திருக்கவில்லை. அந்த சமயத்தில்தான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ராணுவத்தால் கொல்லப்பட்ட ஒருவரை பார்க்க நேர்ந்தது.

எங்களது வீட்டருகே நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தவரை பார்ப்பதற்காக நாங்கள் சென்றிருந்தபோது, எனது கண்களை அம்மா கையால் மூடிக்கொண்டார். ஆனால், எப்படியோ கண்ணை கொஞ்சம் திறந்து படுகாயங்களுடன் உயிரிழந்திருந்த அந்த நபரை பார்த்துவிட்டேன்.



அன்றைய தினம் முதல் இன்றுவரை அந்த காட்சிகள் மனதில் ஓடும் போதெல்லாம் உடல் முழுவதும் வியர்க்கிறது; தூக்கம் பறிபோகிறது; பயம் படருகிறது" என்று உள்நாட்டுப் போரின் வீரியத்தை உணர்ந்த நாள் குறித்து உமேஸ்வரன் விளக்குகிறார்.

உள்நாட்டுப் போரின்போது இலங்கை ராணுவத்தினால் பயன்படுத்தப்பட்ட ஹெலிகாப்டர்களை தாங்கள் முதலை என்று அழைத்ததாக கூறும் உமேஸ்வரன், தனக்கு சுமார் பத்து வயதிருக்கும்போது, தங்களது குடியிருப்பு பகுதிகளை சுற்றி வளைத்த ராணுவம் முதலைகளை (ஹெலிகாப்டர்களை) கொண்டு குண்டு மழையை பொழிந்ததாக கூறுகிறார்.

முதலில் எங்களது பகுதியை வட்டமிட ஆரம்பித்த முதலையை பார்த்த அம்மா, முன்னெச்சரிக்கையாக எங்கள் ஐந்து பேரையும் வீட்டருகே இருந்த மரத்தினடியில் எங்களை தனித்தனியே உட்கார வைத்தார். அருகிலுள்ள வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது குழந்தைகளை கூடவே வைத்திருந்த நிலையில், எனது அம்மாவின் செயல் அப்போது எனக்கு கோபமூட்டியது. ஆனால், இப்போதுதான் அதன் முக்கியத்துவம் புரிகிறது.

இப்படி போரின் காரணமாக நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி கொண்டிருக்க, மற்றொரு புறம் ஒரு சிறுநீரகம் செயலிழந்ததாலும், போதிய சிகிச்சை அளிக்க வசதி இல்லாததாலும் எனது அக்கா உயிரிழந்துவிட்டார். அவரது மறைவு எங்களுக்கு பேரிடியாக அமைந்தது. அப்போது, 'நீ நல்லா படிச்சு மருத்துவர் ஆகணும், நம்ம வீட்லயே ஒரு மருத்துவர் இருந்தா இந்த மாதிரி நடக்காம பாத்துக்கலாம்' என்று என்னிடம் அம்மா கூறியதே நான் பல்வேறு தடைகளையும் கடந்து மருத்துவராவதற்கு அடிப்படை" என்று உமேஸ்வரன் கூறுகிறார்.


அதே சூழ்நிலையில், ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த உமேஸ்வரனின் ஆசிரியர்கள் போரின் காரணமாக பள்ளிக்கு வராததாலும், இவரது பெற்றோர்கள் அனுப்ப விரும்பாததாலும் கல்வி அதோடு தடைபட, குடும்பத்தின் வறுமை நிலையை கருதி மண்ணெண்ணெய் வாங்கி விற்று வீட்டிற்கு உதவியதாக அவர் மேலும் கூறுகிறார்.

பின்னர் போர் காரணமாக உமேஸ்வரனை அவர் தாய் அக்கம்பக்கத்தினரிடம் பேசி, ஜெர்மனிக்கு அனுப்புவதற்கு திட்டமிட்டதாக கூறுகிறார்.

ஜெர்மனிக்கு கொழும்பிலிருந்துதான் செல்ல முடியுமென்பதால், நானும் அம்மாவும் யாழ்ப்பாணத்திலிருந்து காலடியாகவும், லாரி, பேருந்து, ரயில் போன்றவற்றின் மூலமாகவும் போர் நடைபெற்று கொண்டிருந்த பல்வேறு பகுதிகளையும், ராணுவத்தின் பரிசோதனைகளையும் தாண்டி எட்டு நாட்களில் கொழும்பை சென்றடைந்தோம்.

தற்காலத்தில் கூகுளில் சொடுக்கிய அடுத்த நிமிடமே எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. ஆனால், அப்போது சரியான முகவரை தேடி கண்டுப்பிடிப்பதும், முடிவுகளை எடுப்பதும் மிகவும் கடினமான காரியமாக இருந்தது. தங்குவதற்கு வீடின்றி வாகன நிறுத்துமிடத்தில் தங்கி எனக்கு தேவையான பாஸ்போர்ட், ஜெர்மனிக்கு அழைத்து செல்வதற்கு உதவும் முகவர் போன்றவற்றை இறுதி செய்வதற்கும், எனது வருகை குறித்து ஜெர்மனியில் இருக்கும் எனது தாய் மாமாவிடம் இசைவுபெறுவதற்கு ஆறு மாதங்களாகி விட்டது.

எழுப்பி, நான் தனியாக வெளிநாடு செல்லவுள்ளதாக தெரிவித்தார். ஆனால், அம்மா என்னுடன் வரவில்லை என்று தெரிந்ததும், நான் அழத் தொடங்கிவிட்டேன். அம்மா உடனடியாக என்னை சமாதானப்படுத்தியதுடன், 'எக்காரணம் கொண்டும் ரகசியம் வெளியிட கூடாது, குடிப்பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது', 'நன்றாக படித்து டாக்டராக வேண்டும்' உள்ளிட்ட விடயங்களை விளக்கினார்" என்று தனது நினைவலைகளை பட்டியலிடுகிறார் உமேஸ்வரன்.


12 வயதில் கண்ணீருடன் இலங்கையிலிருந்து தன்னந்தனியாக புறப்பட்ட உமேஸ்வரனின் ஜெர்மனியை நோக்கிய பயணம் முடிவடைவதற்கு ஆறு மாதங்களானது. ஆம், முன்பின் தெரியாத பத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களுடன் முதலில் கொழும்புவிலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற அவர், இரண்டு வாரங்களுக்கு ஒரே அறையில் அடைக்கப்பட்டு அங்கிருந்து, துபாய் வழியாக கானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஜெர்மனிக்கு வர வேண்டிய நான், துளியும் சம்பந்தமில்லாத பல்வேறு நாடுகளுக்கு அடுத்தடுத்து அழைத்துச் செல்லப்பட்டது எனக்கு பயத்தை உண்டாக்கியது. ஆனால், கானாவுக்குள் வந்திறங்கி, என்னைவிட கருப்பான மக்களை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ஏனெனில், எனக்கு சிறுவயதிலிருந்தே 'நான்தான் ரொம்ப கறுப்பு' என்று நினைத்திருந்த நிலையில், எனக்கு இது மிகவும் ஆச்சர்யமானதாக இருந்தது" என்று உமேஸ்வரன் கூறுகிறார்.

கானாவில் உமேஸ்வரன் அழைத்து செல்லப்பட்ட இடத்தில் ஏற்கனவே 200க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் இருந்தனர். இந்நிலையில், ஒரே இடத்தில் மூன்று மாதங்களுக்கு மேலாக இருந்த நிலையில், அருகிலுள்ள டோகோ நாட்டிற்கு கானாவின் எல்லை வழியே சட்டவிரோதமாக முகவர் செல்லுமாறு கூறியதாகவும், அதன் பிறகு மீண்டும் ஒரு மாதம் கழித்து பழைய இடத்திற்கே வந்ததாகவும் உமேஸ்வரன் கூறுகிறார்.

இடைப்பட்ட காலத்தில் எனக்கு 13 ஆகியது. என்னுடைய காத்திருப்பு நேரம் அதிகமானதால், ஒரு நாளைக்கு இரண்டு வேளை மட்டுந்தான் உணவு தர முடியுமென்று முகவர் கூறிவிட்டார். நான் தவித்தது ஒரு புறமிருக்க, என் தாய்-தந்தை-சகோதர, சகோதரிகள் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்பது கூட தெரியாமல் நான் பரிதவித்தேன். இந்நிலையில், மீண்டும் அங்கிருந்து நைஜீரியாவுக்கு அழைத்துச் சென்றார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

நைஜீரியாவின் லாகோஸ் நகரில் சுமார் இரண்டு வாரகாலம் இருந்த உமேஸ்வரன், பின்பு போலி விசா மூலம் ஸ்பெயின் வழியாக ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரை சென்றடைந்தார்.

போலி விசாவின் மூலமாக நைஜீரியாவிலிருந்து புறப்பட்ட உமேஸ்வரன், அதே விசாவுடன் ஜெர்மனியில் தரையிறங்கினால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் தனது முகவர் சொல்லி கொடுத்தபடி, அந்த விமானத்தில் பயணித்த இலங்கை தமிழர்கள் ஒன்றன் பின்னொன்றாக கழிவறைக்கு சென்று தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை கிழித்து போட்டுவிட்டு வந்ததாக உமேஸ்வரன் கூறுகிறார்.

பாஸ்போர்ட்டை கிழித்து போட்டவுடன், ஜெர்மனியில் தரையிறங்கியதும், 'என் உண்மையான பெயரை எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது' உள்ளிட்ட முகவர்கள் அளித்த வழிமுறைகளை மனதில் நிலைநிறுத்திக் கொண்டேன். பிராங்க்பர்ட் விமான நிலையத்தை வந்தடைந்தவுடன், மற்ற பயணிகளை போல வெளியேறினோம். விமான நிலையத்திலிருந்து ஒவ்வொருவராக வெளியே சென்றுவிடலாம் என்று அந்த விமானத்தில் பயணித்த நாங்கள் அனைவரும் திட்டமிட்டிருந்த நிலையில், நான் என்னையே அறியாமல் நன்றாக தூங்கிவிட்டேன்.

தூங்கி எழுந்து பார்த்ததும், ஜெர்மானிய காவல்துறை அதிகாரி ஒருவரும், மொழிபெயர்ப்பாளராக தமிழர் ஒருவரும் இருந்தனர். இலங்கை உள்நாட்டுப் போரின்போது நான் நேரில் கண்ட விடயங்கள், அந்த காவல்துறை அதிகாரியை பார்த்ததுமே அச்சமடைய வைத்தது. ஆனால், அவர்கள் ஆச்சர்யமளிக்கும் வகையில், என்னிடம் மிகவும் பணிவாக நடந்துக்கொண்டனர். என் பெயர் உள்ளிட்ட சில விவரங்களின் ரகசியத்தை காத்தாலும், என்னுடைய அவலநிலையை எடுத்து கூறினேன்.

ஆச்சர்யமளிக்கும் வகையில், அந்த காவல்துறை அதிகாரி என்னைப் பார்த்து புன்முறுவல் செய்துவிட்டு, சாக்கலேட் ஒன்றை அளித்தார். அது எனக்கு மிகுந்த நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. பிறகு, என்னை போன்ற சிறுவர்களை வைத்திருக்கும் அறைக்கு அழைத்து சென்று, பீட்சா போன்ற உணவுகளை கொடுத்தனர். என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக அப்போதுதான் பீட்சாவை சாப்பிட நேர்ந்தது; ஆனால், எனக்கு அது சுத்தமாக பிடிக்கவில்லை.

இந்நிலையில், ஜெர்மனியில் இருக்கும் என் மாமாவின் அலைபேசி எண்ணை விமான நிலைய அதிகாரிகளிடம் கொடுக்க அவரை வரவழைத்து தகுந்த ஆவணங்களை சரிபார்த்த பின் அவரது வீட்டிற்கு என்னை அனுப்பி வைத்தனர்" என்று உமேஸ்வரன் விளக்குகிறார்.

தமிழை தவிர்த்து வேறெந்த மொழியிலும் அப்போது புலமை இல்லாத உமேஸ்வரன், ஜெர்மன் மொழி பெரும்பான்மையாக இருக்கும் அந்நாட்டிற்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்வதற்காக ஆறு மாதங்கள் மொழிப் பயிற்சியை பெற்ற பிறகு, நேரடியாக ஏழாவது வகுப்பில் சேர்க்கப்பட்டார்.

நிலையான முன்னேற்றமும், திடீர் வீழ்ச்சியும்

ஏழாம் வகுப்பு முதல் ஜெர்மன் மொழி மட்டுமின்றி, அதன் மக்கள், வாழ்க்கைமுறை, பழக்க வழக்கங்கள், உணவு முறை போன்றவற்றை படிப்படியாக கற்றுக்கொண்டு வந்த உமேஸ்வரனுக்கு 9ஆம் வகுப்பு படிக்கும்போது அவரது வாழ்வின் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நடந்ததாக கூறுகிறார்.

9ஆம் வகுப்பு படிக்கும்போது ஜெர்மன் மொழியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உரையாட கற்றுக்கொண்ட சமயத்தில், எனது வகுப்பிற்கான மாணவ தலைவனை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் ஆறாம் வகுப்பு வரை படித்த நான் வகுப்பின் மாணவ தலைவனாகவும் செயல்பட்டதை போன்று, இங்கேயும் இருக்க விரும்புகிறேன் என்று தெரிவிக்க, வகுப்பின் தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமின்றி, அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு எங்களது ஒட்டுமொத்த பள்ளியின் தலைவனாகவும் விளங்கினேன்.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி வாழ்க்கையில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் செயல்பட்டு கொண்டிருந்த நிலையில், நான் பத்தாம் வகுப்பு படித்த முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்று ஜெர்மானிய அரசிடமிருந்து உத்தரவு வந்ததை கண்டு அதிர்ந்துவிட்டேன். ஒருகட்டத்தில் மொட்டை மாடிக்கு சென்று, தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு சென்றுவிட்டேன்.

பின்பு, எனது அம்மா பட்டப் பாட்டையும், நான் ஜெர்மனியை அடைவதற்கு பட்ட வேதனையையும் நினைத்து பார்த்தேன். மறுதினம் பள்ளிக்கு சென்று அனைவரிடமும் இந்த தகவலை பகிர்ந்து கொண்டேன். அதைத்தொடர்ந்து, பள்ளியில் என்னுடன் படித்தவர்கள், ஆசிரியர்கள் என பலரும் இணைந்து பணம் திரட்டி அரசின் முடிவை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தோம்.

நாங்கள் மேற்கொண்ட முதல்கட்ட முயற்சியின் காரணமாக பள்ளிப்படிப்பை முடிக்கும் வரை ஜெர்மனியில் இருப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஹம்பர்க் நகர மாணவ தலைவர்கள் குழுவில் ஒருவனான என்னை, அம்மாகாணத்தின் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு விடுத்தனர். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட நான், என் வாழ்க்கை பயணத்தை விளக்கியதுடன், நான் ஜெர்மனிலேயே இருப்பதற்கான அனுமதியை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தினேன்" என்று தனது பள்ளி வாழ்க்கையின் முக்கிய தருணங்களை விவரிக்கிறார் உமேஸ்வரன்.

ஹம்பர்க் மாகாண நாடாளுமன்றத்தில் உமேஸ்வரனது உரையை கேட்டவர்கள், அவரை தொடர்ந்து ஜெர்மனிலேயே தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தனர். அதன் ஒருபகுதியாக, பள்ளிப்படிப்பை முடித்த அவரது கனவான மருத்துவத்தில் சேர்ப்பதற்கு உதவியது மட்டுமின்றி, அவரை தற்காலிகமாக டென்மார்க் அனுப்பி, அங்கிருந்து பல்கலைக்கழக படிப்பை படிப்பதற்காக மாணவர் விசாவுக்கு விண்ணப்பிக்க வைத்து, அவரை மீண்டும் ஜெர்மனிக்கு வரவழைப்பது வரையிலான பல்வேறு உதவிகளை ஆசிரியர் ஒருவர் தானே முன்னின்று செய்ததாக அவர் கூறுகிறார்.

1999ஆம் ஆண்டு நான் எனது மருத்துவப் படிப்பை தொடங்கினேன். என்னுடைய படிப்பு முதல் தங்குமிடம், இலங்கையில் வாழும் குடும்பத்தினருக்கு உதவி செய்வது வரை அனைத்திற்கும் தேவையான பணத்தை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டே பகுதிநேரமாக பணி செய்து சம்பாதித்தேன். எனது படிப்பின் கடைசி ஆறு ஆண்டுகள் நான் படித்த பல்கலைக்கழகத்திலேயே பகுதிநேரமாக பணிபுரியும் வாய்ப்பும் கிடைத்தது. படிப்பு, இரவுநேரத்தில் பணி என்று இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ததால், ஆறாண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை நான் எட்டாண்டுகளில் முடித்தேன்.

அதன் பிறகு, இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கான பயிற்சியை கடந்த பதினோரு ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த நான், இனவெறி உள்ளிட்ட பல்வேறு தடைகளையும் தாண்டி, இம்மாத தொடக்கத்தில் எனது பட்டத்தை பெற்றுள்ளேன். இதன் மூலம் என்னுடைய தனிப்பட்ட கனவு மட்டுமின்றி, எங்களது ஒட்டுமொத்த குடும்பத்தினரின் கனவும் நிறைவேற்றியுள்ளது" என்று பெருமையுடன் கூறுகிறார் உமேஸ்வரன் அருணகிரிநாதன்.

இலங்கை உள்நாட்டுப் போர் முதல் ஜெர்மனியின் புலம்பெயர்ந்தவர்கள் சமுதாயத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாளராக உயர்ந்தது வரையிலான தனது வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து, உமேஸ்வரன் இதுவரை இரண்டு புத்தகங்களை ஜெர்மானிய மொழியில் எழுதியுள்ளார்.

"மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற எனது புத்தகங்கள் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் நான் பேசியதை கேட்ட ஜெர்மன் நாட்டின் உள்துறை அமைச்சர், அந்நாட்டு அதிபர் தலைமையில் நடைபெறும் அகதிகள் தொடர்பான நிகழ்ச்சியில் என்னை சிறப்புரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

அதன்படி, சென்ற ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான விழாவில், 'நான் பார்ப்பதற்குதான் வேறொரு நாட்டை சேர்ந்தனாக தெரிகிறேன்; ஆனால், உள்ளுக்குள்ளே நான் ஜெர்மானியன்; அது என்னுடன் பழகினால்தான் தெரியும்' என்ற பொருளை உதாரணத்துடன் விளக்கினேன். அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் என்னிடம் பேசிய ஜெர்மன் அதிபர் ஏங்கலா மெர்கல், என்னை வெகுவாக பாராட்டினார்."

எனது வாழ்வின் ஒட்டுமொத்த வெற்றிக்கும் காரணமான எங்களது அம்மா, என்னுடைய இரு தங்கைகள் மற்றும் ஒரு தம்பியை பெரும்பாடுபட்டு நல்ல நிலைக்கு கொண்டுவந்தார்; தற்போது அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் குடிமகன்களாக உள்ளனர்.

ஆனால், பல்வேறு காரணங்களினால், எங்களது அம்மாவை நான் இலங்கையிலிருந்து கிளம்பிய 15 ஆண்டுகளுக்கு பிறகு சகோதர, சகோதரிகளுடன் இணைந்து 2005ஆம் ஆண்டுதான் லண்டனில் சந்திக்க முடிந்தது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.