மக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்!!

இஸ்லாமியர்களின் புனித நகரான மக்காவை நோக்கி பாய்ந்த இரண்டு ஏவுகணைகளை, சவுதி அரேபிய ராணுவம் தகர்த்துள்ளது. ஆனாலும், அடுத்தடுத்து தாக்குதல் நிகழ்த்தப்படலாம் என்பதால், அங்கு உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.


ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. இதில், ஏமன் அதிபர் மன்சூர் ஹதிக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகள், கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போர்புரிந்துவருகின்றன. ஹவுத்திப் புரட்சியாளர்களின் பெரும்பாலானோர், ஷியா முஸ்லிம்கள் என்பதாலும் செங்கடல், அரேபியக் கடல்களை ஏமன் பெற்றிருப்பதாலும், பூகோள அரசியலை மையப்படுத்தி ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு ஈரான் அரசு ஆதரவளிக்கிறது. ஆயுதங்கள், பயிற்சிகள் அளிக்கிறது.

அவ்வப்போது ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் சவுதி ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை வெடிக்கும் நிலையில், கடந்த மே     14-ம் தேதி, சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைனை, தானியங்கி விமானம் மூலம் ஹவுத்திப் புரட்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர். அஃபிப், அல்-டவுத்மி ஆகிய பகுதிகளில் செல்லும் பைப் லைன்மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலால், சவுதிக்கு கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, ஏமன் தலைநகர் சனா மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தின. இந்நகரம், ஹவுத்திப் புரட்சியாளர்கள் வசமுள்ளது.

இந்நிலையில், இன்று (மே 20-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, சவுதி அரேபிய நகரமான டைப் மீது பறந்த ஏவுகணை ஒன்றை, சவுதி ராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணைகள் இடைமறித்துத் தகர்த்து எறிந்தன. அந்த ஏவுகணை, இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை நோக்கித்தான் ஏவப்பட்டதாக, சவுதி அதிகாரிகள் கூறினர். அடுத்த சில மணிநேரங்களிலேயே மீண்டும் ஓர் ஏவுகணையை ஹவுத்திப் புரட்சியாளர்கள் ஏவினர். ஜெட்டா நகர்மீது அந்த ஏவுகணை பறந்தபோது, சவுதி விமானப்படையால் இடைமறித்து அழிக்கப்பட்டது. இந்த ஏவுகணையும் மெக்காவை குறிவைத்தே ஏவப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரமலான் நோன்பு கடைப்பிடிக்கப்படும் இந்நேரத்தில், புனித கஃபா இருக்கும் மெக்காவை நோக்கி ஹவுத்திப் புரட்சியாளர்களின் ஏவுகணைகள் பாய்ந்துள்ளது, சவுதி அரேபியாவில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஏவுகணைகளை ஈரான் ராணுவம்தான் அளித்துள்ளதாக சவுதி குற்றம் சாட்டும் நிலையில், இதுவரை ஈரான் அரசிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. 'இந்த ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஈரான் இருப்பதாக உறுதியானால், அந்நாடு கடும் விளைவுகளைச் சந்திக்கவேண்டியதிருக்கும்' என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

No comments

Powered by Blogger.