மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 8!!

பட்டாம் பூச்சியே 
என் கைகளில் வந்தமர், 
மெல்ல சிறகு விரி, 
உலகத்தை ரசித்துப்பார். 


அன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் பத்து மணியாகியும் படுக்கையை விட்டெழாமல் படுத்திருந்தான் வெற்றி. எப்போதாவது ஓய்ந்திருக்கும் போது மனம் வெறுமையாக உணர்வதை அவனால் தடுக்கமுடியவில்லை. ‘அவள், தன்னுடைய வாழ்வில் இல்லையே‘ என நினைக்க மனமெங்கும் ஒரு இயலாமை படர்வதையும், இதயம் உருகி ஊமையாய் அழுவதையும் அவனால் தடுக்கமுடிவதில்லை. 

அவளது நினைவுகளில் அவன் வளர்த்த கற்பனைகள் எத்தனை, அவளோடு பேசிய வார்த்தைகளும் உறவாடிய நிமிடங்களும் தகிக்கச் செய்தது மனதையும் உடலையும். ‘அவளது தாய்மை அவளது பிரசவம், அவர்களின் மகவு என்று அவன் கட்டிய கற்பனைக் கோட்டையை இப்படி கண்முன்னே வந்து சிதைத்துவிட்டாளே, அவளைக் காணாமல் விட்டிருந்தால், அப்படியே கற்பனையில் வாழ்ந்திருப்பானே, மாற்றான் மனைவியான அவளை இப்போது நினைக்ககூட முடியாதே‘ மனமோ ஓலமிட்டு அழுது தொலைத்தது. 

முயன்று  கனிமொழியைப் பற்றிய நினைவுகளை அவன் தவிர்த்து விடுவான், இப்போது, தான், இயல்பாகி விட்டதாகவே நினைத்தான். இன்றும் அப்படித்தான், மெல்ல தலைதூக்கிய அவளது நினைவுகளை தவிர்த்துவிட்டு இந்த நினைவுகளே கூடாது என எண்ணியபடி, வேறு சிந்தனையில் எண்ணங்களைத் திசைதிருப்ப நினைத்தான். அவனது நினைப்பை உடைத்தெறிவதுபோல ஒலித்தது அவனது அலைபேசி.

புதிதாக ஒரு இலக்கத்தில் இருந்து தவறிய அழைப்பு வரவே, முதலில், ‘தேவையென்றால் யாரென்றாலும் எடுக்கட்டும்‘ என நினைத்து பேசாமல் விட்டுவிட்டான். சற்று நேரத்தில் மீண்டும் அதே இலக்கத்தில் இருந்து அழைப்பு, எடுத்து காதுக்கு கொடுத்தவன்,
 “ஹலோ!” என்றான் வேகமாய்,

எதிர்முனையில் மெல்ல ஏதோ அசைவது போன்ற ஒலியில், மீண்டும் அவன், கதைப்பதற்குள்,
 “ஹலோ, நான் கனிமொழி,” 

என்றதும் சர்வ நாடியும் உறைந்துபோனது அவனுக்கு, பேச நினைத்தபோதும் அவனுக்கு பேச்சு எழவில்லை. ‘இதென்ன, இப்படியெல்லாமா, உணர்வுகள் ஆட்டிப்படைக்கும்?‘  

அவளை மறந்துவிட்டதாகவும் தான், இயல்பாகி விட்டதாகவும் சற்று முன்னர், அவன் நினைத்துக் கொண்டதெல்லாம் வெறும் மாயம் தானோ? அவளது நினைப்பு அவனை விட்டுப் போகவில்லையோ? இதற்குள் அவள் பல தடவை “ஹலோ....” என்றுவிட்டாள்.
அவசரமாக தன்னைச் சரிப்படுத்திக்கொண்டவன், “என்ன ...என்னாச்சு?”  என்றான் பதற்றமாய்,

“இல்ல, அப்படி எதுவும் இல்ல, அப்பாவுக்கு கொஞ்சம் காய்ச்சல், ரெண்டு தரம் மருந்து எடுத்தார், ஆனா இன்னும் நிக்கேல்ல, எனக்கு பயமா இருக்கு, உங்களுக்கு சொல்லச் சொன்னேன், வேலையா இருப்பீங்க, ஏன் தொந்தரவுபண்ண, வேண்டாம், என்றுவிட்டார். அதுதான், என்னுடைய போனில எடுத்தேன், தொந்தரவுக்கு மன்னிச்சிடுங்கோ” என்றவளை அடிக்கவா, என்றிருந்தது அவனுக்கு, அவள் அவனுக்கு தொந்தரவாம், ...... 

தன்னைச் சமாளித்தபடி, “இல்லை, அப்பிடி எதுவும் இல்ல,  நான் இண்டைக்கே வர்றன், கவனமா பாத்துக்கொள்ளுங்கோ”, என்றவன், சற்றுநேரம் அமைதியாகிடவே அவள் அழைப்பை துண்டித்து விட்டாள்.

அவனுக்கு கோபமாக வந்தது, 'சற்று நேரம் பேசினாத்தான் என்ன, பிடிச்சா விழுங்கப்போறன்,' கோபப்பட்ட விசித்திரமான மனதை ‘இது என்ன வகை மனமோ‘ என எண்ணமிட்டபடி தானே மீண்டும் அழைப்பை எடுத்தான்.
அவளது குரலை வாங்கிக் கொண்டவன், “நன்றி” என்றான்.

“ஐயோ, நான்தான் நன்றி சொல்லவேணும்,” என்றவள், பேச்சை வளர்க்க விரும்பாமல், “சரி” என்றபடி போனை வைத்துவிட்டாள்.
உடனேயே காரில் புறப்பட்டுவிட்டான் வெற்றி. அப்பாவுக்கு காய்ச்சல் என்றதும் மனம் ஒருகணம் பதறவே செய்தது. கனிமொழி நன்றாக பார்த்துக் கொள்வாள் என்றாலும் அவன் அருகில் இருந்து கவனிப்பது போல வருமா? அப்பா,  எங்களுக்காகவே வாழ்ந்தவர், நினைத்ததும் என்றுமில்லாமல் கண்ணில் நீர் கட்டியது அவனுக்கு.

வழிநெடுகிலும் அவளைப்பற்றிய சிந்தனைகளே அவனை வட்டமிட்டது. அவளைக் கண்டது முதல் தன் வீட்டிற்கே அடைக்கலம்கேட்டு வந்தது வரை அவனுக்குள் ஓடியது. ஒருவேளை இது கடவுளின் கணக்கோ? 

அவளை மறந்துவிட அவனால் முடியவில்லை, அவளைப் பிரித்துவிட கடவுளாலும் முடியவில்லையோ?அவளுக்கு திருமணமானதோ ஒரு குழந்தை இருப்பதோ அவனுக்கு பிரச்சினை அல்லவே, அவள் இரண்டாம் திருமணத்திற்கு சம்மதிக்கவேண்டும், அதுதான் தேவை, என்னைப் பார்த்தாலே நூறடி தள்ளி நிற்கிறாள், அவள் சம்மதிப்பாளா? ஏதேதோ எண்ணியபடி காரை ஓடிக்கொண்டிருந்தான் வெற்றி.



தொடரும்.......
கோபிகை


ஆசிரியர் பீடம்
தமிழருள்
இணையத்தளம்
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.