மகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை!

இங்கிலாந்தில், இம்மாதம் 30 -ம் தேதி தொடங்க இருக்கிறது உலகக் கோப்பை கிரிக்கெட்  தொடர்.
முன்னதாக, பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. இந்தத் தொடரில், பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்துள்ள  அதிரடி பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி, சிறப்பாக விளையாடினார். நான்கு போட்டிகளில் இரண்டு அரை சதங்கள் விளாசினார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்துக்கு புறப்படுவதற்கு முன்னதாக, அவர் தனது மகளை சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்ப உள்ளதாகவும், இதற்காக உதவியவர்களுக்கு நன்றி எனவும், எனது இளவரசிக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள் எனவும்  ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். ஆசிஃப் அலியின் இரண்டு வயது மகள், நூர் ஃபாத்திமா. இவர், அப்போது ஸ்டேஜ்  4 புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மகளை சிகிச்சைக்காக அமெரிக்கா அனுப்பிவைத்துவிட்டு, இங்கிலாந்து நாட்டுக்காக விளையாடிக்கொண்டிருந்தவருக்கு, நேற்று அந்த அதிர்ச்சிகரமான தகவல் கிடைத்தது.

புற்றுநோயுடன் போராடிக்கொண்டிருந்த அந்தக் குழந்தை இறந்துவிட்டது' என்ற தகவல் அது. இந்தச் செய்தி, ஒட்டுமொத்த பாகிஸ்தான் வீரர்களையும் உலுக்கியது. பாகிஸ்தான் சூப்பர் லீக்கில், அவர் இஸ்லாமாபாத் யுனைட்டெட் அணிக்காக விளையாடிவருகிறார். அந்த அணியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் இந்தத் தகவல் உறுதிசெய்யப்பட்டது. அவர்களின் ட்விட்டர் பதிவில்,  ``இஸ்லாமாபாத் குடும்பம் ஆசிஃப் அலிக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது. இது, அவருக்குப் பெரிய இழப்பாக இருக்கும். எங்களின் எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகள் எப்போதும் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் இருக்கும். தைரியம் மற்றும் வலிமையான மனதுக்கு அவர்  ஓர் உதாரணம்” என்று கூறியுள்ளது.

27 வயதான ஆசிஃப் அலி, 2018 -ம் ஆண்டு பாகிஸ்தான் அணியில் இடம் பிடித்தார். அதிரடியாக விளையாடும் இவர், உலகக் கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் இடம்பிடிக்கவில்லை. ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கி இரண்டு அரை சதம் அடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய தேர்வுக் குழு தலைவருமான இன்சமால் - உல் - ஹக், கடந்த மாதம், ஆசிஃப் அலி பாகிஸ்தான் அணியில் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லியிருந்தார். வரும் 23 -ம் தேதி வரை உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்ட  அணியில் மாற்றம் செய்யமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.   

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.