நிலைமாறு அரசியலில் ஈழத்தமிழர்களின் இன்னல்நிலை!!

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணோடு மண்ணாக தொலைத்த உறவுகளுக்காய் அழுது தீர்த்திருக்கிறோம், அவர்களின் நினைவுகளில் நுழைந்து திரும்பியிருக்கிறோம், தீபங்களை ஏற்றி தெய்வங்களாய் பூசித்திருக்கிறோம், ஆனால் இவை மட்டும் இந்த ஆத்துமாக்களுக்குப் போதுமா? 

இவற்றோடு எம் கடமைகள் முடிந்துவிட்டதா, 

உடல் சிதறி, மனம் துடித்த இந்த உறவுகளின் ஆத்மாக்கள் அவ்வளவு எளிதில் சாந்தியடைந்துவிடாது, அது அலைந்து தவித்துக்கொண்டிருக்கும், தனக்கான தனித் தேசத்திற்காய், தன் உறவுகளின் சுதந்திரத்திற்காய் ஊமையாய் அழுதுகொண்டிருக்கும். தான் வாழவேண்டிய நாட்களை, தன் அழகான  உணர்வுகளை பறித்துவிட்டவர்களை எண்ணி சபித்துக்கொண்டிருக்கும். தொலைத்துவிட்ட எம் உறவுகளின் விடுதலை வேட்கை ஒருபோதும் அழியாதது. அந்த ஆசையை நாம் நிராசையாக்கி விடலாகாது, 

வல்லரசுகள் திரண்டெழுந்து,   எதிராக நின்றால், ஒரு விடுதலைப் போராட்டத்தைச் சுவடின்றி அழித்துவிட முடியும் என்று  முள்ளிவாய்க்கால் நிரூபித்திருக்கிறது.  

அந்த மௌனிப்பு தோல்விக்கானதாய் அமைந்துவிடக்கூடாது.  பத்து ஆண்டுகளைக் கடந்தும் நாம் இன்னும் போராடிக்கொண்டுதான் இருக்கிறோம்,  எம் போராட்டம் உலகத்தின் செவிகளில்  இன்னும் விழுந்தபாடாக இல்லை, அரசியல் அடிமைகளாக்கப்பட்டு  அரசின் பிற்பாட்டாய் எம் அரசியல்வாதிகள்......

சொந்த நலன்களைப் பெரிதாக எண்ணிக்கொண்டு, அவரவர் கனவு,  அவரவர் இலட்சியம் என்று நாம் பிரிந்து நின்றால் தேச நலன் எப்படித் தழைக்கும், அதில் செம்பூக்கள் எப்படி பூக்கும், 

"போர் முடிவுற்றது, நாம் வெற்றி கொண்டோம்"  என மார்தட்டிக்கொண்ட ராஜபக்சக்களோ அதன் பின்வந்த அரசபீடமோ  இராணுவத்தை முழுதாய் அகற்றிவிடவில்லை, எம் வாழ்வியலை அமையாதியாக்கிவிடவில்லை, எம் பிள்ளைகளின் கல்வியில் உயர்ச்சியைத் தந்துவிடவில்லை, எம் கலாசாரத்தின் விழுமியங்களை உயர்த்தி வைக்கவில்லை, எம் நிலங்களை எமக்கே சொந்தம் என்று சொல்லிவிடவில்லை, 
மாறாக,  

தமிழ் மாணவர் கல்வியில் வீழ்ச்சி,  போதைப்பொருள் வியாபாரம், வாள் வெட்டு கும்பல், சொந்த நிலத்தின் சூறையாடல்,  பிள்ளையாரைக்கூட புத்தராக்க முயற்சி என பல வழிகளிலும் ஆதிக்கம் செலுத்தி இனத்துவேசத்தைக் காட்டியே வருகிறது.  இன்று வரை காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காய் போராடுகிறோம், சிறையில் வாடும் உறவுகளுக்காய் போராடுகிறோம், போதை ஒழிப்பிற்காய் போடுகிறோம், போராடிக்கொண்டே இருக்கிறோம். மனிதப் புதைகுழியைக் கூட  மறைத்துவிட்டது  அரசு, தன் ஆதிக்கத்தின் மூலம்., ஆண்டுகள் பலவற்றிற்கு முற்பட்டதென்று. 

தமிழனை வீழ்த்திவிட்டேனென்று உற்சாகப் பெருங்குரல் கொடுத்த கோட்டா,  அண்ணன் ஆண்ட நாட்டை மீண்டும் தானாளவேண்டும் என்ற கர்வத்தோடு அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார், அந்த அரசியல் நாடகத்தின் ஒரு கட்டமாகத்தான், ஈஸ்டர் தினத்து குண்டுவெடிப்பும் நிகழ்தேறியது. தமிழர்களின் உயிர்கள் என்பது ராஜபக்ஷக்களின்  எறி பந்தென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை, 

அதன் தொடர்ச்சியாய் வடபகுதி ஒரு பதற்ற சூழலுக்குள் தள்ளப்பட்டிருக்கிறது,  இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இலக்கு தமிழர்களாக இருந்ததென்னவோ உண்மைதான், ஆனால்  முஸ்லீம் மக்கள் தாக்கப்பட்டது  பெரும்பான்மை மக்களின் வாழ்விடத்திலேயே.  அதுவும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டிருந்த நிலையில். இச்செயற்பாடுகள்,  நாட்டை பதற்றமான சூழலுக்குள் வைத்துக்கொள்ள நடாத்தப்படும் சதி இது என்பது புரிகிறதல்லவா. 

வரலாற்றின் பாதையில் நாம் சற்று பின்னோக்கிச் சென்றால்,  பல விடுதலை வரலாறுகளைப் பார்த்தால் , ஒரு உண்மை புரியும். எப்போதும் எமது மக்களை வைத்தே தமது நலன் சார்ந்த அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் உலக வல்லரசுகளின் மனச் சாட்சியை உலுக்க வேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் எம்மிடமுண்டு. 

அன்றைய கால  சாம்ராஜ்யங்களோ இன்றையகால வல்லரசுகளோ தங்களுடைய தேவைக்கும் நலனுக்கும் ஏற்பவே நாடுகளை உருவாக்கத் துணைபுரிகின்றன. அவை நீதியை, நியாயத்தைப் பார்ப்பதில்லை என்பது ஆண்டுதோறும் அழுகின்ற எங்களுக்குப் புரியாதது  அல்லவே. ஒரு இனத்தின் ஆழ்நிலை உணர்வென்பது அதன் அரசியல் எல்லைக்கோட்டினைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றது. எமது மக்களின் சுயநிர்ணய உரிமை பற்றிய விவாதங்களை எமது அரசியல் தலைமைகள் முன்னெடுக்கமாட்டார்கள் என்பது கண்கூடு, தவிர, 

சாவு மணியடிக்கப்பட்ட பல போராட்டங்களே சரித்திரமாகியிருக்கிறது,   காஷ்மீர், வடஅயர்லாந்து, தென் ஆபிரிக்கா, பயாவ்ரா, பாஸ்க், , சூடான், கிழக்குதிமோர், திபெத்து ஆகிய நாடுகளின் விடுதலைப் போராட்டங்கள் மட்டுமல்ல,   பின்லாந்தும், வியட்நாமும், யூகோஸ்லாவியாவும், எரித்திரியாவும் கூட அப்படித்தான் நிலைத்திருக்கிறது.  

அரசியல் ரீதியான  சுதந்திரமும் அதன் வழிவரும் சமூக ஒற்றுமைப்பாடும் ஜனநாயக உரிமைகளும் சமனாகப் பகிரப்படாத, பகிரமுடியாத நிலை ஏற்பட்ட பொழுதே அரசியல் ரீதியில் தேசிய இனங்களின் “விடுதலைப் போராட்டங்கள்” தோற்றம் பெற்றிருக்கின்றன.   

அன்றைய கால ஏகாதிபத்தியங்களும் சரி, இன்றைய கால வல்லரசுகளும் சரி தமக்குத் தேவையான, தமக்குச் சாதகமான நாடுகளையே அங்கீகரிக்கின்றன, உருவாக்குகின்றன.


 காரிருள் சூழ்ந்த ஒரு அடர்ந்த பாதையில் நாங்கள் விடுதலை வெளிச்சம் காண பயணித்துக்கொண்டிருக்கின்றோம். 


தமிழரசி 

தமிழருள் ஆசிரியர்பீடம்  
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo




கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.