சிறுத்தைகள் மோதலில் காயமடைந்த சிறுத்தை!!

தமிழக, கர்நாடக எல்லையான சாம்ராஜ் நகர் வனப் பகுதியில் இரு சிறுத்தைகளிடையே நடந்த சண்டையில் 5 வயதுள்ள ஆண் சிறுத்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் நடக்க முடியாமல் எல்லையோரக் கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் செவ்வாய்க்கிழமை தஞ்சம் அடைந்தது. அந்த சிறுத்தையை மயக்க மருந்து செலுத்தி கர்நாடக வனத் துறையினர் பிடித்துச் சென்றனர்.

தமிழக- கர்நாடக எல்லையான ஈரோடு மாவட்டம், தாளவாடியை அடுத்துள்ளது ஒண்ணஹள்ளி கிராமம். இக்கிராமத்தில் மழை இல்லாததால் மானாவாரி நிலங்கள் தரிசு நிலமாக உள்ளன. இந்நிலையில், தமிழக- கர்நாடக வனப் பகுதியில் இருந்து வந்த சிறுத்தை ஒன்று ஒண்ணஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தது. அங்குள்ள மானாவாரி நிலங்களில் தலையில் காயத்துடன் நடக்க முடியாமல் தள்ளாடியது.

இதைப் பார்த்த கிராம மக்கள் சிறுத்தையை துரத்த முயன்றனர். உடனே சிறுத்தை மெதுவாக நகர்ந்து வாய்க்கால் பாதையில் தஞ்சம் அடைந்தது. சிறுத்தையைக் காண கிராம மக்கள் திரண்டு வந்தனர்.
இதுகுறித்து கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் வனத் துறைக்கு அப்பகுதி விவசாயிகள் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த வனச் சரகர் மாதேவய்யா தலைமையிலான வனத் துறையினர் சிறுத்தையின் நடவடிக்கையை கண்காணித்தனர். சிறுத்தையின் தலைப்பகுதியில் பலத்த காயம் இருந்ததால் அது நடக்க முடியாமல் தவிப்பதைப் பார்த்து அந்த சிறுத்தையைப் பிடித்து மருத்துவ சிகிச்சை அளிக்க முடிவுசெய்தனர். இதையடுத்து கர்நாடக கால்நடை மருத்துவர் நாகராஜ் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். மயக்க நிலையில் இருந்த சிறுத்தையைப் பிடித்து கூண்டில் வைத்து மைசூரு கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து கர்நாடக வனத் துறையினர் கூறுகையில், சிறுத்தைகளிடையே ஏற்பட்ட மோதலில் இந்த 5 வயதுள்ள ஆண் சிறுத்தைக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. அதற்கு உரிய சிகிச்சை அளித்து குணமான பின் மீண்டும் வனப் பகுதியில் விடப்படும் என்றார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.