நம்பிக்கையில்லா பிரேரணைகள் அவசியமற்றவை – சாகல!!

அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக செயற்பட வேண்டிய இந்த நேரத்தில், நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவந்து எவரும் கீழ்மட்ட அரசியலை மேற்கொள்ளக்கூடாது என்று அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.


மேலும், இவ்வாறான பிளவுகள் இறுதியில் மக்களையே பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் விசேட வேண்டுகோளிற்கிணங்க துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க இலங்கை துறைமுக அதிகாரச் சபைக்குச் சொந்தமான காணியை இன்று (புதன்கிழமை) பேராயரிடம் கையளித்தார்.

கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான விசேட பிரதிநிதி கர்தினால் பர்னாந்து பிலோமி ஆண்டகை மற்றும் இந்நாட்டு முன்னனி அரசியல்வாதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் தெரிவித்த அவர், “கொச்சிக்கடை தேவாலயத்துக்கும் கொழும்பு துறைமுகத்திற்குமிடையில் நீண்ட உறவு காணப்படுகிறது.

இந்த நிலையில், இலங்கையில் இடம்பெற்ற தாக்குதலையடுத்து நீண்ட கால குத்தகை அடிப்படையில் கொழும்புத் துறைமுகத்துக்கு சொந்தமான காணிகளை வழங்குமாறு பேராயர் கோரியிருந்தார். அதற்கிணங்க, நாம் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கான காணியை வழங்கியுள்ளோம்.

30 வருட கால யுத்தம் நிறைவுக்கு வந்ததையடுத்து நாம் 10 வருடங்கள் நாட்டில் நிம்மதியாக இருந்துவந்தோம். ஆனால், தற்போது வேறு விதமான பயங்கரவாத சவாலுக்கு நாம் அனைவரும் முகம் கொடுத்துள்ளோம்.

இதனுடன் சர்வதேச தொடர்புள்ளதா இல்லையா என்பதல்ல இங்குள்ள பிரச்சினை. எமது நாட்டிலுள்ள அடிப்படைவாதிகளால்தான் இந்த சம்பவங்கள் இடம்பெற்றன.

இதனை முறியடித்து பாதுகாப்பை பலப்படுத்த எமது பாதுகாப்புத் தரப்பினருக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் வழங்கிவருகிறோம்.

இதற்கான பொறுப்பு அனைத்து அரசியல்வாதிகளுக்கும் உள்ளது. நாடு என்ற ரீதியில் முன்னோக்கி பயணிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

எனவே, இதனை எவரும் அரசியலாகப் பார்க்கக்கூடாது. நம்பிக்கையில்லாத் தீர்மானங்களைக் கொண்டுவரும் கீழ் மட்ட அரசியலை நாம் மேற்கொள்ளக்கூடாது.

இதற்கான தீர்வினைக் காண்பதற்கான பல வழிமுறைகள் இருக்கின்றன. அந்தவகையில், விசாரணைகளும் சிறப்பான வகையிலேயே முன்னெடுக்கப்படுகின்றன.

மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். இதன் ஊடாகவே நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் ஸ்திரப்படுத்த முடியுமாக இருக்கும்.

அரசியல் ரீதியாக பிளவுகள் ஏற்பட்டால் மீண்டும் மக்களே பாதிக்கப்படுவார்கள். எனவே, ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என்று  அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.