விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் வழங்கும் நிகழ்வு !!!

இராணுவம், கப்பற்படை மற்றும் விமானப் படைகளின் நிரந்தர படையணிகளின் சிரேஷ்ட அதிகாரிகளினால் நிறைவேற்றப்படும் விசேட சேவைகளைப் பாராட்டும் முகமாக வழங்கப்படும் விசிஷ்ட சேவா விபூஷண பதக்கம் (சிறப்பான சேவைக்கான பதக்கம்) வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.


சிறப்பான சேவைக்கான பதக்கமானது விசேட விருதாக கருதப்படுவதுடன், லெப்டினன் கேர்ணல் மற்றும் அதனிலும் உயர்ந்த பதவிகளை வகிக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் கப்பல் மற்றும் விமானப் படைகளில் அதற்கு சமனான பதவிகளை வகிக்கும் 25 வருட கால தொடர்ச்சியான சேவைக் காலத்தையும் சிறப்பான சேவைப் பின்னணியையும் கொண்டவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டதன் பின்னர் உயிர்த்தியாகம் செய்த இராணுவத்தினருக்கு மரியாதை செலுத்தும் முகமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதன் பின்னர் பதக்கம் வழங்கும் நிகழ்வு ஆரம்பமானது.

முப்படைகளில் தற்போது சேவையாற்றும் மற்றும் இளைப்பாறிய அதிகாரிகள் 65 பேருக்கு இதன்போது ஜனாதிபதி அவர்களால் சிறப்பான சேவைக்கான பதக்கம் வழங்கப்பட்டது. இவர்களில் 40 இராணுவ அதிகாரிகள், 12 கடற்படை அதிகாரிகள் மற்றும் 13 விமானப் படை அதிகாரிகளும் உள்ளடங்குவர்.

பதக்கமளிப்பு நிகழ்வை தொடர்ந்து பதக்கங்களை பெற்றுக்கொண்டவர்களுடன் ஜனாதிபதி அவர்கள் குழு புகைப் படத்திலும் தோற்றினார்.

இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் நாயகம் சாந்த கோட்டேகொட, பாதுகாப்பு பதவிநிலை பிரதானி உள்ளிட்ட முப்படைத் தளபதிகள் மற்றும் பாதுகாப்பு துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.