புலிமறத்தியை ஈமத்தாழியிடும் படலம்(மு.பி 2019)!!

இரணைமடுவின் மறுகரையில் மூழ்கி எழுந்தேன்
என் முன்னவன் சடைதரித்து எழுந்தேன்
நடை நிமிர்த்தி அடர்ந்த கானகத்தில் நுழைந்தேன்
நறுமலர்களை பறித்தேன்
நாருரித்து வேர் மீதிருந்து கோர்த்தேன்
முனியென கண் சிவந்தேன்
ஆன்ம தாகத்தில் எழுந்த
முதுமக்கள் தாழிப்பாடலை மீண்டும்
குரலெடுத்துப்பாடினேன்

கலஞ்செய் கோவே கலஞ் செய்கோவே
இருள்தினிந் தன்ன குரூ உதிறள் பருஉப்புகை
அகலிரு விசும்பின் ஊன்றுஞ்சூளை
நனந்தலை மூதூர்கு கலஞ்செய்கோவே
அளியை நீயே யாங்கு ஆகுவை கொல்
நிலவரை சூட்டிய நீள் நெடுந்தானை
புலவர் புகழ்ந்த பொய்யா நல்இசை
விரிகதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன்
கொடிநுடங்கு யானை நெடுமாவளவன்
தேவர் உலகம் எய்தினன் ஆதலின்
அன்னோர் கவிக்கும் கண்ணகன் தாழி
வனைதல் வேட்டனை அயின் எனைய தூஉம்
இருநிலம் திகிரியாய் பெருமலை
மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே!
(புறநானூறு)

தந்தம் பெருத்த களிறு கானகத்தில்
பிளிறித் திமிறி வந்து பணிந்தது
அம்பகாமத் திசையில்
நாணேற்றிப் பாணங்கள் காவல் உரைத்தன
பதினெட்டாம் போர் பழைய முறிகண்டியில்
புரவிகள் அணிவகுத்தன
எனது முதுமக்களின் சடங்கு நிறைவேற்ற
முள்ளிவாய்க்கால் திக்கில் பயணிக்க
தாழ்  பணிந்தேன்
நாகதீபத்தின் வல்லமை எனை தலைதடவிற்று
நந்திக்கடலோரத்தில் போரில் வீழ்ந்த
என் குலவீரமகளின் எச்சங்கள் எழுந்த மணலில்
எனது முதுமக்கள் படையை அணிவகுக்க வைத்து
சடங்கு நிறைவேற்ற விரதமானேன்
வற்றாப்பளை கண்ணகியாள் பறைகளை முழங்கவைத்து
இரணைமடுத் தொன்ம வயிற்றில்
மறுபடி பிறந்தேன்
மாட்சிமை பொருந்திய தாய்நிலத்தில் நடந்தேன்
கோட்டைகட்டியகுளம் வனங்கள் கடந்து
குஞ்சுப்பரந்தன் மருதநிலத்தில்
புதையுண்ட பூர்வீகத்தின் தடங்களில் வணங்கினேன்
அம் முதுமக்கள் செவிகளில்
முள்ளிவாய்க்காலில் வீரமறத்தியின் எச்சங்களை
ஈமத்தாழியிட செல்லும் தாகத்தை சொன்னேன்
மண் பிளந்து திருவாய்கள் பேசின
பொறிக்கடவையில் பறைகள் முழங்கியது
செம்மண் மலைகள் விம்மித்தணிந்தன
தாழிக்கு மண் கொடுக்க தாழ்பணிந்தன
புட்பகத்தை அழைத்தேன்
பொன்பரப்பிக்கு பறந்தேன்
அத் தொன்மை வெளியில் திரண்ட குலதேவதைகளை
அழைத்தேன்  தொடர்ந்து வரச்சொன்னேன்
வீரமறத்தியை அலங்கரிக்கும்
அர்ச்சனை திரவியங்களை முடிச்சுக்களில் சுமந்தபடி
தேவதைகள் தொடர்ந்தன
மண்டைக்கல்லாற்றில் மறுபடி ஒரு பாடலை தேவதைகள் பாடின

கலஞ்செய் கோவே கலஞ்செய் கோவே
அச்சுடை சாகாட்டு ஆரம்பொருந்திய
சிறுவெண் பல்லிபோல தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி
வியன்மலர் அகன்மொழில் ஈமத்தாழி
அகலிது ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலஞ்செய் கோவே!
(புறநானூறு)

கௌதாரிமுனையின் அழகிய கண்டல்கள் தழுவி
குளிர்;;ந்த காற்று வீசியது
கல்லாயுதங்களின் ஒலிகள் அக்காற்றில் மிதந்தன
உயர்ந்த வெண்மணல் மலைகளில் இருந்து
முதுமக்கள் சூடிய அழகு பரவியிருந்தது எங்கும்
மண்ணித்தலையில் இருந்து வந்த புரவி வீரர்கள்
மீன்கொடி தாங்கியபடி அழைத்துப்போயினர்
மண்ணில்தலையில் மணிகள் ஒலித்தன
முதுமக்கள் ஓடங்களில் இருந்து முழவுகளுடன் இறங்கி
முள்ளிவாய்க்;காலுக்கு வரத்தயாராகினர்.
குடமுருட்டி கடந்து திரண்ட முதுமக்கள் சேனை
முள்ளிவாய்க்கால் அடைந்தது

வெண்மணலில் பெருந்தாழி வைத்து
பெருங்குரலெடுத்துப்பாடியது நெய்தல்
அண்டம் அதிர பறைகள் முழங்கியது
நந்திக்கடல் தாழை மலர்களாலும் செங்காந்தள் மலர்களாலும்
தேவதைகளால் நிரப்பப்பட்டன
பனைகளின் மீது முதுமக்கள் கொடி பறந்தன
ஐவகை நிலத்தின் பாசுரங்களால்
புலிமறத்தி புகழப்பட்டாள்
ஐவகை நிலத்தின் மலர்களால் புலிமறத்தி
அர்ச்சிக்கப்பட்டாள்
அவளது சீருடைகள் முத்தமிடப்பட்டன
அவளது ஆயுதங்கள்
முது மக்களின் வஸ்திரங்களால் போர்க்கப்பட்டன
அவளது வீரமரணம்
புலவர்களால் புகழ்ந்து பாடப்பட்டது
முள்ளிவாய்க்காலில் புலிமறத்தியின் எச்சம்
முதுமக்கள் தாழியில் இடப்பட்டது
பூர்வீகம் நெஞ்சு குளிர்ந்தது.

-பொன்.காந்தன்

மு.பி-முள்ளிவாய்க்காலுக்கு பின்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.