மலையகத்தில் உருவாகிறது புதிய கூட்டணி!!

மலையகத்தில் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு வலுவான போட்டி அணியொன்றை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இந்த அணி உருவாகிறது என்பதை தமிழ்பக்கம் நம்பகரமாக அறிந்துள்ளது. தமிழ் முற்போக்கு கூட்டணியின் உருவாக்கத்தின் பின்னர், மலையகத்தில் ஆறுமுகன் தொண்டமானிற்கு எதிர்பாராத அரசியல் அடி கிடைத்தது. இளமை, புதுமையென கலவையாக உருவாகிய அரசியல் கூட்டணி, நீண்டநாள் அடிப்படையில் தமக்கு பெரும் குடைச்சலை கொடுக்குமென இ.தொ.க கருதுகிறது. தமிழ் முற்போக்கு கூட்டணியை உடைத்து,இதற்கான பேச்சுக்கள் மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வே.இராதாகிருஸ்ணனுடனும் நடைபெற்றுள்ளது. சில சுற்று பேச்சுக்கள் திருப்தியாக முடிந்ததையடுத்த, தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகி, தொண்டமான் தலைமையிலான புதிய கூட்டணியில் இணைய வே.இராதாகிருஸ்ணன் சம்மதம் தெரிவித்துள்ளார். இ.தொ.க- மலையக மக்கள் முன்னணி என்ற இரண்டு பிரதான கட்சிகளையும் ஆங்காங்கே உதிரிகளாக உள்ள சிறிய குழுக்களையும் இணைத்து இந்த கூட்டணி அமையவுள்ளது. கூட்டணிக்கு பொருத்தமான பெயர் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. மனோ கணேசனின் அணியில் இருந்து பிரிந்து உதிரியாக செயற்படும் கொழும்பு அணி போன்ற சில உதிரி அமைப்புக்களும் இதில் இணைக்கப்படவுள்ளன. கூட்டணியில் தற்போதைக்கு இரண்டு பிரதான கட்சிகளே அங்கம் வகிக்கவுள்ளன. மலையக மக்கள் முன்னணி இதில் இணையுமென வே.இராதாகிருஸ்ணன் வாக்குறுதியளித்தாலும், அந்த கட்சியின் ஒரு பகுதியினர் புதிய கூட்டணியில் இணைய வாய்ப்பில்லையென்று தெரிகிறது. அரவிந்தகுமார் எம்.பி உள்ளிட்ட ஒரு பகுதியினர் தமிழ் முற்போக்கு கூட்டணியிலேயே தொடர்வார்கள் என தெரிகிறது. கூட்டணி தாவும் வே.இராதாகிருஸ்ணனின் முடிவால் மலையக மக்கள் முன்னணியும் உடையும் சூழல் எழுந்துள்ளது. ஐ.தே.முன்னணி அரசில் வலுவான அமைச்சு பதவி தரப்படவில்லையென்ற அதிருப்தி இராதாகிருஸ்ணனிடம் உள்ளது. இது குறித்து ரணில் விக்கிரமசிங்கவிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி பேச்சு நடத்தியிருந்தபோதும், பலன் கிடைக்கவில்லை. இந்த அதிருப்திலேயே இராதாகிருஸ்ணன் கூட்டணி தாவும் முடிவை எடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.