யாழில் காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள்!!

நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் தொடர்பிலான சாவகச்சேரி நீதிவானின் விசாரணைகள் வரும் ஓகஸ்ட் முதலாம் இரண்டாம் திகதிகளில் இடம்பெறும் என்று திகதியிடப்பட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.


 சாவகச்சேரி நீதிமன்றில் நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்த போது, வழக்குகளின் முதலாவது பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான, இரண்டாவது பிரதிவாதி இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க மற்றும் சட்ட மா மன்றில் முன்னிலையாகவில்லை.


 இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகுமாறு பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை என்று இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மன்றுரைத்தார்.


 “மேல் நீதிமன்ற நீதிபதியால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தில் பிரதிவாதிகளை இன்று இந்த மன்றில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று நீதிவான் எடுத்துரைத்தார். “மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையில், பிரதிவாதிகளை இன்று சாவகச்சேரி நீதிமன்றில் முன்னலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மன்றின் அறிவுறுத்தலை ஏற்று அதனைப் பிரதிவாதிகளிடம் சேர்ப்பிப்பதாகவும் உறுதி செய்வதாகவும் இராணுவ சட்டத்தரணி மேல் நீதிமன்றில் அன்றைய தினம் மன்றுரைத்திருந்தார்.

ஆனால் இன்று பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் கிடைக்கவில்லை என்று அவர்களது சட்டத்தரணி குறிப்பிடுகிறார்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மன்றுரைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று, பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்பும் ஆவணங்களை மனுதாரர்களின் சட்டத்தரணியை மன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியது. “இந்த மனுக்களில் முதலாம் பிரதிவாதியான இராணுவ அதிகாரி துமிந்த கெப்பிட்டிவலான மற்றும் மூன்றாம் பிரதிவாதி சட்ட மா அதிபர் ஆகியோர் சார்பில் முன்னிலையாகும் பிரதி மன்றாடியார் அதிபதி சேய்த்திய குணசேகர வெளிநாடு ஒன்றில் இடம்பெறும் கருத்தமர்வுக்குச் சென்றுள்ளதால், அவர் இந்த மன்றில் முன்னிலையாக வசதியாக வழக்கு விசாரணையை வரும் ஓகஸ்ட் முதலாம், இரண்டாம் திகதிகளில் ஒத்திவைக்குமாறு இராணுவம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார்.


 “இந்த மனுக்கள் மீதான விசாரணைகளை துரிதமாக முடிக்க மனுதாரர்கள் எதிர்பார்க்கின்றனர். அதனால் 4 வாரங்களில் அடுத்த தவணையை மன்று வழங்கவேண்டும்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணி மன்றுரைத்தார். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் ஜெகநாதன் கஜநிதிபாலன், மனுக்கள் மீதான விசாரணையை வரும் ஓகஸ்ட் முதலாம் இரண்டாம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார். 1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

 மனுதாரர்கள் சார்பில் சட்டத்தரணி எஸ்.சுபாசினியின் ஏற்பாட்டில் சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் மனுக்களை நெறிப்படுத்தினார். 2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன.


யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது. எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார்.
Powered by Blogger.