இன்று வைகாசி சஷ்டி தினம்!!

இன்று (24.05.2019) வைகாசி சஷ்டி தினம் இவற்றை செய்தால் அற்புதமான பலன்கள் உண்டு தமிழ் மாதங்களில் இரண்டாவதாக வருகின்ற மாதம் வைகாசி மாதமாகும்.


விசாகன் எனும் அரக்கனை இம்மாதத்தில் முருகப்பெருமான் வதம் செய்ததால் இது வைகாசி மாதம் என அழைக்கப்படுகிறது.

முருகப்பெருமானை வழிபடுவதற்கும், அவருக்கு விரதமிருப்பதற்கும் கார்த்திகை மாதம் போலவே வைகாசி மாதமும் ஒரு சிறந்த காலமாக இருக்கிறது. அந்த வைகாசி மாதத்தில் வருகின்ற வைகாசி தேய்பிறை சஷ்டி அன்று முருகப் பெருமானுக்கு விரதமிருப்பதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். சூரியன் ரிஷப ராசியில் பிரவேசிக்கும் காலம் வைகாசி மாதம்.

 ரிஷப ராசி என்பது நவக்கிரகங்களில் சுக்கிர பகவானுக்குரிய ராசியாக இருக்கிறது. நாளை வருகின்ற வைகாசி தேய்பிறை சஷ்டி சுக்கிரனுக்குரிய வெள்ளிக்கிழமை தினத்தில் வருகிறது. எனவே இந்த தினத்தில் சஷ்டி விரதம் இருந்து முருகனை வழிபடுவர்களுக்கு சுக்கிர பகவானின் அருளாசிகளையும் சேர்த்து பெற முடிகிறது.

 வைகாசி மாத தேய்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.



 அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும்.


 மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சந்நிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.

பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

 இந்த முறையில் வைகாசி மாத தேய்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடு நாட்களாக திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு தங்கள் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமைய பெறுவார்கள்.

 செய்யும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். பொருளாதார கஷ்ட நிலை நீங்கும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் பெருகும். நேரடி மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும் செல்வ சேர்க்கை அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.