விவசாயிகளால் தோற்ற முதல்வர் மகள்!

தெலங்கானாவிலுள்ள நிஜாமாபாத் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா 70,875 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் வெற்றியைப் பறிகொடுத்துள்ளார். அத்தொகுதியில் போட்டியிட்ட மஞ்சள், பருப்பு விவசாயிகள் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றதே இதற்குக் காரணமாக அமைந்துள்ளது.


தெலங்கானா மாநில முதலமைச்சரும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவின் மகள் கல்வகுண்ட்லா கவிதா, 2014 மக்களவைத் தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அத்தொகுதியில் ரயில் இணைப்பு கொண்டு வந்தது உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை கவிதா முன்னெடுத்ததாகக் கூறுகின்றனர். ஆனாலும், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு அவர் செவிசாய்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு பூதாகரமனது. மஞ்சள் வாரியத்தை நிஜாமாபாத்தில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். அதேபோல, மைசூர் பருப்பு விவசாயிகள் தங்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்க வேண்டும் என்பது உட்படச் சில கோரிக்கைகளை விடுத்தனர். அவற்றைக் கவிதா பூர்த்தி செய்யவில்லை என்று கூறி, விவசாயிகள் தரப்பு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.

இதன் விளைவாக, நிஜாமாபாத் தொகுதியில் 178 மஞ்சள், பருப்பு விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட 7 கட்சிகளின் வேட்பாளர்களையும் சேர்த்து 185 பேர் போட்டியிட்டனர். இதனால், நிஜாமாபாத் தொகுதியில் மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களுக்குப் பதிலாக வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்பட்டன.

நேற்று (மே 23) நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், தெலங்கானா மாநிலத்திலுள்ள 17 தொகுதிகளில் 9இல் டிஆர்எஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 3 இடங்களிலும், பாஜக 4 இடங்களிலும், அசாதுதீன் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் இ இட்டகத்துல் முஸ்லிமின் கட்சிக்கு 1 இடமும் கிடைத்துள்ளது. ஆனால், நிஜாமாபாத் தொகுதியில் பாஜக வேட்பாளர் அரவிந்த் தர்மபுரியிடம் 70,875 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார் கவிதா. மாநில முதல்வரின் மகள் தோல்வியைத் தழுவியதை, அங்கிருக்கும் டிஆர்எஸ் தொண்டர்களால் தாங்கவே முடியவில்லை. இந்த தொகுதியில் பாஜக 4 லட்சத்து 80 ஆயிரத்து 584 வாக்குகளும், டிஆர்எஸ் 4 லட்சத்து 9 ஆயிரத்து 709 வாக்குகளும் பெற்றுள்ளன. முறையே இக்கட்சிகள் 45.22 %, 38.55 % வாக்குகளைப் பெற்றுள்ளன.

காங்கிரஸ் வேட்பாளர் மது கவுட் யஸ்கி பெற்ற 6.52 சதவிகித வாக்குகளைக் கழித்துவிட்டால், மீதமிருக்கும் 9.71 சதவிகித வாக்குகளை இந்திய பிரமிட் கட்சி, ஜனசேனா, சமாஜ்வாதி பார்வர்ட் பிளாக், பகுஜன் முக்தி மற்றும் 178 சுயேச்சை வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். இதில் நோட்டாவுக்கு அளிக்கப்பட்ட 2031 வாக்குகளும் அடக்கம்.

கவிதாவின் மீதான கோபத்தில் போட்டியிட்ட மஞ்சள், பருப்பு விவசாயிகள் கிட்டத்தட்ட 9.27 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளனர். அதாகப்பட்டது, சுமார் 1,36,800 வாக்குகளைக் கைப்பற்றியுள்ளனர். இந்த வாக்குகள் தான் கவிதாவின் வெற்றியைப் பறித்துள்ளது. விவசாயிகளின் முடிவினால் தேர்தலில் வெற்றி தோல்விகளை நிர்ணயிக்க முடியும் என்பதையும் வெளிக்காட்டியுள்ளது.

அதே நேரத்தில், 80க்கும் அதிகமான வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் வாக்குச்சீட்டு முறை பின்பற்றப்படும் என்ற நியதியையும் வெளியுலகுக்கு உணர்த்தியுள்ளது. அந்த வகையில், இந்த மக்களவைத் தேர்தலில் கவனிக்கத்தக்க பாடத்தைக் கற்றுத் தந்துள்ளனர் நிஜாமாபாத்தில் போட்டியிட்ட 178 விவசாயிகள்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.