சச்சியானந்தன் ஐயா ஞானசாகர தேரர் விடுதலையை வரவேற்று வாழ்த்தியதன் தார்பரியம் என்ன?

எந்த ஒரு குற்றமும் இழைக்காத பல தமிழ் இளைஞர்கள் பல ஆண்டுகாலமாக சிறையில் தமது இளமைக்காலத்தை தமது வாழ்வியலை தொலைத்துக் கொண்டு இருக்கையில் அது பற்றி என்றைக்குமே திருவாய் மலராத சிவசேனை தலைவர் சச்சியானந்தன் ஐயா இன்று பொதுபல சேனையைச் சேர்ந்த ஞானசாகர தேரர் விடுதலை செய்யப்பட்டதனை வரவேற்று பாராட்டி வாழ்த்தி செய்தி வெளியிட்டதன் தார்பரியம் என்ன?


அதை விட்டு விடுவோம் சச்சியானந்தன் ஐயா சைவத்தை வளர்க்கின்ற ஒரு பெருந்தகை என்ற ரீதியில் அணுகுவோம். அவர் தனது அறிக்கையில் 'சைவசமயத்தை அழிப்பதில் இருந்து காக்க பொதுபல சேனை சைவர்களுக்கு துணை நிற்கும்' என்றார்.

வரலாற்றின் பக்கங்களை புரட்டிப்பார்த்தால் சிங்கள பௌத்த பேரினவாதம் தான் இந்த மண்ணிலே இன அழிப்பிற்கு வித்திட்டது. இங்கு இனஅழிப்பு என்பது வெறுமனே உயிர்களைக் கொல்லுதல் மட்டும் ஆகாது. எமது பாரம்பரியங்களை தொன்மையை அழித்தாலும் அதுவும் இனஅழிப்பு தான். எத்தனையோ இந்து கோவில்களுக்கு முன்னால், எல்லாவற்றையும் துறந்து துறவியாக சென்ற புத்தரின் பெயரால் ஆக்கிரமிப்புக்கள் நடைபெறுகின்றன அவ்வாறு இருக்கையில் சச்சியானந்தன் ஐயா கூறுகின்ற சைவர்களுக்கு எவ்வாறு துணைநிற்க முடியும் என்பதை எல்லாம் அறிந்த சச்சியானந்தன் ஐயா அறியாமல் விட்டது ஏனோ?

சரி கடந்த காலங்களைத்தான் மறப்போம் மன்னிப்போம் என்று மறந்து விட்டாராக இருந்தாலும். அண்மையில் கூட கன்னியா பிள்ளையார் கோயில் நிலத்தில் பௌத்த விகாரை கட்டுவது தொடர்பான பிரச்சினை நடைபெற்று வருவதையும் தாங்கள் அறியாதது ஏன்?

பல புனைவுகளும் கற்பனைகளும் நிறைந்த மகாவம்சத்தினை வைத்து தமது சரித்திரத்தை நிறுவுகின்ற சிங்களப் பேரினவாதம் தாங்கள் கூறிகின்ற சைவத்தையும் எமது மண்ணின் மரபையும் காப்பதற்கு முயச்சி செய்வார்கள் என்று தாங்கள் நினைப்பதன் காரணம் யான் அறியேன்
வெறுமனே மதங்களை மட்டும் தூக்கிக் கொண்டு வாராதீர்கள் இனம் இருந்தாலே அது சார்ந்த மதங்கள் இத் தேசத்தில் இருக்கும்.

சச்சியானந்தன் ஐயா முதலில் சிறையில் வாடும் எமது தமிழ் இளைஞர்களின் நிலை கண்டு கவலைகொள்ளுங்கள் அவர்களின் விடுதலையை வலியுறுத்துங்கள். பின்னர் ஞானசாகர தேரர் விடுதலையைப் பாராட்டுக்கள் குதுகலியுங்கள்.

Powered by Blogger.