மெல்லப் பேசு ....மின்னல் மலரே....!! பாகம் 11

என்னை வெறுப்பதாய் 
நீபோடும் நாடகம்
உன்னை வதைப்பதை
அறிந்தவன் நானடி.


மறுநாள் அதிகாலையிலேயே போக ஆயத்தமாகிக் கொண்டிருந்தான், வெற்றி. தேநீருடன் வந்தவளைக் கண்டதும் எதுவும் பேசாமல் வாங்கிக் குடித்தான். கப்பை வாங்கும் போது, அவனது விரல்கள் பட்டுவிடாதபடி அவள் பார்த்துக்கொண்டவிதம் எரிச்சலுாட்ட, பேசாமல் மறுபுறம், திரும்பிக்கொண்டான். தன்னியல்பாய் வந்துவிட்ட அச்செயலால், அவளுக்கே ஒருமாதிரியாகிவிட அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளைப் பார்த்தால் தானே. எங்கோ பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான். 

அவனது பயணம் அவளுக்குள் சங்கடத்தை கொடுத்தது என்னவோ உண்மைதான், ஆனால் தடுக்கத்தோன்றாது நின்றாள் கனிமொழி.
தகப்பனாரிடம் வந்தவன், “அப்பா நான் போய்வரவா?” என்றான்.

அவர், தலையை மட்டும் ஆட்டினார். மகன் நெஞ்சு நிறைய வேதனையுடன் போகிறான் என்பது அவருக்கும் வலிக்கவே செய்தது.
சட்டென்று அவளிடம் திரும்பியவன், “அனந்துவைப் பாக்கலாமா?” என்றான்.
அந்தக் கேள்வியில் விக்கித்துப்போனவள், ஆமெனத் தலையை ஆட்டினாள்.

உள்ளே விரைந்தவன், துாக்கத்திலிருந்த குழந்தையைத் துாக்கி எடுத்தான். குழந்தை, மெல்லச் சிணுங்கி அழுதது, வெற்றி, தன் நெற்றியோடு வைத்து முட்டியதும், விழித்துவிட்ட குழந்தையை மார்போடு இறுக்கி அணைத்துக் கொண்டான். கன்னங்களில் முத்தம் கொடுத்துவிட்டு அவளிடம் தரப்போக, வைத்திருக்கும் படி அவனிடம் கையால் சைகை செய்துவிட்டு, “சாப்பாடு செய்துவைச்சிருக்கிறன், கொண்டுபோங்கோ, முட்டைமா, மிளகுசீரகத்துாள்,  மிளகாய்த்துாள் எல்லாம் செய்துவைச்சிருக்கிறன், அதையும்.....” அவனைப் பார்த்தபடி இழுத்தாள். 
வெற்றிக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை, இரவிரவாக இதைத்தான் செய்துகொண்டிருந்தாளோ, அவளையே பார்த்தான், இழுத்து அவளை மார்போடு அணைத்துக்கொள்ளத் துடித்த கரங்களை கட்டுப்படுத்தியபடியே சரியென்பது போல தலையசைத்தான்.
“இவனைக் கொண்டு போங்கோ, நான் வர்றன்,” என்றுவிட்டு உள்ளே சென்றாள்.

அவனுக்கு அரைத்த கறி பிடிக்கும் என்பதால் எல்லாவற்றையும் தனியாக துாளாக்கி வைத்திருந்தாள். குழந்தையை துாக்கியபடியே அவன் வெளியே வர, அவளும் பொருட்களோடு பின்னால் வந்தாள். அனந்துவை தந்தையிடம் கொடுத்துவிட்டு அவளிடம் பையை வாங்கி  உள்ளே வைத்தவன், தந்தைக்கு தலைஅசைத்துவிட்டு அவளிடம் நிமிர்ந்தான்.

மொத்த வலியையும் குத்தகைக்கு எடுத்துவிட்டதுபோல இருந்தது அவளது முகம்.  மெல்ல தலையசைத்தபடியே புறப்பட்டுவிட்டான் வெற்றிமாறன்.
அதன் பின்னர் மூன்று மாதங்களாக வெற்றி, அந்தப்பக்கம் போகவே இல்லை, அனந்துவின் நினைப்பு அடிக்கடி வருவதுண்டுதான். அவன் அப்பாவுடன் இருக்கும் நேரங்களில் அவரது அலைபேசிக்கு வீடியோ அழைப்பு எடுத்து குழந்தையைப் பார்த்துவிடுவான். 
 அடுத்த தடவையும் அவள்தான் அழைப்பு எடுத்தாள். 

“ஹலோ....”

அவனுக்கு அவளது இலக்கம் தெரியும் என்பதால் மௌனமாகவே இருந்தான்.
அவளே தொடர்ந்தாள், “நீங்க லைன்ல இருக்கிறீங்கள் தானே,?”

“ம்...” என்ற அவனது பதிலுக்குப்பின்னர்,

“உங்கட அப்பாவை பாக்கிறது உங்கட கடமை, இப்பிடி மாதக்கணக்கில வராம இருந்தா அவருக்கு யோசினை வராதா, என்னால அப்பிடி நடக்கிறதை நான் விரும்பேல்ல, நான் போனாத்தான் வருவீங்கள் எண்டா நான் போறன்” எனக் கடகடவெனச் சொன்னவளை, என்ன சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை.

அவனை வரவைக்க தடாலடியாக அவள் மேற்கொண்ட நடவடிக்கை அவனுக்குச் சிரிப்பைக் கொடுத்தது. மெல்லச் சிரித்து வைத்தான்.  ‘அவளிடமிருந்த கோபம் போய்விட்டதா?‘ மனச்சாட்சி கேட்க,
‘அது சரி எப்போது அவள் மீது கோபம் இருந்ததாம், போவதற்கு, நாள் முழுக்க அவனது எண்ணங்களில் நின்று சிரிப்பவள் அவள், அவளை எப்படி கோபித்துக்கொள்வான் அவன்?‘ காதல்மனம் பதில் சொன்னது.

அந்தச் சிரிப்புடனே தொடர்ந்தான் அவன்

“சரி நான் வந்தால் நீங்கள் எப்பவுமே எங்கயுமே போகாமல் இருப்பீங்களோ?” என்றான். 
“ம்.....”

அவளது பதிலுக்குப்பின், “சரி நான் வர்றன்,” என்றான்.

“அனந்து என்ன பண்றான்?”  வெற்றி கேட்டதுதான் தாமதம், அவன், மெல்ல தவழ்ந்தது முதல், எழுந்து நிற்க முயற்சிப்பது வரை ஆதங்கத்தோடு சொல்லிக் கொண்டிருந்தாள் கனிமொழி. 

வெற்றிமாறனுக்கு மனதுக்குள் பட்டாம்பூச்சிகள் படபடத்தன. மனைவி கணவனிடம் நெகிழ்ச்சியோடு சொல்வது போல அவள் சிலாகித்த விதம் ஒரு கூடைப்பூக்களை தலையில் கொட்டியதுபோல இனிமையைக் கொடுத்தது.
மகனுக்கு அருகில் இருந்து கதைத்திருப்பாள் போல, அனந்திதனின் சின்னச் சத்தங்களும் அப்பப்போ கேட்ககேட்க அவனுக்கும் உடனே ஊருக்குப் போகவேண்டும் என்ற எண்ணம் தோன்றிவிட்டது.

அதற்குப்பின் அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டதுடன் அப்பப்போ கனிமொழியிடம் மெல்ல மெல்ல நெருங்கவும் செய்தான். இரண்டு வருடங்கள் ஓடிவிட்டது. ஒரு மெல்லிய காதல் என்ற நூல் இருவரையும் கட்டியிருப்பது அவனுக்கு மட்டுமல்ல, அவளுக்கும் புரிந்தது, ஆனால் புரியாதது போலவே இருந்தாள். அவன் எவ்வளவு நெருங்கினாலும், அவள்தான் விலகியே நடந்து கொள்கிறாள். 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.