காணாமல் போன பெண் 17 நாட்களின் பின்னர் கண்டுபிடிப்பு!

அமெரிக்காவில் காட்டுப் பகுதியொன்றில் அண்மையில் காணாமல் போயிருந்த அமென்டா எல்லர் என்ற பெண் 17 நாட்களுக்கு பின்னர் மீட்பு குழுவினரின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.


வழிதவறி காட்டில் சிக்கி கொண்ட அவர் இலை, தழைகளையும் பழங்களையும் உண்கொண்டு உயிர்வாழ்ந்ததாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த அமென்டா எல்லர் (வயது 35) யோகா பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த 8 ஆம் திகதி மக்கோவா நகரில் உள்ள வனப்பகுதிக்கு தனது காரில் சென்றார். பின்னர் அவர் அங்கு ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு வனப்பகுதிக்குள் நடந்து சென்றுள்ளார்.

அதன் பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பாதநிலையில், அமென்டா எல்லரின் குடும்பத்தினர் அவரை கைத்தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர்.

ஆனால் அவர் கைத்தொலைபேசியையும், பணப்பையை காரிலேயே விட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர் காணாமல் போனதாக கருதி அவரது குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகள் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான அடர்ந்த காடு என்பதால், அமென்டா எல்லரை உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியில் ஈடுபட்ட போதும் பலனளிக்கவில்லை.

இதையடுத்து, எல்லரை கண்டுபிடித்து தருபவருக்கு 50 ஆயிரம் டொலர் பரிசாக வழங்கப்படும் என அவரது குடும்பத்தினர் அறிவித்தனர். அவர்கள் அதோடு நிறுத்திவிடாமல் உலங்கு வானூர்தி ஒன்றை வாடகைக்கு பெற்று அவர்களும் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இந்தநிலையில், கடந்த வெள்ளிக்கிழமை மாலை, அமென்டா எல்லர் கண்டுபிடிக்கப்பட்டார். கார் நின்ற இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகே அவர் இருப்பதை மீட்பு குழுவினர் கண்டுபிடித்தனர்.

2 கால்களிலும் கடும் காயமடைந்த நிலையில் நகரமுடியாதபடி அந்த பெண் அமர்ந்திருந்தார். அத்துடன் அவர் மிகவும் மெலிந்தும், சோர்வாகவும் காணப்பட்டார். இதையடுத்து, மீட்பு குழுவினர் அவரை பாதுகாப்பாக மீட்டு, உலங்கு வானூர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருடைய காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தற்போது நலமாக உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.