சோபா உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு பாதிப்பு வராது – அமெரிக்கா!!

முன்மொழியப்பட்டுள்ள ‘சோபா’ எனப்படும் படைகளின் நிலை உடன்பாட்டினால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது என்று சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.


“சிறிலங்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கையெழுத்திடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ள சோபா உடன்பாடு, இராணுவப் பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்களுடனேயே தொடர்புடையது.

இதனால் சிறிலங்காவின் இறைமைக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது.

இந்த உடன்பாடு இன்னமும் கையெழுத்திடப்படவில்லை. இரண்டு நாடுகளும் கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன. இரு நாடுகளும் உடன்பாட்டுக்கு வந்தால், அது இணையத்தளத்தில் வெளியிடப்படும்.

இரு நாடுகளுக்கும் இடையே இராணுவ பயிற்சி மற்றும் ஒத்துழைப்பு நடக்கும் முறை தொடர்பாக உடன்பாட்டின் உட்பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

அமெரிக்க படைகள் சிறிலங்காவுக்கு வருகை தருவது தொடர்பாக, சிறிலங்கா அரசாங்கம் மற்றும் இராணுவத்துடன் கலந்துரையாடப்படும்.

1995ஆம் ஆண்டு இரண்டு நாடுகளும் செய்து கொண்ட உடன்பாடு தற்போது காலாவதி ஆகி விட்டது. அது நவீன காலத்துக்கு ஏற்ப திருத்தப்பட வேண்டியுள்ளது.

எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், வெளிப்படையாக கலந்துரையாடி இணக்கம் காணப்படும். உடன்பாடு விடயத்தில் இரு தரப்புகளுக்கும் சரியான புரிதல் இருந்தால், பிரச்சினைகளை குறைக்க முடியும்.

வெளிப்டைத்தன்மையுடன் உடன்பாட்டை எட்ட முடியும் என்று இரண்டு நாடுகளின் அரசாங்கங்களும் நம்பிக்கை கொண்டுள்ளன.

இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா பல்வேறு நாடுகளுடன், நெருங்கிய ஒத்துழைப்பை கட்டியெழுப்புவது, உள்ளிட்ட பல்வேறு உடன்பாடுகளை அமெரிக்கா செய்திருக்கிறது.

இந்த உடன்பாடுகள் ஒருபோதும் அந்த நாடுகளின் இறைமைக்கு அச்சுறுத்தலாகவோ தலையீடுகளைச் செய்வதாகவோ இருந்ததில்லை.

சிறிலங்கா, அமெரிக்க ஆயுதப் படைகளுக்கிடையில் வேறுபாடுகள் உள்ளன. சிறிலங்கா படைகளின் செயற்பாடுகள் ஒரு தனி நாட்டுக்குள்ளேயே வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், அமெரிக்கப் படைகள் உலகின் பல பகுதிகளில் உள்ளன.

அமெரிக்கப் படைகள் பயிற்சிகளுக்காக சிறிலங்காவுக்கு வருவதானால், உடன்பாட்டு விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுமே செயற்பட முடியும்.

அண்மைக்காலத்தில் அடிப்படைவாதக் குழுக்கள் பல்வேறு நாடுகளினதும் எதிர்காலத்துக்கும் பொதுவான அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

இத்தகைய குழுக்களினால் பாதிக்கப்பட்ட எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா உதவியுள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.