வரணி சிமிழ் கண்ணகை அம்மன் விவகாரம்,வழிபடுவோர் சபை அமைப்பதற்கு தீர்மானம்!!📷

வரணி சிமிழ் கண்ணகை அம்மன் விவகாரம்,வழிபடுவோர் சபை அமைப்பதற்கு தீர்மானம்
-எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம்-


வரணி வடக்கு சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு வழிபடுவோர் சபை அமைத்து ஆலயத்தை பரிபாலிப்பதற்கு நிர்வாக சபை ஒன்றைத் தெரிவுசெய்வதன் மூலம் தீர்வு காண்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆலய வருடாந்த திருவிழா சமூக வேறுபாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளமைக்கு தீர்வு காணக் கோரி பாதிக்கப்பட்ட மக்கள் ஆலயத்தில் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரகப் போராட்டத்திலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதேச செயலகம், பிரதேச சபை ஆகியவற்றின் அதிகாரிகள், சைவ அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொலிஸ் அதிகாரிகள் போன்றவர்களின் பங்குபற்றுதலுடன் ஆலயத்தில் பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டிய அங்கு நிர்வாகம் ஒன்றைத் தெரிவுசெய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

சிமிழ் கண்ணகை அம்மன் ஆலயத்தை பரிபாலனம் செய்யும் நபர்கள் எனக் கூறப்படும் ஒருசிலர் ஆலயத்தில் திருவிழா செய்யும் 7 ஆம், 9 ஆம் திருவிழா உபயகாரர்களை சமூக வேறுபாடு காரணமாக ஒதுக்கி வருகின்றனர். குறித்த சமூகத்தினர் சுவாமி தூக்கக்கூடாது எனவும் வடம் பிடித்து தேர் இழுக்கக்கூடாது எனவும் கூறி வந்தனர்.

இதன் ஒரு கட்டமாக கடந்த வருடம் (2018) வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழாவின்போது ஜே.சி.பி கனரக இயந்திரத்தின் மூலம் தேர் இழுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த வருடம் கடந்த 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவேண்டிய திருவிழாவை நிறுத்தியுள்ளனர்.

7ஆம், 9 ஆம் திருவிழா உபயகாரர்கள் திருவிழாவிற்குரிய பணத்தை தம்மிடம் தரவேண்டும் எனவும் தாங்கள் திருவிழா செய்வார்கள் எனவும் இவர்கள் சுவாமி தூக்கவோ வடம் பிடித்து தேர் இழுக்கவோம் முடியாது எனவும் ஆலய பரிபாலகர்களால் கூறப்பட்டது. இதற்கு குறித்த சமூகத்தவர்கள் மறுப்புத் தெரிவித்ததால் கொடியேற்றப்படாமல் திருவிழா தொடங்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட தரப்பினர் தமக்கு நீதி கோரி தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்பாக இரு தினங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அங்கு தீர்வு கிடைக்காத நிலையில் ஆலயத்திற்கு முன்பாக இன்று தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (28) பிற்பகல் அங்கு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இதில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடும் மக்களுடன் அகில இலங்கை சைவ மகா சபை, சமூக நீதிக்காக வெகுஜன அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், இந்து – பௌத்த கலாசார பேரவையின் செயலாளர், மேற்படி ஆலயக் குருக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்திலேயே எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் ஒன்றைக் கூட்டுவது எனவும் நாளை புதன்கிழமை தொடக்கம் வழிபடுவோர் சபையில் இணைபவர்களுக்கான அங்கத்துவப் படிவங்களை வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.