சமூகவிடுதலையை அடையாத இனம் இனவிடுதலையை அடைவதும் கடினமே!

என்னால் வெளியிடப்பட்ட சாதிய பாகுபாட்டை பின்பற்றுகின்ற யாழ். தென்மராட்சி, பருத்திதுறை, கரவெட்டி ஆகிய மூன்று பிரதேச செயலக பிரிவுகளில்  உள்ள 102 கோவில்களின் விபரங்கள் என்பது ஒரு அமைப்பினல் சேகரிக்கப்பட்டு டிஎம். சுவாமிநாதன் இந்து சமய விவகார அமைச்சராக இருந்த போது அவருக்கு எழுதிய கடிதமே.

இந்த தரவுகள் 2017 க்கு முன் சேகரிக்கப்பட்டவை.
நான் இதனை வெளியிடும் போதே குறிப்பிட்டிருந்தேன்  “எங்களது ஆலயங்களில் தற்போது சாதிய ஒடுக்கு முறை இல்லை, இது தவறானது தகவல்“  என்று சம்மந்தப்பட்டவர்கள் தெரிவித்தால் அக் கருத்துக்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று. அதற்கமைவாக  ஒருசிலர் மிகவும் நாகரீகமாக நான்கு கோவில்களின் பெயர்களை குறிப்பிட்டு அக் கோவில்களில் தற்போது அப்படி இல்லை என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டிருந்தார்கள். அதனை நான் வரவேற்கின்றேன். அவர்களுக்கு எனது நன்றிகளும்.

ஆனால் வேறு சிலர் அவர்கள் சேகரித்த தகவல்களை வெளியிட்ட என் மீது வசைப்பாடவும், நான்  இல்லாத ஒன்றை பேசுவாதாகவும், தேவையற்ற விடயம் என்றும்  என் மீது அவதூறு செய்தும் அச்சுறுத்தியும், எச்சரிக்கை விடுத்தும் எழுதி வருகின்றார்கள். இது எனக்கு புதிதல்ல. இந்த விடயத்தை நான் கையில் எடுக்கும் போதே இவற்றையெல்லாம் எதிர்பார்த்தேன். இவ்வாறு சாதியத்தை அங்கீகரிப்பவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது நீங்கள் எவ்விதமான சட்ட நடவடிக்கைகளுக்கும் செல்லலாம். நான்  எந்த சவால்களையும் ஏற்றுக்கொள்ள தயாராகவே உள்ளேன்.

2009 க்கு முன் தொடக்கம் இன்று வரை 18 வருடங்களாக எவ்வாறு இன ஒடுக்குமுறைகளுக்கும், இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட, மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அநீதிகளுக்கு எதிராகவும், எழுதியும் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்தேனோ அவ்வாறே இனத்திற்குள்ளேயும் இடம்பெறுகின்ற அநீதிகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் எழுதுவேன், தமிழ் இனத்திற்கு எதிராக இடம்பெற்ற அநீதிகளுக்கு எதிராக  எனது கைகள் வெறுமனே எழுதுகோளை மட்டும் தூக்கவில்லை, பகுதிநேரமாக துப்பாக்கியையும் தூக்கியது.

எனக்கெதிரா எழுதுகின்றவர்களுக்கு கடந்த வருடம் சாதிய பாகுபாடு காரணமாக ஜேசிபி கொண்டு தேர் இழுத்த போது வராத கோபம், இந்த வருடம் அதே காரணத்தினால் கோவில்  திருவிழாவே நிறுத்தப்பட்ட போது வராத கோபம் ஆலயங்களில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டு சமூக ஒடுக்குமுறைகள் சமகாலத்திலும் மிக மோசமாக பின்பற்றப்பட்டு வருகின்ற போது அதற்கெதிராக வராத கோபம்  இவற்றை வெளியிட்ட என் மீது வருவது ஆச்சரியமாக உள்ளது.? அப்படியாயின் உங்களது மனநிலை என்ன? 

சிங்கள அரசினால் தமிழினம் மீது மேற்கொள்ளப்படுகின்ற ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பேசுகின்றவர்கள் எழுதுகின்றவர்கள் மீது நீங்கள் இப்படிதான் நடந்துகொள்வீர்களா? அது வேறு இது வேறு என்றல்ல ஒடுக்குமுறை என்பது ஒடுக்குமுறைதான் அது இனத்திற்குள் நடந்தால் என்ன இனங்களுக்கிடையே நடந்தால் என்ன.
ஒரு இனம் இனத்திற்குள் சமூக விடுதலையை அடைந்து ஒற்றுமைப்பட்டு  செயற்படுவதன் மூலமே இனவிடுதலையே இலகுவாக்க முடியும்.

 தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராக எழுதுங்கள் குரல்கொடுங்கள் -நன்றி

No comments

Powered by Blogger.