மேட்டூர் அணையை திறப்பதற்கு வாய்ப்பில்லை!!

தொடர்ந்து 8வது ஆண்டாக, இந்தாண்டும் ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க வாய்ப்பில்லை என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால், விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.



சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாகப்பட்டினம் உள்பட 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. குறுவை, சம்பா, தாளடிக்கு, ஜூன் 12 முதல் ஜனவரி 28 வரை 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும்.

டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையை பொறுத்து, தண்ணீர் தேவை குறையும். அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால், பருவமழையை எதிர்நோக்கி ஜூன் 12ம் தேதி, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். கடைசியாக 2011ல் குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணையின் நீர் இருப்பும், வரத்தும் திருப்திகரமாக இல்லாததால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை.

இந்நிலையில், நடப்பாண்டு மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 அடிக்கும் குறைவாகவே உள்ளது. தற்போதுள்ள தண்ணீர், அணையின் மீன்வளத்தை பாதுகாக்கவும், குடிநீருக்கும் மட்டுமே  போதுமானதாக உள்ளது. இதனால், ஜூன் 12ம் தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்திலிருந்து காவிரி நடுவர்மன்ற உத்தரவின்படி, தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை வழங்கினால் மட்டுமே, குறிப்பிட்ட நாளில் மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும்.

இல்லையெனில், கர்நாடகா மாநிலத்தில் பருவமழை பெய்து அங்குள்ள அணைகள் நிரம்பி, திறக்கப்படும் உபரிநீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தால்மட்டுமே, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அவ்வாறு நடப்பதற்கு சாத்தியம் இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து 8வது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளதால், டெல்டா விவசாயம் கடுமையாக பாதிக்கும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 51 கனஅடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. வரத்தை காட்டிலும், திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் மளமளவென சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 47.49 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று 47.33 அடியாக சரிந்தது. நீர்இருப்பு 16.17 டிஎம்சியாக உள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.