பொலிசாரின் துணையுடன் பிக்கு நீராவியடி பிள்ளையாருக்கு வந்த மக்களுக்கு இடையூறு!!

முல்லைத்தீவு- பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகவும் அபிவிருத்தி வேளைகளைச் செய்வதற்காகவும் சென்ற செம்மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களுக்கு, பொலிசார் மற்றும் அங்கு அடாத்தாக விகாரை அமைத்துள்ள பிக்குவினால் இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


குறித்த பிள்ளையார் ஆலயம் பல நூறாண்டுகளாகப் பழைய செம்மலை கிராமத்தில் காணப்படுகின்ற நிலையில் போருக்குப் பின்னர் ஆலய வளாகத்தில் பௌத்த பிக்கு ஒருவர் குடியமர்ந்து குருகந்த ரஜமகா விகாரை எனும் பெயரில் விகாரை ஒன்றையும் அமைத்துள்ளதோடு பரியப் புத்தர் சிலை ஒன்றையும் அமைத்துள்ளார்.

இந்த பிக்குவின் அத்துமீறல் தொடர்பிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் இரு தரப்புகளுக்கும் இடையில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவும் இந்த விவகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று இம்மாதம் 6ஆம் திகதி மாவட்ட நீதிமன்றினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதாவது அந்த தீர்ப்பில் இரண்டு தரப்பும் குறித்த பகுதியில் உள்ள ஆலயங்களில் தடையின்றி சுதந்திரமாக வழிபாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் பிள்ளையார் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் செல்பவர்களுக்குப் பௌத்த பிக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது எனவும் இரண்டு தரப்பும் இந்த ஆலயங்களில் அபிவிருத்தி வேலைகளைச் செய்வதாக இருந்தால் உள்ளூர் திணைக்களங்களின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதிகளைப் பெற்று மேற்கொள்ளவேண்டும் எனவும் ஏற்கனவே நீராவியடி பிள்ளையார் ஆலயம் எனப் பெயர் சூட்டப்பட்டிருந்த பெயர்ப் பலகையை நீக்கி பௌத்த பிக்கு கணதேவி தேவாலயம் எனப் பெயர்ப் பலகை நட்டியிருந்தார்.

அதனை மாற்றி மீண்டும் நீராவியடி பிள்ளையார் ஆலயம் என எழுதி மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பொலிசாரை நீதிமன்று பணித்திருந்தது நீதிமன்றின் இந்த உத்தரவை மீறினால் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்த நிலையில் இன்றையதினம் நீராவியடி பிள்ளையார் ஆலயத்தைச் சேர்ந்த நிர்வாகத்தினரும் அடியவர்களும் உரிய உள்ளூர் திணைக்களங்களான வீதி அபிவிருத்தி அதிகார சபை ,கரைதுறைபற்று பிரதேச சபை ஆகியவற்றினதும் அனுமதிகளுடன் நீதிமன்றின் தீர்ப்புக்கு உட்பட்டு பிள்ளையார் ஆலயத்தின் இருமருங்கிலும் "நீராவியடி பிள்ளையார் ஆலயம் " எனும் பெயர்ப் பலகையை நாட்ட சென்றவளைப் பௌத்த பிக்குவுக்கும் விகாரைக்கும் பாதுகாப்பாக நிற்கும் பொலிஸ் உத்தியோகத்தரால் தடுக்கப்பட்டனர் .

மேலும் உடனடியாக பௌத்த பிக்குவால் பொலிசாருக்கும் ,விசேட அதிரடிப் படையினருக்கும் முறைப்பாடு வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வருகைதந்த பொலிசார் பௌத்த பிக்குக்குச் சார்பாகச் செயற்பட்டு ஆலயத்தில் வழிபாட்டுக்காகவும் நீதிமன்றின் உத்தரவை மதித்து பெயர்ப்பலகை நாட்ட வந்த செம்மலை கிராம மக்களை நிலத்தில் அமர்த்தி அனைவரினது பெயர் அடையாள அட்டை இலக்கம் என்பனவற்றையும் பதிந்ததோடு மிக நீண்டநேரம் விசாரணைகளிலும் ஈடுபட்டனர் .

மேலும் செய்தி சேகரிப்புக்காகச் சென்ற ஊடகவியலாளரைப் புகைப்படம் எடுக்கவேண்டாம் எனவும் ஊடகவியலாளர் என அடையாளபடுத்திய பின்பும் பொலிசார் வேண்டும் என்றே ஊடகவியலாளரின் அடையாள அட்டையை வாங்கி பதிவுகளை மேற்கொண்டதோடு புகைப்படம் எடுத்தும் அச்சுறுத்தல் விடுத்திருந்தனர் .

மேலும் நீதிமன்றின் தீர்ப்பின்படி குறித்த கணதேவி தேவாலயம் எனும் பெயரை மாற்றி பழைய பெயரான நீராவியடி பிள்ளையார் ஆலயம் என எழுதுமாறு பொலிசாருக்கு கூறப்பட்டுள்ள நிலையிலும் தீர்ப்பு வழங்கப்பட்டு 20 நாட்களை எட்டியுள்ள நிலையிலும் இதுவரையில் பொலிசார் நீதிமன்றின் தீர்ப்பை மதித்து அதனை நடைமுறைப்படுத்தாது பௌத்த பிக்குவுக்கு சார்பாகச் செயற்பட்டு வருகின்றனர்.

மேலும் நீதிமன்றின் தீர்ப்பை மதிக்காது எந்தவித உள்ளூர் திணைக்களங்களினதும் அனுமதிகளைப் பெறாமல் புதிதாகப் பௌத்த பிக்கு கட்டிடம் ஒன்றையும் அமைத்து வருகின்றார். இந்த நடவடிக்கையையும் பொலிசார் கண்டும் காணாமலும் விட்டுள்ளனர் . மேலும் பிள்ளையார் ஆலயத்தின் வாசலின் இருமருங்கிலும் பௌத்தபிக்குவால் சீமெந்து தூண்கள் நடப்பட்டு இரண்டு C C T V கமராக்கள் பூட்டப்பட்டு வழிபாட்டுக்கு வருபவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

மேலும் பிள்ளையார் ஆலயத்துக்கு நேர் எதிராக உள்ள இராணுவ முகாமுக்கு அருகாக வீதியின் அருகில் புதிய காவலரண் ஒன்று அமைக்கப்பட்டு அங்கே ஆயுதம் தாங்கிய படையினர் 24மணிநேரமும் காவலில் அமர்த்தப்பட்டுள்ளார். பௌத்த மத கொடிகளும் வெசாக் கூடுகளும் வேண்டும் என்றே பிள்ளையார் ஆலயத்துக்குள்ளும் கட்டப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது .

நீதிமன்றின் உத்தரவை மதித்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு பிள்ளையார் ஆலயத்துக்குச் சென்ற மக்களை பிக்குவின் குறைபாட்டுக்கு அமைவாக பொலிஸார் குற்றவாளிகள் போல் நடாத்திக்கொண்டு நீதிமன்றின் தீர்ப்பை மதிக்காது தொடர்ந்தும் சட்டவிரோதமாகச் செயற்படும் பௌத்த பிக்குவை கண்டும் காணாது விட்டுள்ளதாகவும் நீதிமன்றின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டிய பொலிஸார் அதனை மதிக்காது நடைமுறைப்படுத்தாது உதாசீனம் செய்துவருவதாகவும் பிள்ளையார் ஆலய வழிபாட்டுக்குச் சென்ற செம்மலை கிராம மக்கள் தெரிவித்தனர் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.