ஏழை மாணவச்செல்வமொன்றை சந்தித்த அனுபவப் பகிர்வு!!

காவிநிற பள்ளியுடை
கருங்கூந்தல் கலைந்த நிலை.
கட்டாந்தரை புழுதியெல்லாம்
கருவண்ண அவள் உடலில்.
நகங்களுக்கு தடையில்லை
நறுக்கிவிட யாருமில்லை.
ஐந்து நாளும் அதே ஆடை
அலம்பிப்போட ஆளுமில்லை.

சிரிக்காத அவளுதடு
சோகத்தில் அவள் வதனம்.
பயத்தில் படபடக்கும்
பலநேரம் அவள் இதயம்.
குறிப்பெடு்க்க தாளொன்று
கண்டெடுத்த பேனாவொன்று.

காலை உணவை என்றும் கண்டதில்லை.
கலகலவென அவள் சிரித்ததில்லை.

ஏனம்மா இந்தநிலை?
ஏடெங்கே எழுத்தெங்கே?
காலில்தான் செருப்பெங்கே?
காப்பவர்கள் தானெங்கே?
இது தான் என் வினவல்.

என் வினவல் கேட்ட அவள்
விக்கி விக்கி அழுத நிலை.
மூக்கால் வழிகிறது
பிஞ்சுவிரல் துடைக்கிறது.
வெட்கத்தால் வெம்பி அவள்
வேதனையில் துடித்த நிலை.

தந்தையை இழந்த நிலை.
தாயும் நொண்டி நிலை.
தாயவளை சீராட்ட
பாத்திரம் தேய்த்து பள்ளிவரும்
பரிதாப சாப நிலை.
படுப்பதற்கு பாயுமில்லை.
குளிப்பதற்கு வழியுமில்லை.
ஒருவேளை உணவுகூட
ஒழுங்காக கிடைப்பதில்லை.

அவளது அருகாமை நட்பொன்றின்
எனக்கான பதிலிதுவே.
அழுது அவள் முடியவில்லை.
ஆறுதல் கூற வழியுமில்லை.

ஏதோ இழந்த ஏக்க நிலை
ஓர்தாய் பிள்ளைகளெனின்
எதற்காக இந்தநிலை?
ஓயவில்லை மனஒலியின் கதறல் நிலை.

தமிழ் நதி
Powered by Blogger.