மெல்லப் பேசு ....மின்னல் மலரே....!! பாகம் 13!!

உறவில்லா ஜீவனென
என்னை நான் நினைத்திருக்க
உறவாக நீ வரவே
என்ன தவம் செய்துவிட்டேன்?


அனந்திதனை மடியிலேயே வைத்துக்கொண்டிருந்தார் வெற்றியின் தகப்பனார். மெல்ல உள்ளே வந்து அந்தக் காட்சியைக் கண்ட கனிமொழி, “அப்பா, உங்களை ரொம்ப சிரமப்படுத்திட்டானா,” என்றாள். 

“இல்லம்மா, அவன் என்னோட பேரன், அவனைப் பாக்கிறதில எனக்கென்ன சிரமம்? நீ முதல்ல இரு, டொக்ரர் என்ன சொன்னார்? இப்ப வலி இல்லையா?” என்றார். 

“இவர், மகனுக்கு மேல இருக்கிறாரே,” என நினைத்தபடியே அவரருகில் அமர்ந்துகொண்டவள், ”இல்லப்பா, இப்ப வலி இல்ல, கொஞ்சம் களைப்பா இருக்கு, நான் போய் துாங்கவா,” என்றபடியே மகனை வாங்க கையை நீட்டினாள். 

“பொறும்மா, ஊசி போட்ட கை, உன்னால துாக்கமுடியாது, வெற்றி கொண்டுவரட்டும்”  

“எங்க போக? ” என்ற வெற்றியிடம், தன்னிடத்தை கைகளால்  காட்டினாள். 

”அதெல்லாம் ஒண்டும் வேண்டாம், பேசாமல் இண்டைக்கு என்ர அறையில படுங்கோ, நான் அப்பாவோட இங்கயே படுக்கிறன் ” என்றான். 
”ஐயையோ....அதெல்லாம் வேண்டாம், நாங்கள் அங்கயே”  இவள் சொல்லிமுடிப்பதற்குள், 
“உங்களுக்கு ஏதாவது கடிச்சா பரவாயில்ல, குழந்தை பாவம், உங்கட பிடிவாதத்தில அவனை இழுக்காதேங்கோ” என்ற வெற்றிமாறனுக்கு பதில் சொல்லத்தெரியாது நின்ற அவள். அப்பாவைப் பார்த்தாள். 

வேலிக்கு ஓணான் சாட்சி என்பதுபோல அவர் மௌனமாக நிற்க, அதற்குமேலும் பிடிவாதம் பிடிக்கமுடியாது என்பதால், அந்த வீட்டின் உள்ளே நுழைந்து அவனது அறைக்குள் சென்றாள். குழந்தையை தந்தையிடம் வாங்கிய வெற்றி அவளுக்கு முன்னால் சென்றான். 
அந்தக் காட்சியைக் கண்ட வெற்றியின் தகப்பனாருக்கு மனதிலே ஒரு நிறைவும் பெருமிதமும் உண்டானது. தன் பிள்ளை, நல்லவன், அவரைப்போலவே அவனுக்கும் நிறைய நேசம் இருக்கிறது என எண்ணியபடியே படுக்கையில் சாய்ந்தார். 
உள்ளே வந்த வெற்றி, தனது படுக்கையைில் குழந்தையைக் கிடத்திவிட்டு அவளிடம் திரும்பினான், “நான் வெளிய படுத்திருக்கிறன், இதில மருந்து எல்லாம் இருக்கு, , இனி காலையிலதானே போடுறது, பேசாமல் படுத்துக்கொள்ளுங்க,  நாளைக்கு எல்லாம் பார்க்கலாம்” என்றுவிட்டு அவளை ஆழமாய்ப் பார்த்தான். 

அந்தப் பார்வையில் தடுமாறிய கனிமொழி, “எ..ன்ன?” என்றாள். 

அவளது தலைகோதி தன் மார்போடு அணைத்துக்கொள்ளத் துடித்த மனதை அடக்கியபடியே “ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டுப்  புறப்பட்டுவிட்டான். வாசல் வரை சென்றவன் திரும்பிப் பார்த்தான், அவள் அப்படியே நின்றுகொண்டிருக்க, அவசரமாய் திரும்பி வந்து அவளது கையை எடுத்து, கடித்த இடத்தைப் பார்த்தான். மறுகையால் அவ்விடத்தை தடவி விட்டுவிட்டு வெளியே விரைந்து விட்டான். 

கனிமொழிக்கு என்ன செய்வதெனப் புரியவில்லை. கையை தடவிப் பார்த்தாள், அதில் ஒருவித புது சுகம் இருந்தது. உதட்டில் அரும்ப முற்பட்ட புன்னகையை அப்படியே நிறுத்திவிட்டு  கட்டிலில் மெல்ல அமர்ந்துகொண்டாள். அவனது, அறை, அவனது படுக்கை, அவனது தலையணை, என்னவோ போல இருந்தது அவளுக்கு, தகிப்பும் குளுமையுமான அந்தக் கணம் மனதில் அப்படியே நின்றது. சரிந்து படுத்தாள், மெய் சிலிர்த்தது, அவளும் பெண்தானே, தனக்குத்தானே அவள் விதித்துக் கொண்ட கட்டுப்பாடுகளையும் மீறி எண்ணங்கள் தன்பாட்டில் தாலாட்டியது. அவளுக்கு ஒன்றென்றால் அவன் படும் பாடு, சொல்லில் அடங்காது, சின்னதாக அவள் காயம் பட்டால் அவன் பெரிதாகத் துடித்துப் போகிறானே ஏன்? 

இந்த நேசம், இந்த அன்பு காலம் முழுவதும் இருக்காதே, கல்யாணம் என்றதும் நாட்கணக்கில் அந்த அன்பு அழிந்துவிடுமே, ஏதேதோ எண்ணங்களுடன் உறங்கிப்போனாள் கனிமொழி. 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.