ஒற்றுமையும் வேற்றுமையும்!!

இன்னும் நாய்வாலாய்த்தான்
சுருள்கிறது!
தமிழ்த்தேசிய தார்மீக சிந்தனையின்
வெளிப்பாடு!

நான் என்ற அகங்காரத்தின்
உச்சத்தில் உந்தப்பட்டு
ஒற்றுமையின் தலையில்
ஓங்கியடிக்கும்
அதிகாரிகளாக
அந்தரித்து உருள்கிறது
விந்தை உலகம்!

தமிழ்த்தேசியமென்றால்
உலகத்தின் எந்த மூலையில்
தமிழன் அடக்கப்பட்டாலும்
வதைக்கப்பட்டாலும்
நிமிர்ந்து நின்று நீதிகேட்க
திராணியுடையவனாய்
திகழவேண்டும்!

தமிழ்த்தேசிய போர்வைக்குள்
தன்னை அற்பணிக்க தயாராகும்
ஒவ்வொரு தமிழனும்
சுய கௌரவங்களை சுரண்டிப்
பார்ப்பதை தவிர்கவேண்டும்!

பொதுநலப்பாதையில் புறந்தள்ளிய
அழுக்குகளை அள்ளிவீசி
தன்னல சிந்தனைகளை விதைத்து
தமிழ்த்தேசிய சிந்தனையை சிதைத்து
சின்னாபின்னப்படுத்தும்
எந்த அதிகாரமும் தூய்மையாய்
துலங்காது!

வாய்மை தவறிய மனிதர்களோடு
நீதிக்கான போராட்டத்தை நிலை நாட்டமுடியாது!

குறுகிய புத்திகளுக்குள்
உறங்கிக்கிடங்கும் தமிழ்த்தேசியம்
ஒருபோதும் ஒற்றுமையை இறுக்கி
நகர்த்தாது.

கழுகுகளின் பிடியில் அகப்பட்ட
கோழிக்குஞ்சுகளாய் குற்றுயிரில்
இருக்கிறது தமிழ்த்தேசியம்!

இவர்களின் இலக்கு அன்றாட
பசியை போக்கும் நிலையில்தான்
இருக்கின்றது!
தங்களை கொண்டாடி களியாட்டம்
ஆடும் நகைப்பில்தான்
கரைகிறது!

கொள்கைவாதிகள் ஒற்றுமையை
கொள்ளையடிக்கக்கூடாது
கொடியை ஏந்தத் துணியும் யாராக
இருந்தாலும் அடம்பன் கொடியாக்கு!

என்னை மதிக்கவில்லை என் குடும்பத்தை மதிக்கவில்லை என்பதற்காக
தேசிய ஒற்றுமையை குலைக்காதே!
மண்ணை நேசிப்பவனை எம் தலைவனை பூசிப்பவனை கைகோர்த்து கூட்டிச்செல்
இல்லையேல்
இந்த நூற்றாடில் மட்டுமல்ல
எந்த நூற்றாண்டிலும்
இலக்கை எட்ட முடியாது!

மாமனோடு கோபித்துக் கொண்டு
மகளின் களியாணத்துக்கு போகாது
இருப்பது போல்
மனோவோடு கோபித்துக்கொண்டு
மாவீரர்நாளுக்கு வராமல் இருப்பதுதான்
தமிழ்த்தேசிய சிந்தனையா?
அல்லது
செயல்களோடு முரண்பட்டுக்கொண்டு
அயலவன் போல் அணிவகுத்து
வீட்டோடு முடங்கிக்கிடந்து
நாட்டுக்கு முட்டுக்கட்டையாக
இருப்பதுதான்
நிலையா?

சத்தியமாக சொல்கிறேன்
உங்கள் சிந்தனையில்
சீழ் பிடித்து மணக்கிறது
மருந்து கட்ட முயற்சியுங்கள்!

✍தூயவன்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.