கருவேப்பிலை காதல்.!!

இயற்கை எமக்களித்த
பெருவரமே!
கடல்கடந்த தமிழனோடு
கைகோர்த்து வந்தவளே!
எங்களூர் மந்துப் பற்றையெல்லாம்
மயிலென சிரிக்கின்ற
மாய ரதியே!
காதலிக்கும் காதலிக்கு
கருங்கூந்தல் வளர
காரணமாய் இருப்பவளே!

இன்றுன்னை எண்ணியெண்ணி
ஏன் வியந்தேன் தெரியவில்லை
எனக்கொரு கவி
எழுதென்று நீ கேட்டாய்!
எழுத தொடங்கிவிட்டேன்!

நிலத்தில் நீயில்லாத
வீடுகள் இருந்தாலும்
புலத்தில் உன்னை தேடி வாங்காத
தமிழன் அரிது என்பேன்...

பாவற்காய் ஆனாலும்
பங்கிறைச்சி என்றாலும்
கூடிக்கிடந்து வதங்கி
வாசம் வர வைக்கும்
உன் பெருங்குணத்தை
கொடையென்பேன்!

கப்பலேறி நீ வரவில்லையென்று
கடைக்காரர் சொன்னாலே
இழவொன்று விழுந்தது போல்
ஏனோ முகம் சுருங்கும்
இடி வந்து இதயத்தில்
விழுந்தாற் போலிருக்கும்
பங்கிறைச்சிக் கடைப்பக்கம்
போக மனம் மறுதலிக்கும்
பெண்சாதிக்கும் "போன்" பண்ணி
உன் கதையை சொல்லி வைக்கும்...

வீடு மணக்குமென்று
விருப்பமுன்னில் கொள்ளாத
சுவிஸ்காரர் இருந்தாலும்
பாழ்படுவார் உன்னை
தடை செய்து போட்டாங்களென
பதறுகின்ற ஜேர்மன்காரர் கவலைப்பட்டாலும்
பாரிஸ்காரர் வீடுகளில்
உன் வாசனைக்கு குறைவில்லை...

என்னவொரு வருத்தமென்றால்
என் மரகதமே!
கொப்புக்கு ஒரு ஈரோ
கொடுத்து வாங்கிய காலம்போய்
அலக்கொன்று ஒரு ஈரோ
விற்ற நாட்களும்போய்
இப்போ இலைக்கு விலைபேசி
உன்னை விற்பதுதான்
தமிழ்க்கடையில் கொடுமையடி....

வாகைக்காட்டான்
பெரியகுளம்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.