செந்தில் பாலாஜி ஒரு அரசியல் வியாபாரி: பழனிசாமி!!

அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேலாயுதம்பாளையம் பகுதியில் நேற்று (மே 5) தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய பழனிசாமி, “செந்தில்பாலாஜியை நம்பி அதிமுகவை விட்டு வெளியேறியவர்களை எல்லாம் அவர் நடுத்தெருவில் விட்டுவிட்டு திமுகவில் இணைந்து திமுக சின்னத்தில் போட்டியிடுகிறார். ஒரு கட்சியில் ஒருவருக்கு எம்.எல்.ஏ சீட் கொடுத்து அவரை வெற்றிபெற வைக்க சுமார் 15,000 பேர் உழைக்க வேண்டும். அரவக்குறிச்சியில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிபெற வேண்டுமென்றால் 15,000 பேர் இரவு பகல் பாராமல் பாடுபட வேண்டும். அப்படி உழைத்து அதிமுகவினுடைய உடன்பிறப்புகள் அவர்களது சொந்த வேலைகளையெல்லாம் விட்டுவிட்டு செந்தில் பாலாஜியை வெற்றிபெறச் செய்தால், இந்த இயக்கத்துக்கே அவர் துரோகம் செய்கிறார். அவர் எப்படி மக்களுக்கு உண்மையாக நன்மை செய்வார் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி ஒரு அரசியல்வாதியல்ல. அவர் ஒரு அரசியல் வியாபாரி. எங்கு வியாபாரம் நடக்குமோ அங்கு கடைபோட்டு வியாபாரம் செய்பவர்தான் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜி. அவர் பல்வேறு ஆசைவார்த்தைகளை பேசுவார். ஒருவனை ஏமாற்ற வேண்டுமென்றால் அவனிடம் ஆசைவார்த்தைகளை சொல்ல வேண்டும் என்று நான் காரில் வரும்போது சொன்னார்கள். ஆசைவார்த்தைகளை சொல்லும்போதுதான் ஒருவனை ஏமாற்ற முடியும். அப்படி மக்களை ஆசைவார்த்தைகளால் ஏமாற்றுபவர்தான் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி. மூன்று செண்ட் நிலம் கொடுப்பதாக அவர் சொல்லியிருக்கிறார். நிலம் பெற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் கொடுப்போம் என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி பச்சைப் பொய் சொன்னார். இதுவரை எத்தனை பேர் இரண்டு ஏக்கர் நிலம் பெற்றிருக்கிறார்கள்? அதேபோலத்தான் இப்போது ஆசைவார்த்தைகளால் மக்களை ஏமாற்ற திட்டமிடுகின்றனர். தற்போது நடப்பது அதிமுகவின் ஆட்சி. அதிமுகவின் வேட்பாளர் வெற்றிபெற்றால்தான் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியும்” என்று கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.