தேர்ந்தெடுத்த மக்களுக்கே பாஜக துரோகம் செய்துள்ளது- மன்மோகன்!!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று (மே 5) பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “இந்தியாவின் இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும், வர்த்தகர்களுக்கும், ஜனநாயக அமைப்பிற்கும் பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி வேதனையாகவும், பேரழிவாகவும் அமைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் புதுப்புது காரணங்களை பாஜக தேடிக்கொண்டு இருக்கிறது.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு விசாரணைகளுக்கும், ஆய்வுகளுக்கும் வெளிப்படையாகவும் தயாராகவும் இருந்தது. ஆனால் மோடியோ தனது அரசு விசாரணைகளுக்கு உட்பட்டதல்ல என்று கருதுகிறார். அவர் மீது வைக்கப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பொறுப்பேற்பதில்லை.
அனைவருக்குமான வளர்ச்சியை நம்பாத ஒரு ஆட்சி, அரசியலில் தனது இருப்பை தக்கவைத்துக்கொள்வது பற்றி மட்டும் கவலைப்படும் ஒரு ஆட்சி வெளியேற்றப்பட வேண்டும்” என்று பேசினார். மேலும், விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹுல் சோக்சி போன்றவர்கள் கடன் வாங்கிவிட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடுவது பற்றி பேசிய மன்மோகன் சிங், “அரசியலில் முக்கிய பதவிகளில் இருப்போருக்கும், நாட்டை விட்டு தப்பியோடிய ஊழல்வாதிகளுக்கும் இடையே நிச்சயமாக கூட்டணி உள்ளது.
அரசின் பொருளாதார கொள்கைகளில் நீதிமன்றங்கள் தலையிடுவது அதிகரித்துக்கொண்டே போகிறது. இது வருத்தமளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் பொருளாதாரம் வேறு வகையில் கையாளப்பட்டிருக்கும். மோடி அரசால் இந்தியப் பொருளாதாரம் மோசமான நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளது. கடந்த மாதம் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதாரம் சரிவுப் பாதையை நோக்கி நகர்வது தெரியவருகிறது. தனியார் நுகர்வின் வளர்ச்சி சரிவு, மந்தமான ஏற்றுமதி போன்றவற்றால் இந்த நிலை உருவாகியுள்ளது.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் பணமதிப்பழிப்பு நடவடிக்கைதான் மிகப்பெரிய ஊழல். இதனால் இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, அமைப்புசாரா துறைகள் சீரழிக்கப்பட்டுள்ளன. மேலும் கோடிக்கணக்கானவர்கள் வேலையிழந்துள்ளனர். இந்த அரசை தனிப்பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்த மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.