கைது செய்யப்பட்ட மாணவ தலைவர்களின் விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்-கிழக்கு மாணவர்கள்!!

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊளியர் கைதுசெய்யப்பட்டமை தொடர்பான ஊடக அறிக்கை அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களை அடுத்து பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக கூறி 03 . 05 . 2019 அன்று யாழ் பல்கலைக்கழகத்தினை சோதனை செய்வதற்கு இலங்கை இராணுவம் அனுமதி கோரியிருந்தது .
இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி அளித்திருந்ததுடன் மாணவர் ஒன்றியமும் தனது பூரண ஒத்துழைப்பினை வழங்கி இருந்தது . இதுவரை காலமும் பல்கலைக்கழக வளாகத்தில் இராணுவம் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை இருந்தும் தற்காலத்தில் இடம்பெறும் பயங்கரவாத அச்சுறுத்தல்களிலிருந்து பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பை இராணுவம் உறுதி செய்யும் என்ற நம்பிக்கையிலேயே இச்சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது , 

இதனைத் தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கட்டிடத்தில் காணப்பட்ட தமிழீழ தேசிய தலைவரது புகைப்படம் மற்றும் முள்ளிவாய்க்கால் அவலங்களை குறிக்கும் பதாகைகள் காணப்பட்டதனை காரணம் காட்டி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் , செயலாளர் மற்றும் சிற்றுண்டிச்சாலை ஊழியர் கைது செய்யப்பட்டு 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் . பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டிய பொலிஸ் மற்றும் இராணுவத்தினரே அப்பாவி மாணவர்கள் மற்றும் ஊழியரினை கைது செய்தமை என்பது மன வேதனை அளிக்கின்றது . 

தற்போதைய அசாதாரண சூழ்நிலைகட்கு ISIS அமைப்பே காரணமாக உள்ளது . இச்சூழ்நிலையை காரணம் காட்டி அப்பாவி மாணவர்களினை பயங்கரவாதிகள் என சித்தரித்து கைது செய்தமையை கிழக்குப் பல்கலைக்கழக மாணவர் சமூகம் வன்மையாக கண்டிப்பதுடன் அவர்களின் எதிர்கால நலன் கருதி அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதனையும் இலங்கை அரசாங்கத்திடம் வேண்டி நிற்கின்றோம் . யுத்தம் முடிவடைந்த காலத்திலிருந்து பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இன , மத , மொழி பேதம் கடந்து ஒற்றுமையாகவே எமது கல்வி மற்றும் ஏனைய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் . 

நீண்ட காலத்திற்கு முன்பு வைக்கப்பட்ட புகைப்படத்தை காரணம் காட்டி அப்பாவி தமிழ் மாணவர்களை கைது செய்தமையானது மாணவர்களின் ஒற்றுமையினை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே காணப்படுகின்றது . செய்யாத தவறுக்காக கைது செய்யப்பட்ட அப்பாவி மாணவர்கள் மற்றும் ஊழியரின் விடுதலைக்கு பேதங்கள் கடந்து அனைவரும் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டும் என்பதனை வேண்டி நிற்கின்றோம் .
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News #Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Vavuniya  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.