நடுகல் வணக்க நிகழ்வு என்றால் என்ன??!!


யேர்மனியில் 0505.2019நடைபெற்ற நடுகல் வணக்க நாள் நிகழ்வில் மணிதம நேய செயல்ப்பாட்டாளர் திரு .ராஜன் அவர்கள் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்டார்.மாவீரர் வாரலாறுகள் எடுத்துரைத்தார் .இதில் முக்கிய விடயமாக நடுகல் வணக்க நாள் நிகழ்வு என்றால் என்ன ?? அதன் பொருள் என்ன?? என்பதனை விளக்கம் அளித்தார்.


மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எங்கள் சுதந்திரத்திற்கான வரலாற்று வேள்வியிலே தங்களை ஆகுதியாக்கிய எங்கள் நெஞ்சம் எல்லாம் நிறைந்திருக்கின்ற மாவீர்களை மீண்டும் ஒரு கணம் நினைவில் நிறுத்தி, அவர்களுடைய திருப்பாதங்களை வணங்கி, இன்றைய நடுகல் வணக்க நிகழ்வோடு உணர்வுபூர்வமாக இணைந்திருக்கின்ற என் தேசத்தின் உறவுகள் அத்தனை பேருக்கும் என்னுடைய மாலை நேர வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த மண்டபத்திலே இருக்கின்ற எங்களில் பலருடைய மனங்களிலே இந்த நடுகல் வணக்கம் என்றால் என்ன, இந்த நடுகல் வணக்க நிகழ்வு இங்கே எதனால் ஆரம்பிக்கின்றது, அதை ஏன் ஆனந்தபுரம் என்கின்ற  அந்த நெருப்பாற்று நீச்சல் பெரும் களத்தோடு ஒப்பீடு செய்யப்படுகின்றது,
 


உலக நாடுகளெல்லாம் மறைமுகமாகவும் நேரடியாகவும் இலங்கை அரசுக்கு தன்னுடைய முழுப்பலங்களையும் வழங்கி அந்தப் பலத்தைக்கொண்டு, எங்களுடைய ஆயுதப் போராட்டத்தை தோற்கடித்த அல்லது மௌனித்துப்போன அந்தப் பொழுதுகளோடு எதற்காக இந்த நடுகல் வணக்க நிகழ்வை ஒப்பீடு செய்கிறார்கள்,

இந்த நடுகல் வணக்க நிகழ்வு என்பது, 2009ம் ஆண்டிற்குப் பின்னர் தான் பிறந்தது ஒன்றா, என்ற பல்வேறு கேள்விகளோடு நாங்கள், பலர் இருக்கின்றோம்,    அதில் நான் உட்படவும் இருக்கலாம், நாங்கள் ஒரு அரும் பொருளை, அல்லது ஒரு விடயத்தை கையில் எடுக்கின்றபோது,  அதனுடைய விளக்கம், அல்லது அதனுடைய   உட்பொருள், அல்லது அதனுடைய கருப்  பொருள்  சார்ந்த தெளிவு. விளக்கம் எங்களிடம் இருக்கவேண்டிய தேவை இருக்கின்றது


ஏனெனில், நாங்கள் இங்கே மடியிலே வைத்திருக்கின்ற, குழந்தைகள் நாளைய எதிர்காலம் நோக்கி நகர இருக்கின்றவர்கள், அவர்களின் எதிர்கால நகர்விலே இந்தக் கேள்விகளுக்கான பதில் அவர்களிடம் இருந்தால் தான், அவர்கள் எங்கள் தேசத்தினுடைய விடுதலை விழுமியங்களை, எங்களினுடைய அறம் நெறி தவறாத போரியல் சார்ந்த விடயங்களை தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும், ஏன்,  தாங்கள் வாழ்ந்து  கொண்டிருக்கின்ற  இந்த ஜேர்மனிய தேசத்தவர்களாகிய தங்கள் பிறமொழி நண்பர்களிடமும்  விளங்கப்படுத்துகின்ற, எடுத்துச்சொல்லுகின்ற தேவைகள், பக்குவங்களை உருவாக்கலாம்.


இந்த நடுகல் வணக்க நிகழ்வு என்பது தமிழர்களினுடைய வரலாற்று பாரம்பரியங்களோடு தமிழ் மக்களின் பூர்வீக விழுமியங்களோடு ஒன்றித்திருக்கின்ற ஒரு விடயம். அது மன்னர்கள் காலம் தொட்டு அதற்கு பிற்பட்ட கால வழிமுறைகளிலும் இந்த, நடுகல் வணக்க நிகழ்வு என்பது இருந்திருக்கின்றது. நடுகல் என்பது ஒருவரினுடைய நினைவோடு அடையாளமிட்டு நடப்படுகின்றது. அந்த நடுகல்லுக்குரியவர், ஒரு வீரம் செறிந்தவராக  தன்னுடைய  நாட்டுக்கு  தன்னுடைய மக்களுக்கு, என தன்னை அர்ப்பணித்தவராக, இருப்பார். ஒரு வீரம் செறிந்த இனத்தினுடைய விடுதலையின் வேள்வியிலே தன்னை ஆகுதியாக்கிய மாவீர்ர்களினுடைய அடையாளங்களைக் கொண்டது.


அது சங்ககாலத்தில், சங்கம் மருவிய காலங்களில்,  தமிழ் மன்னர்களினுடைய தொழுகையோடு அது நீட்சியாக எங்களோடு இணைந்திருக்கின்ற ஒரு வரலாற்று அடையாளம். அதிலே குறிப்பாக தமிழ்நாட்டிலே அந்தப் பாரம்பரியங்கள், ஒரு அடையாளத் தொழுகையாக இருந்ததன் தொடர்ச்சியாக, நாங்கள் எங்கள் சங்ககால  இலக்கியங்களிலே படிக்கின்ற காலங்களில் கூட அந்த வழிமுறைத் தோன்றல்கள் இருந்திருக்கின்றது

எதிரியோடு போரிட்டவன் மாத்திரமல்ல, அங்கே  காளைகளோடு போரிட்டு காளைகளை அடக்குகின்ற வரலாற்று வீரம் செறிந்த விளையாட்டுகளில் உயிர் நீத்தவர்களினுடைய நினைவாக கூட ஒரு நடுகல்லை நட்டு, அதனை அர்ச்சிப்பதும், பூசைகள் செய்வதும், வழிபடுவதும், மஞ்சள் நீராட்டுவதும் விளக்கேற்றுவதும் அந்த நடுகல்லைச் சுற்றி வாள்களால் அல்லது கூரிய ஆயுதங்களால் வேலிகள் அடைத்து அதனைப் பாதுகாத்து. அவர்களே தங்களுடைய, அந்த கிராமத்தினுடைய, அந்த மண்ணினுடைய காவல் தெய்வங்களாக  கைதொழுத  வந்த அந்த வரலாற்று ஒழுங்கின் அடிப்படையிலேயே இந்த நடுகல் வணக்க நிகழ்வு என்பது எங்களோடு தொடர்ந்து வந்திருக்கிறது.


எங்களுடைய தாயக மண்ணிலே முல்லைத்தீவின் கற்சிலைமடுவில் இன்றும் கூட பண்டாரவன்னியனின் டுகல் இருப்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். அதனை நாங்கள் எங்கள் தாயகத்தினுடைய தாயக நிழலரசு எங்களோடு இருந்த காலத்தில் அந்த நினைவு நாளிலே, இந்த திடலிலே அதனை ஒரு விழாவாக,  நிகழ்வாக நடத்தி வந்ததை நாங்கள் அறிந்திருக்கிறோம்

இங்கே இந்த ஆனந்தபுரம் என்கின்ற பெரும் சமர்களத்தோடு அல்லது அதிலே வீரச்சாவடைந்த வீரமறவர்களோடு ன் இந்த நடுகல் ஒப்பீடு செய்யப்படுகின்றது, என்று கேட்டால் அதற்கு நாங்கள் மிகப்பெரும் விலை கொடுத்திருக்கின்றோம். உலக நாடுகள் எல்லாவற்றிற்கும் எதிராக நிமிர்ந்து நின்ற ஒரு தேசிய இனத்தின் பிள்ளைகளாக,  வீரம் செறிந்த தளபதிகளாக, மாவீர்ர்களாக, எப்போதும் சோரம்போகாத, யாரிடமும் இகழ்ச்சி காணாத, யாரிடமும் மண்டியிடாத மானத்தமிழர்களாக நிமிர்ந்து நின்று தங்கள் தியாகத்தை முன்னிறுத்தியவர்களினுடைய அடையாளம்


இன்றுவரை எத்தனையோ மாவீர்ர்கள், அவர்களை  மாவீரர்கள் என்ற தளத்திற்குள்ளே பதிவு செய்யமுடியாதவர்களாக இந்த இனம் ஏங்கி நிற்கின்றது.

அத்தகைய மிக உயர்ந்த விலைகொடுத்த மகத்தான மாவீர்ர்களினுடைய உருவங்களைத் தாங்கிநிற்கின்ற ஒரு அடையாளமாகத்தான், உங்கள் முன் நிமிர்ந்து நிற்கின்ற ஒரு அடையாள நடுகல்லாகத்தான் இதனை நாங்கள் மலர் தூவியிருக்கின்றோம்.  வெறுமனே, ஒரு துப்பாக்கி, துப்பாக்கிக்கு மேலே ஒரு தொப்பி என்கின்ற பார்வைக்கு அப்பால் எங்களினுடைய உறுதியை, எங்களினுடைய உறைவிடத்தை எங்களினுடைய ஓர்மத்தை எங்களினுடைய சத்தியத்தை, எங்களினுடைய அறத்தை, எங்களினுடைய நேர்மையை என எல்லாவற்றையும் முத்திரை பதிக்கின்ற ஒரு நடுகல்லாகத்தான் எங்கள் முன் நிற்கின்ற அது காட்சி தருகின்றது


ஆகவே நடுகல் வணக்கம்  என்பது வெறுமனே, ஆனந்தபுரத்திற்குச் சொந்தமானது அல்ல, வெறுமனே 2009ம் ஆண்டிற்குச் சொந்தமானது அல்ல. அது தமிழர்களினுடைய பாரம்பரியத்தோடு தொடர்புபட்டு வருகின்ற ஒருவிடயம்.


இங்கு நடுகல் வணக்கமாக 2009இற்கு பின்பு ஒரு அடையாளமிட்டு வணங்கவேண்டிய தேவை பிறந்திருக்கிறது எதனால் என்றால் இன்றும் மாவீர்ர்களினுடைய தளத்திற்குள்ளே, நாங்கள் பதிவுசெய்யப்படாத நூற்றுக்கணக்கான பலரது தியாகங்களைத்  தாங்கி நிற்கின்றோம், அவையெல்லாம், எங்களினுடைய நெஞ்சப் பகுதியிலேதான் இருக்கின்றது. அதனால் தான், அந்த மாவீர்ர்களினுடைய கூட்டு தியாகங்களை ஒன்றிணைக்கின்ற ஒரு மையமாக நாங்கள் அந்த நடுகல் என்கின்ற ஒரு வணக்க நிகழ்வை கையில் எடுக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்.


ஆகவே எங்கள் தேசத்தின் மடியில் இருக்கின்ற மாவீரன் பண்டாரவன்னியனின் வீரம் செறிந்த அந்த நடுகல்லைப்போன்று எங்கள் தேசத்தின் விடுதலைக்காக எங்கள், தேசியத் தலைவரின் வழிநடத்தலில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய ஆயிரமாயிரம் வீரமறவர்களினுடைய நடுகற்கள், மீண்டும் நிமிர்ந்தெழும், அவர்கள் எங்கள் அர்ச்சனைக்கும் பூசிப்பிற்கும் உரியவர்களாக மாறுவார்கள், அவர்களையே  எங்கள் காவல் தெய்வங்களாக நாங்கள் பூசிப்போம் என்ற அடையாளத்தின் பிரதிபலிப்பாகத்தான் நாங்கள் இந்த புலம்பெயர் தேசங்களிலே இந்த நடுகல் வணக்க நிகழ்வை கையில் எடுத்திருக்கின்றோம். ஆகவே இந்த மேலெழுந்தவாரியாக, சுருக்க கருத்தாக இந்த நடுகல் என்றால் என்ன என்பதை நாங்கள் பார்த்திருக்கின்றோம்.


இந்த நிகழ்வு எங்கள் பாரம்பரியங்களோடு தொடர்புபட்டிருந்தாலும் கூட நகர்ந்து செல்லப்போகும் எதிர்காலத்தினுடைய சிற்பிகளாக உங்கள் கைகளிலே இருந்து வளருகின்ற, அந்த பிள்ளைச் செல்வங்களுக்கு இந்த நடுகல் வணக்கம் தொடர்பான விடயங்களை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்


அவர்கள் தெளிவுள் பிள்ளைகளாக வளர்ந்துவரவேண்டும் என்பதுதான் மாவீர்ர்களும் கண்ட கனவுகளாக இருக்கும். இங்கே ருக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளுக்காகவும் அவர்களின் சுபீட்சமான வாழ்விற்காகவும் தான் நாங்கள் அந்த உயிர்களைத் துச்சமாக மதித்து சுட்டுவிரல் அசைகின்ற களம்நோக்கி அவர்கள் ஒரு சுதந்திர வீறுகொண்ட மனிதர்களாக, எப்போதும் தங்களை இந்த மண்ணுக்கு ஈகம் செய்கின்ற தற்கொடைக்கு தயாராக இருக்கின்ற, சதாகாலமும் விடுதலையை நேசிக்கின்ற நல்ல உள்ளங்களாக வாழ்ந்தார்கள் என்றால் அதற்கெல்லாம் சான்றாக இந்த நடுகல் வணக்க நிகழ்விலே நாங்கள் அவர்களை நினைத்துக்கொள்கின்றோம். இங்கே சகோதரி அவர்கள் குறிப்பிட்ட பல தளபதிகளினுடைய பெயர்களை நாங்கள் கேட்டோம்.


ஒரு நல் தேசத்தின் விடிவெள்ளியாக தலைவர் வழிநடத்தியபோது பக்க வேர்களாக பக்க கிளைகளாக படைக்கலங்களை வழிநடத்துகின்ற பெரும் தளபதிகளாக ஆற்றல் மிக்கவர்களாக அவர்கள் தான் அந்த மண்ணிலே நின்று ஒவ்வொரு திசைகளிலும் அரண்களை அமைத்து எதிரிக்கு முண்டுகொடுத்து போர்க்கலங்களை அமைத்து சீற்றத்தோடு சினத்தோடு விடுதலைத் தாகத்தை  உரமாக நெஞ்சிலே சுமந்து களமாடியவர்கள். அதனால் தான் நாங்கள் அவர்களினுடைய பெயர்களை, அவர்களினுடைய தியாகங்களை.அவர்களினுடைய அடையாளங்களை, இந்த நடுகல் வணக்கத்தின் ஊடாக தொட்டு நிற்கின்றோம்.   இந்த மாதம் தமிழ்தேசிய இனத்தைப் பொறுத்தவரையில், சிவப்பும் கறுப்பும் கலந்த ஒரு காத்திரமான மாதம்


மேமாதம்,நாங்கள் மூர்க்கத்தனமாக எழுர்ச்சி கொண்டதும் உலக நாடுகளெல்லாம் மூர்க்கத்தனமாக எழுந்து எங்களை அடக்கி ஒடுக்கியதும் இந்த மாதம். இந்த மாதத்திலே வடுக்கள், வலிகள், சுமைகள் ஏக்கங்கள் ஏராளம். யாரைத் தொலைக்கக்கூடாது என்று கனவு கண்டோமோ அவர்களைத் தொலைத்தோம். யாரை இழக்க்கூடாதென நாங்கள் கனவு கண்டோமோ அவர்களை இழந்தோம்


யாரிடம் மண்டியிடக்கூடாதென நாங்கள் மானப்போர் தொடுத்தோமோ அந்த எதிரியிடம் சரணாகதி நிலைமை வரை அல்லது உலக நாடுகளினுடைய யுக்திகளுக்குள் அகப்பட்டு நாங்கள் ஒரு மௌன நிலையை எட்டவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய பிரதிநிதிகளாகவும் இனத்தின் பிரதிநிதிகளாகவும் நாங்கள் மாறிக்கொண்டோம்

ஆகவே இந்த மாதம் வலியும் வேதனையும் எழுச்சியும் வீழ்ச்சியும் நிறைந்த ஒரு கனதியான மாதம். அந்த மாத்த்திலே இந்த நிகழ்வை நாங்கள் தொட்டுநிற்கின்றோம்.

குறிப்பாக இன்றைய நாள் 05. 05. 1976 தமிழீழ விடுதலைப்புலிகள், புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரிலே இருந்து  தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற ஒரு பேரெழுச்சி அடையாளத்தோடு முத்திரை பதித்துக்கொண்ட நாள்.   43 வருடங்களைக் கடந்து இந்த மண்டபத்திலே நாங்கள் அதைப்பற்றி கதைக்கவேண்டியவர்களாக இருக்கின்றோம்


ஆகவே விடுதலைப்போராட்டம் படிப்படியாக முன்னேறி பாய்ச்சலாக முன்னேறி, அரசியல் இராதந்திர இராணுவ சமநிலைகளிலே முழுமைபெற்று உலகங்கள் வியந்துநிற்கும் பார்வைகளினூடே நகர்ந்து, இன்றும் கூட உலக வல்லரசுகள் தங்களுடைய வறட்டுக் கௌரவத் திரைகளுக்குப் பின்னே இருந்து எங்கள் தலைவனுடைய மதிநுட்பங்களையும் ஆளுமைகளையும் ஆற்றல்களையும் வழிநடத்தல்களையும் போராற்றல்களையும் பகுப்பாய்வு செய்துகொண்டிருக்கின்ற ஒரு நிலையிலே தான் உலகம் எங்களுடைய தலைவரை வைத்திருக்கின்றது


ஆகவே அத்தகைய மாபெரும் தலைவரை நாங்கள் பேறாகப் பெற்ற ஒரு இனத்தின் பிரதிநிதிகள். தலைவர் அவர்கள் ஒவ்வொரு சூழலிலும், அது போர்ச்சூழலாக இருக்கலாம், சமாதானச் சூழலாக இருக்கலாம், இடைப்பட்ட சூழலாக இருக்கலாம், இன்றைய சூழலாக இருக்கலாம். எந்தச் சூழலிலும் நிதானித்துக்கொண்டு. எங்கள் மையங்கள் கரைந்துபோகாமல், எங்கள் இலட்சிய மையங்கள் கரைந்துபோகாமல்,  அடுத்த கட்ட நகர்வுக்கு நாங்கள் செல்வதற்காக தலைவர் அவர்கள் ஒவ்வொரு கணத்திலும் பொறித்துக்கொண்ட எழுத்துக்கள், கருத்துக்களாக  எங்கள் கைகளிலே இருக்கின்றது, எங்கள் மனங்களிலே இருக்கின்றது


ஆகவே நாங்கள் ஒவ்வொரு கட்டத்தில் இருந்தும் மீளெழுச்சி பெறவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஒண்றிணையவேண்டிய மக்களாக இருக்கின்றோம். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற உதிரித் தன்மைகளை உடைத்தெறிந்து நாங்கள் ஒரு கூட்டுறவுக்குள்ளே அடிசெல்லவேண்டியவர்களாக இருக்கின்றோம். இன்று எங்களுடைய தாயகநிலம் அதைத்தான் எங்களிடம் எதிர்பார்த்து நிற்கின்றது. அதைத்தான் சுட்டிநிற்கின்றது.


இன்று தாயகநிலம் சந்தித்திருக்கின்ற சில அவலங்களை நாங்கள் அறிந்துகொண்டிருக்கிறோம்.  ஒரு பௌத்தனும் கொல்லப்படாத தமிழினம் கொல்லப்படுகின்ற தாக்குதலை தென்தமிழீழத்திலும் இலங்கையின் தலைநகரிலும் நடத்தி முடித்திருக்கின்றார்கள். அதில் எங்களைச் சுரண்டுகின்ற செய்திகள் பல. அந்தச் செய்திகளைப் பற்றி ஆராய்வது தனித்துவமானது. அதை நாங்கள் கடந்து அடுத்த விடயத்திற்குள் செல்லாம் என நினைக்கிறேன்


எது எப்படி இருந்தாலும் உலகத்தினுடைய பூகோள அரசியல் நகர்வு உலக வல்லரசுகளினுடைய பூகோள அரசியல் நகர்வு என்பது எங்கள் முற்றங்களிலேதான் இப்பொழுது நடந்துகொண்டிருக்கிறது. அது சாதாரணமான ஒரு குண்டுவெடிப்பாக அல்லது குறிப்பிட்ட மக்கள் இறந்துவிட்ட இறப்பாக நாங்கள் அதைப்பார்க்கமுடியாது. பூகோள அரசியல் நலனை அடிப்படையாகக்கொண்ட உலக நாடுகளினுடைய ஏற்பாட்டில் ஒரு சிங்கள பௌத்த மக்களும் இறக்காத தமிழர்களை இறக்கவைக்கின்ற ஒரு தாக்குதல் நிகழ்ந்தேறியிருக்கிறது

இது இலங்கையும் இலங்கை அரசும் ஏலவே அறிந்திருந்த ஒரு விடயமாக பல ஆய்வுகளும் பல தர்க்கங்களும் பல வாதப்பிரதிவாதங்களும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றது. எது எப்படி இருப்பினும் இழந்திருப்பது தமிழ் மக்களையே. இன்றும் இழக்கப்பட்ட இடங்களையும் வெடிக்கப்பட்ட இடங்களையும் விட வட தமிழீழத்தினுடைய பகுதிகளிலே கூட்டுகாவல், சுற்றிவளைப்பு, பல்கலைக்கழக மாணவர் கைது, அந்த அடையாளம், இந்த அடையாளத்தை வைத்திருந்தார்கள் என்ற கருத்துக்களோடு கைதுகள், சிறைவைப்பு, பயங்கரவாத தடைச்சட்டம், அவசரகால தடைச்சட்டம், ஊரடங்குச்சட்டம் எல்லாமே அமுல்படுத்தப்பட்டு, மீண்டும் எங்கள் மக்கள் அடையாள அட்டைகளோடு உலாவுகின்ற ஒரு துர்ப்பாக்கிய நிலைக்குள்ளே எங்கள் தேசம் இன்று திரும்பியிருக்கிறது. 


ஆகவே காவலர்கள் அற்ற ஒரு தேசத்திற்குள் எவ்வாறு களவாணிகளும் காவாலிகளும் உள் நுழைவார்களோ அதைப்போன்று எங்கள் இனம் காவலர்கள் அற்ற ஒரு பகுதிக்குள் திறந்த வெளிச் சிறைக்குள் பல்வேறு சங்கடமான சூழலுக்குள் வாழவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலைக்கு நகர்ந்திருக்கிறார்கள். இதுவே எங்கள் தாய் மண்ணினுடைய தற்போதைய நிலைப்பாடு.


இவை எல்லாவற்றிற்கும் ஒரு ஜனநாயக பொறிமுறை வழியாக அல்லது உலகம் விரும்புகின்ற உலகம் ஏற்றுக்கொள்கின்ற உலகம் பரிந்துரைக்கின்ற ஒரு வழிமுறைகளுக்குள்ளே நாங்கள் நகரவேண்டிய ஒரு அறிவியல் பூர்வமானவர்களாக எங்களை மாற்றி அதிலிருந்து ஒரு பொறிமுறையைத் தொட்டு அதனூடாக நல்ல ஒரு சூழலை உருவாக்கவேண்டியவர்களாக இருப்போமேயானால் நாங்கள் எல்லோரும் ஒரு திரட்சிகொண்ட அறிவியல் திரட்சிகொண்ட சமூக எழுச்சிகொண்ட ஒரு மக்களாக நாங்கள் எழவேண்டிய தேவை இருக்கிறது.


நாங்கள் நிச்சயமாக எல்லோரும் ஒருமித்த சிந்தனையோடு ஒரு அணியிலே நிதானமாக ஒண்றிணைந்து அந்த தேசத்தின் தேவைகளை இந்த உலகங்கள் ஏற்றுக்கொள்ளுகின்ற ஒரு ஜனநாயக வடிவத்திலே நிகழ்த்தி முடிப்பதற்கு நாங்கள் எல்லோரும் முழுமையாக திடகங்கற்பம் கொள்ளவேண்டிய மக்களாக இருக்கின்றோம். நான் நினைக்கின்றேன், 


ஜேர்மனியில் இருக்கின்ற எல்லா வகையான அமைப்புகள், நிறுவனங்கள், கட்டமைப்புகள், தொண்டுஅமைப்புகள் எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு மாபெரும் பேரிணைவு மகாநாடு, அதாவது, முள்ளிவாய்க்காலின் பத்தாம் ஆண்டு நினைவுகளைச் சுமந்த ஒரு பேரிணைவு மகாநாடு, எதிர்வரும் 11ம் திகதி, யெசன் நகரிலே நடாத்துவதற்கு தமிழர் ஒருங்கிணைப்பு குழு முழுமையான திட்டமிடலைச் செய்திருக்கிறார்கள்.


இந்த மண்டபத்திலே இருக்கின்றவர்கள் உங்கள் பகுதிகளிலே இருக்கின்ற உள்ளுர் அமைப்புகள், அதாவது ஆலய பரிபாலன சபையாக இருக்கலாம். உங்களுடைய தமிழ்ச் சங்கங்களாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் உங்களுக்கு கிடைத்த அறிவித்தலின் பிரகாரம், எதிர்வரும் 11ம் திகதி அந்த பேரிணைவு மகாநாட்டோடு நீங்கள் இணைந்துகொள்ளவேண்டும். அங்கே, எங்கள் எல்லோரிடமும் கருத்துக்கள் இருக்கின்றது, எங்கள் எல்லோரிடமும் ஆற்றல்கள் இருக்கின்றது, எங்கள் எல்லோரிடமும் சிந்தனைகள் இருக்கின்றது, ஆனால் அவை எல்லாம் சிதறுண்டுபோய் அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கின்றது. 


நாங்கள் இந்த முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் கடந்துவந்த பத்து ஆண்டு இடைவெளிக்குள்ளே நாங்கள் எதனால் பலம் பெற்றிருக்கின்றோம், எதனால் சிதைந்திருக்கின்றோம், எதனால் சின்னாபின்னமாகியிருக்கின்றோம், எதனால் கூட்டிணைவிலிருந்து விடுபட்டிருக்கின்றோம்,  என்ற எல்லா கேள்விகளையும் அடிதட்டி எல்லா கேள்விகளையும் முன்வைத்து எல்லா கேள்விகளுக்குமான ஆக்கபூர்வமான பதில்களை ஆக்கபூர்வமான எண்ணங்களை கையில் எடுத்து அடுத்த நகர்விற்கு செல்லவேண்டிய மிகப்பெரும் மக்கள் பிரதிநிதிகளாகவும் நாங்களேதான் இருக்கின்றோம்.


ஆகவே எதிர்வரும் 11ம்திகதி யெசன் நகரிலே நடைபெற இருக்கின்ற அந்த பேரிணைவு மகாநாட்டிலே நீங்கள் எல்லோரும் கலந்துகொள்ளவேண்டும், அதனை, பொதுமக்களாக தனிப்பட்ட ரீதியாகவும் கலந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தைக் கொடுத்திருக்கின்றார்கள். 


ஒரு சிறந்த வாய்ப்பு, சிறந்த சந்தர்ப்பம், அந்த சிறந்த வாய்ப்பிலே நாங்கள் முழுமைபெறவேண்டும். அதிலுள்ள நல்ல எண்ணங்களை கையிலெடுத்து அடுத்த நகர்வைப்பற்றி திட்டமிடுவார்கள், வழிநடத்துவார்கள்,  வழிநடத்திச் செல்வோம். எம் தேசத்தின் விடியல் நோக்கிய பகாதைக்கு நாங்கள் எல்லோரும் எங்கள் எண்ணங்களை முன்வைப்போம், என்பதை இந்த இடத்திலே நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.


அதே போன்று மே 18, எங்கள் இனம் சந்தித்தித்துநின்ற  மிகப்பெரும் பேரவலத்தினுடைய அடையாள நாள். ஸ்சுலோம் நகரத்தினுடைய டாட்டாம் மைதானத்திலே நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அதிலே கூடுகின்றதைவிட இந்த வருடம் பத்தாவது ஆண்டை அடையாளப்படுத்தும் மக்கள் சக்தியாக திரட்சிகொண்ட மக்களாக அந்த மைதானத்திலே ஒன்றுசேர வேண்டும். உலக நாடுகள் எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். நாம் எமது விடுதலைசார்ந்த உணர்வுகளை இழந்துவிட்டோமா, தமிழீழ தேசம் என்கின்ற ஒரு தேசம்  தன்னுடைய அழிவை மறந்துவிட்டதா, நாங்கள் காவுகொடுத்த அத்தனை ஆன்மாக்களும் உறங்குகின்ற அந்த பலிபீடங்கள் உறக்கமடைந்துவிட்டதா, மக்கள் அடுத்த நகர்விற்குள் அதைக்கடந்து சென்றுவிட்டார்களா, என்ற பார்வை உலகப்பார்வையிலே இருக்கின்றது. 


நாங்கள் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வாழ்ந்தாலும் எவ்வளவு காத்திரமுள்ள வசதிகளைப் பெற்றாலும் நாங்கள் இழந்திருக்கின்ற வலிகளினுடைய கூட்டுணர்வைச் சொல்லுகின்ற மக்களாகத்தான் நாங்கள் இருக்கவேண்டும். ஆகவே முள்ளிவாய்க்காலை அடையாளப்படுத்துகின்ற இந்த பத்தாவது ஆண்டு, அந்த திடலிலே நாம் அனைவரும் கூடி எமது வலியை உரத்துச் சொல்லுவோம். 

எங்கள் வலிக்கான ஒரு பரிகார நீதியை இந்த உலகம் பெற்றுத்தரும்வரை நாங்கள் உறங்கமாட்டோம் என்கின்ற அடையாளத்தைச் சொல்லுகின்றவர்களாக நிற்கின்றோம். 

ஆகவே எனது அன்புக்குரிய மக்களே,

ஒரு பொறுப்பு வாய்ந்த விடயமாக 11ம்திகதி பேரிணைவு நிகழ்விலும் 18ம்திகதி முள்ளிவாய்க்கால் நினைவுத்திடலிலும் நாங்கள் ஒருமித்த சக்தியாக இணைந்து நாங்கள் இழந்துநிற்கின்ற உறவுகளுக்கான இழப்புகளையும் தொலைத்து நிற்கின்ற உறவுகளுக்கான பரிகார நீதியையும் பெறும்வரை எங்கள் உணர்வுகளில் இருந்து சோரம் போகவில்லை என்கின்ற ஒரு உண்மையை உணர்த்த தயாராகுவோம். 


இன்றுவரை எமது தாயக தேசத்தின் வீதியோரங்களிலே பிள்ளைகளைத் தேடியலைகின்ற பெற்றோர், காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி அழுகின்ற பெற்றோர்கள், தாங்களாகவே இராணுவத்திடம் ஒப்படைத்து இன்று வரை விடுதலை கிடைக்காத உறவுகளின் பெற்றோர்கள் அனைவரும் மனதிலே ஒரு நம்பிக்கையை வைத்துள்ளனர்.


நாங்கள் இங்கே போராடுகின்ற சமநேரத்திலே உலகப்பரப்பெங்கும் பரந்து வாழும் தாய்த்தேச உறவுகள் எங்களுக்காக குரல் கொடுப்பார்கள், தாங்கள் வாழுகின்ற அந்தந்த தேசத்தின் அரச பீடங்களிலே எங்கள் நீதியை வேண்டி கருத்துரைப்பார்கள், இதன் பயனாக ஒரு பலாபலன் கிடைக்கும்.  அதன் பலனாக எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு கிடைப்பார்கள், என்ற நம்பிக்கையை வைத்துள்ளார்கள். 


அவர்களின் நம்பிகைக்கு காத்திரமான மக்களாக,  அந்த நம்பிக்கையில் பங்கெடுக்கின்ற மக்களாக அந்த மக்களின் துயரிலே தோய்ந்து கொள்ளுகின்ற மக்களாக நாங்களும் மாறவேண்டும். அந்த மாற்றம்தான் எங்களையும் அவர்களையும் ஒரு அணிக்குள்ளே எப்போதும் நீர்த்துப்போகாத மையம் கரைந்துபோகாத ஒரு உணர்வின் கட்டுக்குள்ளே எங்களை வைத்திருக்கும். 


அந்த கட்டுப்பாடுதான் எங்களை, எங்கள் தேசத்தை எங்கள் மக்களின் நெருக்கடி வாழ்வை எல்லாவற்றிற்குமான ஒரு சுதந்திர ஊடகத்தை திறந்து தரும் என்கின்ற கருத்தை அறைகூவலாக விடுத்து எனது கருத்தை நிறைவுசெய்து கொள்கின்றேன்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

Powered by Blogger.