வடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களை எவராலும் பிளவுபடுத்த முடியாது -என்.எம்.அப்துல்லாஹ்!!

கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஐ.எஸ்.ஐ.எஸ்குண்டுத் தாக்குதல் குறித்து விளக்கமளிக்கும் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் விசேட ஊடகவியலாளர் மாநாடு 2019.05.25 மானிப்பாய் வீதி மொஹிதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது. குறித்த மாநாட்டின் போது கலந்து கொண்ட அப்துல்லாஹ் அவர்கள் யாழ் மாவட்ட பொது சிவில் அமைப்புக்கள் சார்பில் அங்கு கருத்துவெளியிட்டிருந்தார். அதன் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் குறிப்பிட்டதாவது.


நாட்டில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் தினத்தன்று கிறிஸ்த தேவாலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சகோதர உறவுகள் மீதும், நட்சத்திர விடுதிகளில் இருந்தவர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதலில் பழியான சகோதர உறவுகளுக்கு வடக்குமுஸ்லிம்களின் சார்பில் எமது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்வதோடு, அத்தாக்குதலை தாம்தான் மேற்கொண்டதாக பொறுப்பேற்றுள்ள  ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பினையும், அவர்களின் இப் பயங்கரவாதத் தாக்குதலையும் யாழ் கிளிநொச்சி முஸ்லிம்கள் வண்மையாக கண்டிப்பதோடு, எமது எதிப்பையும் உறுதிப்படக் கூறி நிற்கின்றோம்.

எந்தவொரு சமயமும் பயங்கரவாதத்தை ஆதரிப்பது கிடையாது. அதுபோல இஸ்லாம் மார்க்கமும் இதனை ஏற்றுக்கொள்ளவோ, ஊக்குவிக்கவோ இல்லை. மாறாக அன்பையும், சமாதானத்தையுமே எமது மார்க்கம் போதிக்கின்றது.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாடுகளையும், அவர்களது கொள்கைகளையும், முஸ்லிம்களாகிய நாம் ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் அவர்களிற்கு எதிரானவர்கள் என்பதை பதிவு செய்து கொள்கின்றேன்.

இன்றய மாநாடு விசேடமாக ஊடகங்களின் செயற்பாடுகள் குறித்து எமது பார்வையை தெளிவுபடுத்துவதும் மிகமுக்கியமாகும். ஏப்ரல் 21ஆம் திகதியின் பின்னர் பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் பல யாழ்ப்பாணம் முஸ்லிம்கள் குறித்து சில உறுதிப்படுத்தப்படாத செய்திகளையும், முரண்பாடாண செய்திகளையும் வெளியிட்டிருந்தமை கவலையளிக்கின்ற விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் சிறுபான்மை மக்களாக இருக்கின்ற நாம் தமிழ் மக்களோடு இணைந்து ஒற்றுமையாக, ஐக்கியமாக வாழவே விரும்புகின்றோம். ஆனால் சில இனவாத ஊடகங்களின் செயற்பாடுகள் தமிழ் - முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் பிரிவுகளையும், பிளவுகளையும் உருவாக்கவே விரும்புகின்றனர். யார் நினைத்தாலும் எந்த சந்தர்ப்பத்திலும் வடகிழக்கில் உள்ள தமிழ்பேசும் மக்களை எவராலும் பிளவுபடுத்த முடியாது என்பதில் நாம் ஆணித்தரமாக உறுதிபட கூறிவைக்க விரும்புகின்றேன். ஊடகங்கள் உறுதிப்படுத்தப்படாத இனக்குரோதங்களை ஏற்படுத்துகின்ற செய்திகளை பிரசுரம் செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

எனவே குறிப்பிட்ட குழுவினர் செய்த இவ்வாறான இழிவான கீழ்த்தரமான செயலைக் கொண்டு முழு முஸ்லிம் சமூகத்தையும் குறிவைத்து தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இதனை வண்மையாக கண்டிப்பதோடு, மேலும் இனிவரும் காலங்களில் தமிழ் - முஸ்லிம் சமூகம் இரு தரப்பிலிருந்தும் இன ஐக்கியத்திற்கும் ஒற்றுமைக்கும் வழிசெய்கின்ற வகையில் நல்லிணக்க செயற்பாடுகளை முன்புபோல் செயற்படுத்த வேண்டும்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டவர்கள் கைது செய்யப்படுகின்ற பொழுது செய்தி போடுவதற்கு முந்தியடிக்கும் தமிழ் ஊடகங்கள் சில விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டாலோ அல்லது பிணையில் விடுதலையானாலோ அது குறித்து செய்தி வெளியிடுவதில்லை. இது குறித்த இனத்தை தவறாக சித்தரித்து இன முறுகலை ஏற்படுத்தும் செயலாகும். அச்சுஊடகங்கள் ஊடாக கைது தொடர்பில் அறியும் மக்கள் அதன் வாயிலாகவே அதன் உண்மைத்தன்மையையும் விளங்கிக்கொள்ளும் வகையில் ஊடகங்கள் எதிர்காலங்களில் செயற்பட வேண்டும். ஊடகங்கள் தமது செயற்பாடுகள் தொடர்பில் தம்மை மீள் பரிசீலனை செய்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக யாழ் மாவட்டத்திலே முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களான யாழ் நகரம், சோனகதெரு, பருத்தித்துறை, நெய்னாதீவு, மண்கும்பான் மற்றும் சாவகச்சேரி போன்ற பிரதேசங்களை வேண்டுமென்றே குறிவைத்து சில ஊடகங்கள் குறிப்பிட்டுத்தாக்கி செய்தி வெளியிட்டிருப்பதானது எமக்கு மிகுந்த கவலையளிக்கின்றது. எமது உள்ளங்களில் உள்ள கவலைகளை ஊடகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த முஸ்லிம்களை தயவுசெய்து பயங்கரவாதிகளுடன் தொடர்படுத்தாதீர்கள். இச் செயற்பாட்டுடன் தொடர்புடையவர்களை ஒட்டுமொத்தமாக எல்லோரும் இணைந்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டணை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும். அதற்கு முஸ்லிம்கள் தயாராகவே இருக்கின்றார்கள்.

மேலும் யாழ் முஸ்லிம்கள் தமது செய்திகளுக்காக பிரத்தியேகமான ஊடகங்களை பயன்படுத்துவது கிடையாது. யாழ் முஸ்லிம்கள் ஆகிய நாம் தமிழ் ஊடகங்களையே நம்பியிருக்கின்றோம். எமது ஊடகங்களாக நாம் நம்பியிருக்கின்ற நீங்கள் எதிர்காலங்களில் முஸ்லிம் சமூகம் குறித்து வருகின்ற செய்திகள் குறித்து எமது உலமாசபையினருடனோ, சமூக அமைப்புக்களுடனோ, மக்கள் பிரதிநிதிகளுடனோ, கதைத்து கலந்துரையாடியதன் பின்னர் உண்மையான செய்திகளை பிரசுரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தங்களை நம்பியிருக்கின்ற எமது சமூகம் சார்பில் சமூகத்தின் பிரதிநிதியாக இத்தயவான வேண்டுகோளை முன்வைக்கின்றேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் இன்றய ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருக்கின்ற யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமாசபையின் ஏற்பாட்டில் நேற்றைய தினம் (24) பள்ளிவாயில்களில் நிதி சேகரிப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த நிதியானது ஈஸ்டர் தினத்தன்று தாக்குதலுக்குள்ளான எமது உறவுகளுக்காக கையளிக்கப்படயிருக்கின்றது. மேலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 31ஆம் திகதி யாழ்ப்பாணம் ஐந்து சந்தியிலே மதியம் 1.15 மணியளவில் முஸ்லிம்கள் பயங்கரவாதத்திற்கு எதிரானவர்கள் என்ற நிலைப்பாட்டை சர்வதேசத்திற்கு எடுத்துச் சொல்லும் 'பயங்கரவாதத்திற்கு எதிரான யாழ் முஸ்லிம்களின் எதிர்ப்பு அமைதிப் பேரணி' ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளிலும் கலந்து கொள்ளுமாறு ஊடகங்களுக்கு பொது அழைப்பு விடுக்கின்றோம்.

இறுதியாக சிறுபான்மை மக்களிற்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஒற்றுமையையும் எதிர்காலத்தில் முன்புபோல் மேலும் ஐக்கியப்படுத்த தொடர்ந்தும் முயற்சிப்போம் என்று குறிப்பிடிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் ஊடகவியலாளர் மாநாட்டில் யாழ் கிளிநொச்சி ஜம்இய்யத்துல் உலமா சபை உறுப்பினர்கள், உலமாக்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை விசேட அமசமாகும்.

என்.எம். அப்துல்லாஹ் - யாழ் முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதி
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.