மெல்லப் பேசு ....மின்னல் மலரே.... பாகம் 12!!

உனக்கு வலித்தால் 
எனக்கு உயிர் துடிக்கும். 
என் வானவில்லே
உன் வண்ணமெல்லாம் நானடி. 


ஆ....” என்ற சத்தத்தில் எண்ணங்கள் அறுபட அவசரமாக எழுந்துகொண்டான் வெற்றி. கனிமொழிதான் கத்தியிருக்க வேண்டும். மணற்பிட்டிக்கு அருகில்தான், சமையல் கூடமும் கனிமொழியின் படுக்கை இடமும் இருந்ததால், சட்டென்று உள்ளே ஓடினான். அவள் வலியில் துடித்துக்கொண்டே அருகில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையைத் தூக்கமுற்பட்டாள்,  
“என்ன.?.. என்னாச்சு கனி?” அவன் கேட்க, அவள் வலியுடனே, “ஏதோ கடிச்சிட்டுது, பயங்கரமா வலிக்கிது, அனந்துவை தூக்கித்தாங்கோ, இந்தப்பக்கமாத்தான் ஓடினது,” என்றாள். 

அதற்குள் அப்பாவும் வந்துவிட, குழந்தையும் விழித்து பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டான். அனந்திகனை தந்தையிடம் கொடுத்துவிட்டு, பாயைத் தூக்கிப் பார்த்தான், பெரியதேள் ஒன்று அசைந்தது அவளது பாயின் கீழே. அவன், ‘எதனால் அடிப்பது‘ என யோசிக்க, தந்தையோ, வெளியே ஓடிச்சென்று, செருப்பை எடுத்துவந்து அதை அடித்துவிட்டு, நிமிர்ந்தார்.  அவசரமாய் அவளைப் பற்றியவன், “வாங்கோ...ஆஸ்பத்திரி போகலாம்” என்றான்.

“இல்ல, மறிச்சுப்போடுவினம்... ”அவள் சொல்ல, 
“அது, மறிக்கமாட்டினம், வாங்கோ, ”என்றபடி அவளைத் தாங்கி நடத்திச்சென்றான். அவனது அருகாமையில் செல்வது ஒருமாதிரியாக இருந்தாலும் வலி ஒரு புறமும், இந்த நேரத்தில் அப்படி நடப்பது சரியல்ல என்பதாலும் பேசாமல் கூடவே நடந்தாள். 
வெளியே வந்து காரை எடுத்தவன், “அப்பா, அனந்துவை பாத்துக்கொள்ளுங்கோ, நான் ரவுணில காட்டிக் கூட்டிவாறன்,” என்றான். 


அவரும் தலையை ஆட்டி சம்மதித்ததுடன், “கவனம், கெதியா கொண்டு போ, பெரிய தேள், விசம் ஏறினா, ஆபத்து” என்றார்.
அவன் முன்னால் அமரவைக்க எண்ண, அவளோ அவசரமாய் பின்னால் சென்று, நின்று கொண்டாள். எதுவும் பேசாது பின் கதவைத் திறந்துவிட்டான் வெற்றி.  விரைந்தது கார், வலியில் முகத்தைச் சுழித்தபோதும் எதுவும் பேசவில்லை அவள். நேரம் செல்லச் செல்ல வலியில் துடிக்கத் தொடங்கினாள் கனிமொழி. அவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு வலித்தது. வைத்தியசாலையை நெருங்கவும் கனிமொழி வலியின் உச்சத்தில் மயக்கம் அடையவும் சரியாக இருந்தது.

அந்த தனியார் வைத்தியசாலை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. அவசரமாய் உள்ளே விரைந்து, படுக்கை வண்டிலுடன் பணியாளரையும் கூட்டிவந்து, அவளைத்  தூக்கி ஏற்றிவிட்டுப் பின்னால் விரைந்தான். அறையில் இருந்த வைத்தியருக்கு தகவல் பறக்க அவசரமாய் வந்த வைத்தியர், அவளைப் பார்த்துவிட்டு, அதிர்ச்சி அடைந்ததுடன் “கனி....கனி... கனி.... என்னம்மா?” என்றதும் விலுக்கென்று நிமிர்ந்தான் வெற்றி. 
‘தெரிந்த யாரோவோ, அல்லது அவளது கணவனோ?‘  வெற்றியின் சிந்தனை தாறுமாறாய் ஓடியது. வந்த வைத்தியரோ, அவசரமாய் எமர்ஜென்ஸிக்கு கொண்டுவரச் சொல்லிவிட்டு விரைந்து நடக்க, இவனும் பின்னால் ஓடினான். கூடவே சென்ற இவனைக் கண்டதும் நன்றாகப் பார்த்துவிட்டு, 
“இவங்க உங்களுக்கு? ”

மனை....வாயில் வந்ததை விழுங்கியபடி, “எங்கட வீட்டில இருக்கிறா, றிலேற்றிவ்” என்றான். 
“ஓ.......”எதுவும் பேசாமல், அவர், உள்ளே சென்று, அவளுக்கான சிகிச்சைகளில் மூழ்கிவிட யோசனையோடு எமர்ஜென்ஸி வாசலில் இருந்த கதிரை ஒன்றில் அமர்ந்துகொண்டான். 

சிகிச்சை நடந்து, ஒரு மணித்தியாலம் கடந்த பிறகுதான், அவனை உள்ளே வரச்சொன்னார்கள், மனம் பதற விரைந்து சென்றவன், எதைப்பற்றியும் யோசிக்காது அவளது கரங்களை இறுகப்பற்றிக் கொண்டான். பக்கத்திலிருந்த வைத்தியரைச் சங்கடமாய் பார்த்த கனிமொழி அவசரமாய் கரங்களை விடுவித்துக் கொண்டாள். 

அவனை நேராய் பார்த்த, வைத்தியர், “ஒரு நாளைக்கு வோர்ட்டில் நின்றுவிட்டுப் போகலாம்,” என்றதும், அவசரமாய் இடைமறித்த வெற்றி, “இல்ல டொக்ரர், சின்னக் குழந்தை, அம்மா இல்லாம இருக்கமாட்டான், பாக்க வேற ஆக்கள் இல்லை, அதனால கொஞ்ச நேரம் பாத்திட்டு அனுப்பினா நல்லது,” என்றான்.

“குழந்தையா? ”

வியந்துபோய் பார்த்த வைத்தியர், அவள் தலை கவிழ்ந்து கொண்டதைக் கண்டதும் யோசனையுடன் பார்த்தார்.  
அப்படியென்றால் நிச்சயமாக அது கனியின் கணவனாக இருக்கமுடியாது வெற்றி இப்படி நினைத்துக் கொண்டிருக்க,  
“அது... அது....”.கனிமொழி இழுக்கவும் “சரி சரி ...” என்று விட்டு அவளை நன்றாகப் பார்த்தவர், 
“நீங்க கூட்டிப்போகலாம்,” என்றதும் மெல்ல எழுந்து அமர்ந்து கொண்டாள். 

அவளைக் கைத்தாங்கலாக பற்றிக்கொண்ட வெற்றியிடமிருந்து மெல்ல கரங்களை விடுவித்தவள், “'நான் நடப்பன்” என்றாள்.
அப்போதுதான் வெற்றிக்கு வைத்தியர் அவளுக்குத் தெரிந்தவராயிற்றே என்ற எண்ணம் வந்தது. பில் கட்டப்போனபோது, தகவல்களை வாங்கிவிட்டு,  ‘டொக்ரர் பீஸ் வேண்டவேண்டாம் என்று சொன்னார்‘ என்றனர்.

திரும்பிப் பார்த்தான் வெற்றி, அவரும் அவர்களைத் தான் பார்த்துக்கொண்டிருந்தார். கனிமொழியின் முகத்தில் என்றுமில்லாத ஒரு புன்னகை கொட்டிக் கிடந்தது. 

'அப்படி என்றால் அவர் யாராக இருக்கவேண்டும்?‘ வினாக்கள் அவனுக்குள் உலாப்போக, சின்னக் கையசைப்புடன் புறப்பட்டுவிட்டான். காரில் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. வீட்டிற்கு வரும் போது மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo#Tanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.