ஆளுமையின் மறு உருவம் ஜவான் அண்ணா.!!

சமாதான நாடகம் நோர்வே தலைமையில் நடைபெற்ற காலமது.

புலத்தில் உள்ள தமிழர்களைத் தேடி போராளிகளும், போராளிகளைத் தேடி புலத்தில் உள்ளவர்களும் பயணங்களை மேற்கொண்டிருந்தனர்.


பேச்சுவார்த்தை, இசை நிகழ்ச்சி, சிகிச்சை, கல்வி ஏன் விளையாட்டுகளில் பங்கு கொள்வதற்கும் என பல நோக்கங்களுக்காக போராளிகள் வெளி நாடுகளுக்கு வந்தனர்.

மேற் சொன்ன நோக்கங்களில் ஏதோ ஒன்றை நிறைவேற்ற வெளிநாடு வந்த ஓர் மூத்த போராளியை புலத்தில் அன்று வசித்த தமிழுணர்வாளர் ஒருவர் தான் வேலை செய்த தொழிற்சாலை ஒன்றுக்கு அழைத்துச் செல்கிறார்.

அறைவெப்பநிலை பூச்சியத்துக்கு கீழே வைத்து ஏதோ பதனிட்டுப் பொதியிடும் தொழிற்சாலை. அந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்களே தாங்கமுடியாத குளிரான சூழல்.

அங்கே வேலை செய்பவர்களில் 60% மேற்பட்டவர்கள் தமிழர்கள்.

கோவில்கள்,பாடசாலைகள்,வைத்தியசாலைகள், மக்கள் குடியிருப்புக்கள் என எந்தவிதமான தயவு தாட்சன்யமும் இல்லாமல் சிங்கள அரசு தமிழினப்படுகொலையைச் செய்த காலத்தில் உயிர் பாதுகாப்புத்தேடிவர்கள் சிலர், வேறு சிலர் குடும்ப வறுமையை விரட்ட வேறு தெரிவின்றி புலம்பெயர்ந்தவர்கள்தான் அந்தத் தொழிற்சாலையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள்.

மைனஷ் வெப்பநிலையில் வேலை செய்யும் இடங்களில் என்னதான் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும்
முள்ளந்தண்டுப் பாதிப்பு உட்பட்ட சில நிரந்தர பாதிப்புக்கள் தவிர்க்க முடியாதவை எனத் தெரிந்தும் அவர்கள் அந்த வேலையைத் தெரிவு செய்ய வேண்டியர்களாக இருந்தார்கள்.

இவற்றையெல்லாம் நேரில் கண்ட சாட்சியமாக தாயகம் திரும்பியவர் வேறு யாருமல்ல எங்கள் தமிழீழ வானொலியின் பணிப்பாளர் மதிப்புக்குரிய மானமிகு தமிழன்பன் அவர்கள்.

“ஆளுமையின் மறு உருவம் ஜவான் அண்ணா…”என தமிழீழத்தவர்களால் போற்றப்படுபவர்.

தனது உயிரிலும் மேலாக தான் நேசித்த மக்களுக்காய் தாய்மண்ணில் களம் பல கண்டு கால் ஒன்றையும் அந்த நோக்கத்துக்காய் தியாகித்திருந்த
அவ்வீரனில் புலத்தில் உள்ள தமிழ்த்தாயின் பிள்ளைகள் படும்பாடுகள், துயர்கள் வெகுவாகப் பாதித்திருந்தது.

ஒரு நாள் வழமை போலப் போராளிகளைச் சந்தித்த அவர் ‘’தாய்நிலத்தில் உள்ள வளங்களின் விரையங்களைக் குறைத்து
சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்’’ என்ற தொனிப்பொருளில் உரையாடுகிறார்.

அப்போதுதான் புலத்தில் தான் கண்டவர்கள் சுமக்கும் பாரச் சிலுவைகள் குறித்தும் பேசுகிறார். குரல் சற்று தொண்டையில் சிக்கியது. அவர் கண்களில் சற்று நீர் திரையிட்டது. இரும்பு உருகுவதை யான் மட்டுமல்ல அங்கிருந்த பலரும் முதன் முதலில் கண்டார்கள்.

அந்த மண்டபமே அமைதியின் ஆழத்தில் உறங்கியிருந்த நேரத்தில் ஓர் போராளி திடீரென வெடித்து பின் விம்மி விம்மி அழுதாள்.

ஆம், தன் முகத்தில் கூடப் பெரிய விழுப்புண் தாங்கியிருந்த அவளால் புலத்திலும்
பாரச் சிலுவைகளைச் சுமப்பவர்களின்
துயரைத் தாங்கிக் கொள்ளமுடியவில்லை.

இந்த நேரத்தில் எனை கவிஞர் தூயவன் எழுதிய பின்வரும் வரிகள் முற்றுகையிட்டன.

“தாமரை இதழ்
மென்மை யென்பர்
இல்லை.

“தாமரையாள் மேனி
சிறப்பென்பர்.

இவர்கள்
போராளி மனம்
அறியார்”

உலகம் எமைப் புரிந்து கொள்ள முனையுமா..?

நன்றி

எழுத்துக்கள் மூலம் நினைவை பகிர்ந்தவர்.

தமிழீழ மருத்துவர் தணிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.