வாக்குப்பெட்டி அறையில் சிசிடிவி வேலை செய்யவில்லை: ஜோதிமணி!!
கரூர் மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவிக்கள் வேலை செய்யவில்லை என்று கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.
கரூர் மக்களவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கரூர்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையத்தில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்துக்கு துப்பாக்கி ஏந்திய மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவத்தினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டத்துக்கு உட்பட்ட 6 சட்ட மன்றத் தொகுதிகளின் வாக்குப்பெட்டிகளும் அங்கு தனித்தனி அறையில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
ஆனால் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்று தொடர்ந்து ஜோதிமணி குற்றம்சாட்டி வருகிறார். தமிழக கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜாராமன் ஏப்ரல் 25ஆம் தேதி கரூர் வாக்கு எண்ணும் மையத்தை ஆய்வு செய்து கூடுதல் பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில் மின்னணு வாக்குப்பெட்டிகள் உள்ள அறையில் இருக்கும் சிசிடிவிகள் சரியாக வேலை செய்யவில்லை என்று அந்த மையத்துக்குள் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் முகவர்கள் ஜோதிமணிக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
சிசிடிவி காட்சிகளின் நேரலை சரியாக இல்லை; நேரங்கள் மாறி மாறி வருகிறது; காலை 10.30 மணி என்றால் மதிய நேரமும், மதிய நேரம் என்றால் மாலை நேரம் காட்டியுள்ளது. தொடர்ந்து 10 நிமிடங்களுக்கு மேல் சிசிடிவி வேலை செய்யவே இல்லை என்று காங்கிரஸ் முகவர்கள் ஜோதிமணியிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு தொலைபேசியில் புகார் தெரிவித்துள்ளார் ஜோதிமணி. காங்கிரஸ் பிரமுகர்களுடன் நேற்று (மே 4) இரவு வாக்கு எண்ணும் மையத்துக்கு ஜோதிமணி சென்றுள்ளார். இதற்கு முன்னதாக கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜசேகர் நேரடியாக வாக்கு எண்ணும் மையத்துக்கு சென்று ஆய்வு நடத்தினார். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை